சென்னை, மே 6- சென்னை மாநகராட்சி சார்பில், மாநகர பசுமைப் பரப்பை அதிகரிக்க ஜூன் 5ஆம் தேதி முதல் மரக் கன்று நடவு பணிகளைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. மாநகராட்சி தரவுகளின்படி இம்மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 21 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள்தொகை 80 லட்சமாக உள்ளது. தினமும் சுமார் 15 லட்சம் பேர் சென்னைக்கு வந்து செல்கின்றனர்.
இங்கு சராசரியாக ஒரு சதுர கிமீ பரப்பில் 26 ஆயிரம் பேரும், வடசென்னை போன்ற பகுதிகளில் சில இடங்களில் ஒரு சதுர கிமீ பரப்பில் 65 ஆயிரம் பேரும் வசிக்கின்றனர்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக வழிகாட்டுதல்படி, மாநகரின் மொத்த நிலப்பரப்பில் 33.3 சதவீதம் பசுமைப் போர்வையுடன் இருக்க வேண்டும்.
அப்படியெனில், 426 சதுர கிமீ பரப்பளவு கொண்ட சென்னையில் 144 சதுர கிமீ (33 சதவீதம்) பரப்பளவுக்கு பசுமைப் போர்வை இருக்க வேண்டும். ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வன கணக்கெடுப்பு அறிக்கையில் சென்னை மாநகரில் 22.70 சதுர கிமீ (5.28 சதவீதம்) அளவே பசுமைப் போர்வை உள்ளது என குறிப்பிட்டுள்ளது. பெங்களூரு (6.81 சதவீதம்), டில்லி (12.61 சதவீதம்), ஹைதராபாத் (12.90 சதவீதம்), மும்பை (25.41 சதவீதம்) போன்ற நகரங்களின் பசுமைப் பரப்பை விட சென்னை மாநகர பசுமைப் பரப்பு குறைவான நிலையில் உள்ளது. கடலோர நகரம் என்பதால், சென்னையில் பசுமைப் பரப்பு குறைவாக இருப்பதின் தாக்கம் உணரப்படவில்லை.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் 33.3 சதவீதம் பசுமைப் பரப்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:
மாநகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்க, மாநகராட்சி மயானங்களில் காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் மயானத்தில் 500 மரக் கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மணலி மயானத்தில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதேபோல், அனைத்து மயானங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 12 அடி உயரம் வரை வளர்ந்த மரக்கன்றுகள்தான் நடப்பட்டு வருகின்றன.
அனைத்து பகுதிகளிலும் சொட்டுநீர் பாசன கட்டமைப்பு ஏற்படுத்தி, அதன்மூலம் மரக் கன்றுகளுக்கு நீர் பாய்ச்ச திட்ட மிடப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் மழைநீர் சேகரிப்பில் ஆர்வம் கொண்ட தன்னார்வலர்களுடன் இணைந்து, ஜூன் 5ஆம் தேதி (உலக சுற்றுச்சூழல் தினம்) முதல் தீவிர மரக்கன்று நடும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
இதில் ஆர்வம் உள்ள தொண்டு நிறுவனங்கள், 94450 71037 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். மரக்கன்று நடவுப் பணி தொடர்பாக விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அனைத்து இடங்களிலும் உள்ளூர் மரக்கன்றுகள் மட்டுமே நடப்படும். அதன்படி, ஆலமரம், அரச மரம், செண்பக மரம், வேங்கை, சிவப்பு சந்தனம், சந்தனம், மகா வில்வம், இலுப்பை, மகிழம், தேக்கு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட உள்ளூர் இன மரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாநகர மண் வகைக்கும், சாலைகளின் அகலத்துக்கும் ஏற்ப உள்ளூர் மர வகைகள் தேர்வு செய்து நடப்படும். பறவைகளுக்கு உணவளிக்கும் விதமாக இலந்தை, நாவல், அத்தி போன்ற பழ மரங்கள் மற்றும் கொடுக்காபுளி மரங்களும் நடப்பட உள்ளன என்று அவர் கூறினார்.