சென்னை, மே 8- தமிழ்நாட்டில் மின்னுற்பத்தி நிறுவு திறன் 3,267 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தினசரி மின்தேவை அதிகரித்து வருவதால், அதைப் பூர்த்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் தனது மின்னுற்பத்தி திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, அனல், நீர், சூரியசக்தி, எரிவாயு மற்றும் காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்னுற்பத்தி நிறுவு திறனை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது அனல்மின் உற்பத்தி நிறுவு திறன் 1,959 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இதில் இருந்து 1,709 மெகாவாட் திறன் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.
தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம்
இதேபோல், எரிவாயு மூலம் மின்னுற்பத்தி செய்வதற்கான நிறுவு திறன் 1,027 மெகாவாட்டாக உள்ளது. இதில் இருந்து 524 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 503 மெகாவாட் மின்சாரம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கிறது.
இதேபோல், காற்றாலை, சூரியசக்தி உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்ஆற்றல் 25,290 மெகாவாட்டாக உள்ளது. இதில், காற்றாலையில் இருந்து 11,739மெகாவாட்டும், சூரியசக்தி மூலம் 10,153 மெகாவாட்டும் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.
இவை தவிர, நீர்மின் நிலையம் உள்ளிட்ட பிற மின்னுற்பத்தி நிலையங்கள் மூலம் 2,178 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தி நிறுவு திறன் கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 39,805 மெகாவாட்டில் இருந்து 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக, ஒன்றிய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி திறன் 3,267 மெகாவாட் அதிகரிப்பு

Leave a Comment