சென்னை, மே 8 – சென்னை அண்ணா அறிவாலயத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 3000 பேர் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று முன்தினம் (6.5.2025) தி.மு. கழகத்தில் இணைந்தனர். இணைந்த வர்களை வரவேற்று தி.மு.கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில் “திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி வீடு வீடாக திண்ணை தோறும் சென்று பரப்புரை செய்யுங்கள்” என்று குறிப்பிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:
நானும் டெல்டாகாரன்தான்;
மண்ணின் மைந்தன்!
மண்ணின் மைந்தன்!
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்றைக்கு இணைந்திருக்கும் உங்களையெல்லாம் நம்முடைய மாவட்டக் கழகத்தின் செயலாளர் முறையாக வரவேற்றிருந்தாலும், தலைமைக் கழகத்தின் சார்பில், இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் மீண்டும் ஒருமுறை வருக வருக என்று வரவேற்கிறேன்.
தி.மு.கழகம் ஆட்சிக்காக தொடங்கப்பட்டதல்ல!
நம்முடைய நண்பர் முனைவர் தங்கபாண்டியன் அவர்கள் இங்கு பேசுகிறபோது, “எவ்வளவு ஆண்டு காலத்தை நான் வீணடித்துவிட்டேன். இன்றைக்கு நான் அந்த இயக்கத்தில் இருந்து விலகி, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர வந்திருக்கிறேன்” என்று அழுத்தம் திருத்தமாக, அதற்கான காரணங்களை எல்லாம் எடுத்துச் சொல்லி, பல ஆண்டு காலமாக தன்னுடைய அரசியல் வாழ்க்கையை வீணடித்து விட்டேனே என்று ஏக்கத்தோடு பேசினார். அவருடைய தந்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிமட்ட தொண்டராக இருக்கிறார்; ஆரம்ப காலத்தில் இருந்து இயக்கத்தில் தொண்டராக இருக்கிறார்; அவரோடு நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறபோது, அவர் அழுத நிலையை, இங்கே உணர்ச்சியோடு பேசினார். எனவே, இப்போதே நான் தி.மு.க.விற்கு ஒரு நல்ல பேச்சாளர் கிடைத்திருக்கிறார் என்று சொல்லுவேன். இதுபோல பல பேர் இங்கு இருக்கிறீர்கள். அதுவும் எனக்கு தெரியும்.
உங்களை நாங்கள் இன்றைக்கு அரவணைத்து, இந்த இயக்கத்தில் சேர்த்திருக்கிறோம் என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மக்களுக்கான இயக்கம். ஆட்சிதான் நம்முடைய லட்சியம் என்ற உணர்வோடு தொடங்கப்படவில்லை.
1949 இல் இந்த இயக்கத்தை, பேரறிஞர் அண்ணா அவர்கள் கொட்டும் மழையில் வடசென்னையில் இருக்கும் ராபின்சன் பூங்காவில் தொடங்கி வைத்த போது, அவர் சொன்னார், “இந்த இயக்கம் தொடங்கப்படுவது, ஆட்சிக்காக – பதவிக்காக அல்ல. ஏழை – எளியவர்க ளுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, விவசாயப் பெருங்குடி மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, அடித்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்காக, நெசவாளத் தோழர்களுக்காக, தொழிலாள நண்பர்க ளுக்காக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்காக இந்தக் கழகம் தொடங்கப்படுகிறது” என்று அறைகூவல் விடுத்து, இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இப்போது நம்முடைய ஆட்சி ஆறாவது முறையாகப் பொறுப்பேற்று நாளைய தினம் 4 ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது. 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறோம். இதன் பிறகு நடைபெறவுள்ள அடுத்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று, ஏழாவது முறையும் நாம்தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அதில் சந்தேகம் இல்லை.
நான் ஏதோ ஆணவத்தில் சொல்கிறேன் என்று நினைத்து விடாதீர்கள். ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் என்று, அந்தப் பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக சொல்லுகிறேன் என்று நினைத்து விடாதீர்கள். அதைத்தான், அண்ணா அவர்கள் இந்தக் கட்சியை தொடங்கியபோதே, ‘‘தி.மு. கழகம் ஆட்சிக்காக அல்ல; நாட்டு மக்களுக்காக” என்று சொன்னார்.
75 ஆண்டு கால திராவிட முன்னேற்றக் கழகப் பேரியக்கத்தில் இன்றைக்கு நீங்கள் எல்லாம் வந்து சேர்ந்திருக்கிறீர்கள் என்றால், இந்தியாவில் முதல் முதலில் ஆட்சி அமைத்த மாநில கட்சி நம்முடைய கழகம்தான்; இன்றைக்கு இந்தியாவிற்கே வழிகாட்டும் கட்சி யார் என்று கேட்டால், அதுவும் தி.மு.க.தான். இந்தியாவில் இருக்கும் முதலமைச்சர்களுக்கு எல்லாம் யார் வழி காட்டுகிறார்கள் என்றால், அதுவும் தமிழ்நாட்டில் இருக்கும் இந்த ஸ்டாலின்தான்; ஏன், ஒன்றிய அரசிற்கே வழிகாட்டுவது யார் என்று கேட்டால், இந்த மாநிலத்தின் நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான். அந்த அளவிற்கு இன்றைக்கு பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் தீட்டி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஆளுநர் என்ற பொறுப்பு இருக்கும் வரை மரியாதை கொடுக்கிறோம்!
உங்களுக்கு தெரியும், நமக்கு ஓர் ஆளுநர் வாய்த்தி ருக்கிறார். நான் அடிக்கடி சொல்வது என்னவென்றால், அவர்தான் தொடர்ந்து இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் நமக்கு நல்லது.
ஆனால், ஆளுநர் என்ற பொறுப்பு இருக்கும் வரை, அந்த ஆளுநருக்கு மரியாதையை கொடுக்கிறோம்.
இன்று உச்சநீதிமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுத் தந்திருக்கிறது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்று தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை – வாக்குறுதிகளை சொன்னது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அவற்றில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம்!
மீதம் இருக்கும் வாக்குறுதிகளையும் நிறைவேற்று வான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மை காப்போம் 48, கலைஞர் கனவு இல்லம் திட்டம், தோழி விடுதி, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, கலைஞர் கைவினைத் திட்டம் – இது போன்று பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
எனவே, இந்தச் சாதனைகளை எல்லாம் மக்களி டத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். மக்களுக்கு தெரியும். அதை நினைவுபடுத்த வேண்டும். மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். அவ்வாறு புரிந்து வைத்திருக்கும் மக்களுக்கு, சில கட்சிகள் – சில தலைவர்கள் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறார்கள். அந்தக் குழப்பத்தில் இருந்து அவர்களை சரி செய்வதற்கு நீங்கள் எல்லாம் பிரச்சார பீரங்கிகளாக மாற வேண்டும். பிரச்சார பீரங்கிகள் என்று சொன்னால், ஏதோ பேச்சாளராக வர வேண்டும் என்பது மட்டுமல்ல. அய்ந்து பேர், ஆறு பேர் ஒரு கிராமத்தில் வீடுவீடாக சென்று திண்ணை பிரச்சாரம் – தாய்மார்களிடத்தில் பேசுவது. ஏனென்றால் ஒரு முறைக்கு இரண்டு முறை சென்று பேசி, தி.மு.க. செய்திருக்கும் சாத னைகளை எல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். ஒரு முறைக்கு இரண்டு முறை சொன்னால் நிச்சயமாக எந்தக் காரணத்தை கொண்டும் அவர்கள் மறக்க மாட்டார்கள். ஏற்கெனவே மறக்காத சூழ்நிலையில்தான் இருக்கிறார்கள்.
நீங்கள் எல்லோரும்
துணை நிற்க வேண்டும்!
துணை நிற்க வேண்டும்!
ஏனென்றால் நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு நடைபெற்றிருக்கும் அனைத்துத் தேர்தல்களிலும் தி.மு.க.தான் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும். எனவே அந்த வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் உங்களை அன்போடு கேட்டுக் கொண்டு, இங்கே வருகை தந்து நம்முடைய இயக்கத்தில் சேர்ந்திருக்கும் நம்முடைய நண்பர்களை – சகோதரர்களை – சகோதரிகளை – தோழர்களை – உடன்பிறப்புகளை அத்தனை பேரையும் மீண்டும் ஒருமுறை வருக வருக வருக என்று வரவேற்று, என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை யாற்றினார்.