* அய்.அய்.டி. வனவாணி மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளியை மூடுவதா?
* ஆளுநர் தலையிட்டு கேந்திரவித்யாலயா பள்ளியாக மாற்றுவதா?
தமிழ் மாணவர்கள் அதிகம் படிக்கும் அய்.அய்.டி. வனவாணி மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளியை கேந்திர வித்யாலயா பள்ளியாக மாற்றி, மும்மொழியைத் திணிக்கும் பின்னணியில் ஆளுநர் இருப்பதாகத் தெரிகிறது. பச்சைத் தமிழர் காமராசர் ஆதரவோடு தொடங்கப்பட்ட பள்ளியை ஆதிக்கவாதிகளின் கைகளிலிருந்து தமிழ்நாடு அரசு மீட்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
1963 ஆம் ஆண்டு பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் வாழ்த்துதலோடு, ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர் – ஆசிரியர் சங்கங்களால் தமிழர்களின் குழந்தைகள் நலனுக்காக இரு மொழிக் கொள்கையுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் தற்போதைய அய்.அய்.டி. வனவாணி மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி.
இதைத் தொடர்ந்து வடநாட்டினர் நல னுக்காக 1964 ஆம் ஆண்டு கேந்திரிய வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியும் தொடங்கப்பட்டது.
அப்போது பெரும்பாலானவர்கள் தமிழர்களாக இருந்தபடியால், தமிழ்நாடு அரசின் மெட்ரிகுலேசன் கல்வித் திட்டப்படி இன்றும் அப்பள்ளி சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.
எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்பு களில் 4 பிரிவுகள் இருந்தன. 2023–2024 கல்வியாண்டில் 3 வகுப்புகளாகக் குறைக்கப்பட்டன. 2024–2025 கல்வியாண்டில் 2 வகுப்புகளாகக் குறைக்கப்பட்டன.
எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர்
சேர்க்கைக்குத் தடை
சேர்க்கைக்குத் தடை
2025–2026 கல்வியாண்டில் மேற்காணும் எல்.கே.ஜி.மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக் கிடை யாது எனவும், ஒன்றாம் வகுப்பில் புதிதாக மாணவர் சேர்க்கை கிடையாது எனவும் சுற்றறிக்கை பள்ளி நிர்வாகத்தினால் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் பள்ளித் தலைவர் (சேர்மன்) அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது..
எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான 8 காற்றோட்ட மான இயற்கை சூழலில் நன்றாக உள்ள வகுப்பறைகள் இம்மாதத்தில் தற்போது இடித்துத் தள்ளப்படவிருக்கின்றனவாம். எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் இருந்த கட்டடங்கள் இடம் தெரியாமல் இடிக்கப்படவிருக்கின்றனவாம்.
அய்.அய்.டி. ஆசிரியர்களோடு சேர்ந்து, வனவாணி மாணவர்களுடைய உயி ரோடு விளையாடி தற்காலிக பதவி நீக்கத்திலிருக்கும் பள்ளி முதல்வரையும், சில ஆசிரியர்களையும் ஆளுநர் இரவி அடிக்கடி அழைத்து, கூட்டம் நடத்தி, ‘‘வனவாணியில் 99 சதவிகித மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்களை ஹிந்தி படிக்க வைக்கவேண்டும் அல்லது ஹிந்தி தாய்மொழியாக உள்ள வர்களை அதிகம் சேர்க்கவேண்டுமென உத்தரவிட்டிருந்தார்’’ என்று கூறப்படுகிறது. அதற்காக ஒன்று முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வலுக்கட்டாயமாக ஹிந்தி புத்தகம் அளிக்கப்பட்டு மெட்ரிகுலேசன் பள்ளியில், மூன்றாவதாக ஹிந்தி மொழியைக் கட்டாயமாகப் படிக்கின்றனர். இது மாணவர்க ளுக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கிறது.
கட்டாய ஹிந்தி – தமிழ் நீக்கம்!
இதில் முக்கியமான செயல் என்னவெனில், 100 சதவிகிதம் தமிழ் மாணவர்கள் உள்ள யு.கே.ஜி. மாணவர்களுக்குக் கட்டாயமாக ஹிந்தி எழுத்துகள் கற்பிக்கப்படுகின்றன– தமிழ் கிடையாதாம்!
ஆர்.டி.இ.மூலம் 25 சதவிகித மாணவர்கள் இலவச கல்வி பெறுவதையும் ஆளுநர் விரும்பவில்லை என்றும், இதுதான் பள்ளியை மூடுவதற்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது. தமிழ் கற்பிக்கப்படவே கூடாது என ஆளுநர் கருதுகிறார் என்றுதானே பொருள்.
வரும் கல்வியாண்டில் எல்.கே.ஜி. மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் சேர்க்கை நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு வகுப்பாகக் குறைத்து, கடைசியில் வனவாணியை மூடிவிட்டு, கேந்திரிய வித்யாலயாவின் 5 ஆம் வகுப்புவரை வனவாணியில் மாற்றிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
எந்த நோக்கத்துக்காக இந்தப் பள்ளி திறக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தைக் குழி தோண்டிப் புதைக்க ஆதிக்கவாதிகள் கச்சைக் கட்டி இறங்கியுள்ளனர்.
காலை பிரார்த்தனைப் பாடல் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் மட்டும்தானாம்.
2500 மாணவர்கள் படித்த பள்ளி, 1600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகங்களில் தலையிட்டு, ஆதிக்கம் செலுத்திய ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது.
இப்போது தமிழர்கள் பெரும்பாலும் படிக்கும் மெட்ரிக்குலேசன் பள்ளியை மூடுவதில் ஆளுநர் காட்டும் ஆர்வம் புரிந்து கொள்ளத்தக்கதே!
தமிழ்நாடு அரசு தலையிட்டு, தமிழர்க ளுக்கான பள்ளியை மீட்கவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.5.2025