‘குடிஅரசு’ இலக்கும் பயணமும் (3)
ஆறாவது ஆண்டு
நமது “ குடிஅரசு” அய்ந்து ஆண்டு நிறைவு பெற்று ஆறாவதாண்டு முதல் மலராய் இவ்வாரம் வெளியாகின்றது.
“குடி அரசு”தான் ஏற்றுக் கொண்ட ஆரம்பக் கொள்கை யில் இருந்து சிறிதும் பின் வாங்காமலும் விருப்பு, வெறுப்புக்கு கொள்கைகளை மாற்றிக் கொள்ளாமலும் ஏதோ தன்னால்கூடிய தொண்டை மனப் பூர்வமாய் செய்து கொண்டு வந்திருக்கின்றது. அன்றியும், குடிஅரசானது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இது வரை மக்களிடம் செல்வாக்கும் மதிப்பும் பெற்று வந்ததுடன் நாளுக்கு நாள் முற்போக்கடைந்தும் வந்திருக்கின்றது.
ஏய்த்துப் பிழைக்கின்றவர்கள்
இவ்வாறாவது ஆண்டும் அந்தப்படி முடியும் என்கின்ற விஷயத்தில் நமக்கு அதிக நம்பிக்கை இல்லை. ஏனெனில், அது இனிச் செய்யக் கருதி இருக்கும் தொண்டானது கொஞ்ச காலத்திற்கு பாமர மக்களிடம் நமக்குள்ள செல்வாக்கையும், பணக்காரர்கள், பண்டிதர்கள், பெரிய அதிகாரிகள், பதவியாளர்கள் என்பவர்களிடம் நமக்கு உள்ள செல்வாக்கையும் இழக்க நேரிடுவதுடன் “குடிஅரசை” இதுவரை ஆதரித்து வந்தவர்களாக காணப்பட்டவர்களின் எதிர்ப்பையும் அனுபவிக்க வேண்டிய நிலையை கொண்டு வந்துவிடும் என்றே நினைக்கிறோம். அதாவது, நாம் சென்னைக்கு போகும்போது ஒரு தலையங்கத்தில் தெரிவித்ததுபோல “குடிஅரசு” பார்ப்பனர்களை வைது அவர்கள் செல்வாக்கை ஒழித்து பார்ப்பனர்களிடம் இருக்கும் உத்தியோகங்களைப் பிடுங்கிப் பார்ப்பனரல்லாதார் வசம் ஒப்புவிக்க மாத்திரம் ஏற்பட்டதல்ல என்றும், பாமர மக்களை ஏய்த்துப் பிழைக்கின்றவர்கள் எல்லோரையும் வெளியாக்கி மத இயலில் உள்ள மூட நம்பிக்கையை ஒழிக்க முயற்சிப்பது போலவே அரசியல், உத்தியோக இயல், பொருளாதார இயல், சமுக இயல், பத்திரிகை இயல், பண்டித இயல், வைத்திய இயல், பணக்கார இயல், பார்ப்பனரல்லாதார் இயக்க இயல் என்பன முதலாகியவைகளில் உள்ள மூடநம்பிக்கைகளையும், புரட்டுகளையும் வெளியாக்கி, அவைகளையும் ஒழிக்க வேண்டிய வேலைகளை மேற்போட்டு கொள்ளும்போது இவ்வளவு இயல்களின் எதிர்ப்பும் நமக்கு மிக்க கஷ்டத்தை கொடுத்துதான் தீரும். சிற்சில சமயங்களில் அவ்வெதிர்ப்புகளைச் சமாளிக்க நமக்கு சக்தி இல்லாமல் போனாலும் போகலாம். அதனால் பத்திரிகை முற்போக்கும் செல்வாக்கும் சற்று, ஏன்? அதிகமாகவும் குறைந்தாலும் குறையலாம்.
ஆனபோதிலும், அவைகள் இந்நாட்டிற்கு அதிலும் பார்ப்பன ஆதிக்கம் குறைந்த இந்தச் சந்தர்ப்பத்திற்கு முக்கியமாய் தேவையானதாய் இருப்பதால் நமது செல்வாக்கையும், பத்திரிகை முன்னேற்றத்தையும் பிரதானமாய் கருதாமல் மக்களின் மூடநம்பிக்கைகளையும், சுயநலக்காரர்களின் புரட்டுகளால் மக்கள் ஏமாறுவதையும் ஒழிப்பதையே பிரதானமாய்க் கருதி அதில் இறங்கித் தீர வேண்டியவர்களாயிருக் கின்றோம்.
ஏனெனில், நாம் காங்கிரசிலிருந்து தொண்டாற்றிய காலத்தில் நம்முடன்கூட உழைத்து வந்த திருவாளர்கள் வரதராஜுலு, ராஜகோபாலச்சாரியார், திரு. வி.கல்யாணசுந்தர முதலியார் போன்றவர்களிடம் இருந்து நாம் பிரிந்ததும் அவர்களோடு அபிப்பிராய பேதங்கொண்டு சண்டை போட்டதும் எதற்காக? மற்றும் நாம் தலைவராய் கொண்டு கண்மூடித்தனமாய் பின்பற்றி வந்த திரு.காந்தியாரையும் கண்டித்து வருவது எதற்காக?
சொந்த விரோதத்திற்காகவா? அல்லது சொந்த சுய நலத்திற்காகவா? என்பதை யோசித்துப் பார்த்தால் உண்மைக் காரணம் விளங்காமல் போகாது. அவர்களது கொள்கை பிடிக்கவில்லை. அவர்களது தொண்டு நாட்டிற்கு நலந்தருவதல்ல வென்கின்ற காரணங்களையே முக்கிய ஆதாரங்களாய் வைத்து அவர்களோடு போராடி அவர்களிடம் நமக்கு காணப்படும் குறைகளை வெளிப்படுத்தி வந்தோம். இன்றும் வருகின்றோம் அதேபோல் இப்போது சுயமரியாதை இயக்கத்தின் பேராலோ, ஜஸ்டி;ஸ கட்சியின் பேராலோ, சீர்திருத்தத்தின் பேராலோ நம்முடன் உழைத்து வந்தவர்களின் அபிப்பிராய பேதத்தையும் அவர்களது கொள்கைகளால் நாட்டின் நலத்திற்கோ, நமது தொண்டிற்கோ விபரீதம் ஏற்படும் என்கின்ற நிலை தோன்றும்போது அவர்களுடன் போராட வேண்டியது நமது கடனாகி விட்டது. ஆகையால் இந்த ஆறாவது ஆண்டு பலருக்கு இன்பத்தை கொடுக்காதானாலும் நமது உண்மை நண்பர்களுக்கு பூரண திருப்தியையே அளிக்கும் என்கின்ற நம்பிக்கையின் மீது இறங்கி விட்டோம்.
– குடிஅரசு – தலையங்கம் – 04.05.1930
ஏழாவதாண்டு
நமது ‘’குடிஅரசு’’ தோன்றி ஆறாண்டு நிறைவு பெற்று ஏழாவதாண்டின் முதல் மலராய் இவ்வாரப் பதிப்பு வெளியாகின்றது. இந்தச் சென்ற ஆறாண்டுகளாய் குடிஅரசு நாட்டிற்குச் செய்து வந்த தொண்டைப் பற்றி இதன் வாசகர்களுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
இந்த நாட்டின் சமுதாய உலகத்திலும், மத உலகத்திலும், அரசியல் உலகத்திலும், இந்த வீசம் நூற்றாண்டில் ஏற்பட்டது மாறுதலுக்கு ஒரு சிறு அளவிலாவது “ குடிஅரசு தன்னை பொறுப்பாளியாக்கிக்” கொள்ளுவதில் யாரும் ஆட்சேபணையோ, பொறாமையோ பட மாட்டார்கள் என்றே கருதுகின்றோம்.
கடவுள் மறுப்பு
‘குடிஅரசி’ன் கொள்கைகளை ஆதி முதற்கொண்டு இதுவரையில் கவனித்து வந்த எவரும் சற்று மேல்நிலை யில் உள்ளவர்கள் அவற்றை “மிகவும் அதிதீவிரக் கொள்கை”யென்றும் “சாத்தியமற்றது என்றும்”, இது எந்தக் காலத்தில் நடக்கப் போகின்றது என்றும் கொள்கை சரி, போக்கு சரியல்ல, என்றும், “மிக வேகமாய் போகின்றது” என்றும், மற்றும் இதுபோன்ற பல மாதிரியாகவே சொல்லி வந்ததும், சற்று கீழ் நிலையில் உள்ளவர்கள் குடி அரசு கொள்கை “கடவுள் மறுப்பு” என்றும் “மதம் மறுப்பு” என்றும் சொல்லி வந்ததும். சற்று பணக்காரர்களாயிருப்பவர்களும் உயர்ந்த ஜாதிக்காரரென்று எண்ணிக்கொண்டு இருப்பவர்களும், குடி அரசு கொள்கைக் “கட்டுப்பாடு” இல்லை, “மேல்படி கீழ்படி” இல்லை, அத்து அடக்கம் இல்லை என்று சொல்லி வந்ததும், பண்டிதக் கூட்டத்தாரில் உள்ளவர்கள் குடி அரசுக்குக் கல்வியில்லை, ஆராய்ச்சியில்லை, இலக்கண இலக்கியம் தெரியவில்லை, ஆதலால் என்ன என்னமோ கண்டதெல்லாம் எழுதுகின்றது.
இதனால் சமயத்திற்கு ஆபத்து வந்துவிடும். சமய ஞானங்களுக்கும் சமயாச்சாரியார். வாக்குகளுக்கும் ஆபத்து வந்துவிடும் என்று சொல்லி வந்ததும், அரசியலில் இருந்தவர்கள் “குடிஅரசு” அரசியல் ஞானமற்றது. அதன் பிரச்சாரம் தேசிய உணர்ச்சிக்கு விரோதமாயிருக்கின்றதே என்று சொல்லி வந்ததும், மற்றும் இந்த மாதிரியாகவே தனித்தனி வகுப்பார்கள், பிரிவார்கள், சுயநல லட்சியவாதிகள் முதலிய கூட்டத்தார்களால் குற்றம் சொல்லவும், எதிர்ப்பிரச்சாரம் செய்து பாமர மக்களை குடி அரசுக்கு விரோதமாய் கிளப்பி விடவும் பல முயற்சிகள் நடைபெற்று வந்தது என்பதை நாம் மறுக்கவில்லை.
ஆனாலும் இதுவரை மேல் கண்ட எந்த மறுப்புக்காரர்களிலும் எவராவது ஒருவர் குடி அரசின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பற்றிய அபிப்பிராயத்தை எடுத்துக்கொண்டு விவகாரம் சொல்லி தர்க்கமாடி மறுத்து நியாயம் சொன்னதாக ஏற்படவில்லை என்பதை நாம் எடுத்துக் காட்ட சிறிதும் தயங்கவில்லை. ஆனால், குடிஅரசு பிரவேசித்தத் துறைகள் சாதாரணமாய் வேறு யாரும் பிரவேசிக்கக் கூடாதா, அவ்வளவு கஷ்டமான துறைகளில் புகுந்து வேலை செய்த முறையில், மேற்கண்ட சில்லறை சில்லறையான மறுப்புகளாவது அதிருப்திகளாவது, முணுமுணுப்புகளாவது வராமலிருக்கும் என்று எதிர்ப்பார்ப்பதும் நியாயமான காரியமாகாது என்பதையும் யாவரும் ஒப்புக் கொள்ளுவார்கள் என்றே கருதுகிறோம்.
‘குடிஅரசு’ பிரவேசித்த துறைகளில் அதாவது,
- பார்ப்பனர்
- அரசியல்
- மதம்
- கடவுள்
- வேதம், சாஸ்திரம், இதிகாசம், புராணம்
- சைவம், வைணவம் முதலிய சிறு சமயங்கள்
- காந்தியம்
- பண்டைய ஒழுக்கங்கள், முறைகள், மூடப்பழக்க வழக்கங்கள்
- செல்வ நிலைமை, முதலாளி – தொழிலாளி முறை
- ஆண், பெண் தன்மை
முதலிய துறைகளில் பிரவேசித்து அவைகளில் மக்களுக்குள் ஒரு பெரிய மனமாறுதலை உண்டாக்கியிருக் கின்றது என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. ஆனாலும் அதைச் சற்று விளக்குவதில் வாசகர்கள் சலிப்படைய மாட்டார்கள் என்று நினைக்கிறோம். அதாவது
பார்ப்பனர்
- பார்ப்பன விஷயம் இஃதான குடிஅரசு தோன்றுவதற்கு முந்தியே ‘பார்ப்பனர்கள் விஷயத்தில் பார்ப்பனர்’’ பார்ப்பனரல்லாதார் என்கின்றதான ஒரு கிளர்ச்சி இந்நாட்டில் இருந்தாலும் அது தப்பான வழியிலேயே தப்பான உத்தேசத்துடனேயே பொதுமக்களுக்கு பயன்படாத முறையில் போய்க் கொண்டிருக்கின்றது என்ற ஒரு குற்றம் சொல்லப்பட்டது யாவரும் உணர்ந்ததாகும். எப்படியெனில், இது விஷயமாக முந்திய கிளர்ச்சியின் கொள்கைகள் எல்லாம் பார்ப்பனியம் நல்லது. பார்ப்பனர்கள் தான் கெட்டவர்கள் என்று சிலரும், மற்றும் வைதிகப் பார்ப்பனர்கள் யோக்கியர்கள், அரசியல் பார்ப்பனர்கள்தான் அயோக்கியர்கள் என்று மற்றொரு சிலரும் கருதி இருந்ததோடு அக்கிளர்ச்சிக்காரர்கள் பெரிதும் உத்தியோகம், அரசியல் ஆகியவைகளில் உள்ள பார்ப்பனர்களை மாத்திரம் வெறுத்து பஞ்சாங்கம், பரிசாரக ஓட்டல்கார கோவில்மணி அடிக்கிற முதலிய பார்ப்பனர்களை வணங்கி சுவாமிகளே என்று கூப்பிட்டு அவர்கள் காலில் விழுந்து கும்பிட்டு அவர்களின் காலைக் கழுவின தண்ணீரைக் கூட சில மையங்களில் குடித்தும் வந்தார்கள்.
இந்தக் குணம் திருவாளர்கள் சர்.பி.தியாகராய செட்டியார், பனகால் அரசர், சர்.பாத்ரோ, தணிகாசலம் செட்டியார், முதலியவர்கள் உள்பட எல்லா பார்ப்பனரல்லாத தலைவர்கள் என்பவர்களுக்குள்ளும், ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்த திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் போன்ற அரசியல் வாதிகளுக்குள்ளும் இருந்து வந்தது என்பது யாவரும் அறிந்ததேயாகும்.
ஆனால், ‘குடிஅரசு’ தோன்றிய பிறகே இந்த மாதிரி எண்ணமானது அடியோடு மாறி இப்போது பொது ஜனங்கள் “எங்களுக்கு எந்தப் பார்ப்பனர்கள் மீதும் தனிப்பட்ட அதிருப்தியோ, வெறுப்போ இல்லை என்றும், அவர்களது பார்ப்பன தர்மமும், பார்ப்பன சடங்கும், பார்ப்பன ஆதிக்க சம்பந்தமான முறைகளும், ஆதாரங்களுமேதான் எங்களுக் குப் பிடிக்கவில்லை என்றும் அவைகளை விட்டு விட்ட, பாராட்டாத பார்ப்பனர்களிடம் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றும் சொல்லப் புறப்பட்ட தோடு பார்ப்பனியத் தன்மையுள்ள பார்ப்பனரல்லாதரிடமும் கூட இதுபோலவே வெறுப்பு ஏற்படும்படி செய்திருக்கின்றது.
ஆகவே இந்தத் துறையில் ‘குடிஅரசு’ அஸ்திவாரத்தி லேயே கையை வைத்து பார்ப்பனியத் தொல்லையை என்று மில்லாமல் போகும்படி வேலை செய்து வந்திருக்கின்றது. வருகின்றது. வரும்.
அரசியல்
- இதுபோலவே அரசியல் துறையிலும் ‘குடி அரசு’ தோன்றுவதற்கு முன் அரசியல் தலைப்பட்டிருந்த சில ஆட்கள் மீதும், அதன் பயனை அனுபவிக்கும் சில ஆட்கள் மீதும் மாத்திரமே சிலருக்கு சந்தேகமும் பொறா மையும் கொண்டு அரசியலின் மூலம் பிழைப்பை நடத்த உத்தேசித்திருக்கும் ஆட்களுக்குள் மாத்திரமே போட்டி போடுவதன் மூலம் அரசியல் துறையின் கிளர்ச்சிகள் நமது நாட்டில் நடந்து வந்தன. ஆனால், ‘குடிஅரசு’ தோன்றிய பின்னர்தான் “அரசியலிலுள்ள ஆட்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை. அதன் அடிப்படையான கொள்கையைப் பற்றியே கவலைக் கொள்ள வேண்டும் என்கின்ற உணர்ச்சியேற்பட்டு அரசியல் கொள்கைகளையே தலைகீழாய் மாற்றும்படியான நிலைமை உண்டாக்கியிருக்கின்றதுடன் அந்தப்படி அரசியல்காரரும் உணர்ந்து அவர்களையே பழைய கொள்கைகளைப் பற்றி பேச வெட்கப்படும்படி செய்து வருகின்றது. மேலும் காங்கிரஸ் விஷயத்திலும் குடிஅரசு தோன்றுவதற்கு முன் பொதுஜனங்களுக்குள் காங்கிரஸ் நல்லது. அதை நடத்துகிறவர்கள்தான் கெட்ட வர்கள் என்கின்ற உணர்ச்சி இருந்தது மாறி, குடிஅரசு தோன்றிய பின் காங்கிரசே நாட்டின் நலத்துக்கு மோசமானது. அது உத்தியோகத்திற்கும், அதிகாரத்திற்கும், பதவிக்கும் விண்ணப்பம் போடும் தபால் பெட்டி என்கின்ற உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டி வருகின்றது.
மதம்
3, மத விஷயத்திலும் ‘குடி அரசு’ தோன்றுவதற்கு முன் மக்களுக்கு மதமே பிரதானம் என்றும் இந்து மதமே உலகில் சிறந்த மதம் என்றும் பொதுமக்களுக்கும் இந்து மக்களுக்கும் இருந்து வந்த வெகுநாளைய உணர்ச்சிகள் மாறி இப்போது இந்து என்பதாக ஒரு மதம் உண்டா? அதற்கு ஏதாவது கொள்கைகள் உண்டா? என்கின்ற எண்ணம் மக்களுக்கு மதம் அவசியமும் என்கின்ற எண்ணமும் மதம் என்பது மற்ற வியாபாரங்களைப் போல் மக்களுக்கு ஒரு வியாபாரமும் மூடநம்பிக்கையுமானதல்லவா என்கின்ற எண்ணமும் ஏற்பட்டு மதத்தின் பேரில் வாழ்க்கையும் பெருமையும் அடைய கருதி இருக்கின்றவர்கள் இடமும் மூடர்களிடமும், தவிர மற்றவர்களிடம் அதற்கு யோக்கியதையே இல்லாமல் இருக்கும்படி செய்து கொண்டு வருகிறது, மதத்தை வெகுகாலமாய் அனுசரித்து பின்பற்றி வந்தவர்களும் தாங்கள் இதுவரை எவ்வித பலனும் அடையாமல் வீண் காலத்தை அதில் செலவிட்டு விட்டோமே என்று தாங்கள் ஏமாந்த தன்மையைப் பற்றி வருந்துப்படியாகவும் செய்து வந்திருக்கின்றது.
கடவுள்
- கடவுள் விஷயத்தில் குடிஅரசு தோன்றுவதற்கு முன் அதைப்பற்றி மக்கள் வெகுபிரதானமாகக் கருதி வந்தவர்கள் எல்லாம் குடிஅரசு தோன்றிய பின்பு அதனால் ஏற்பட்ட பெரும் பெரும் கிளர்ச்சிகளின் பயனாய் சிலருக்கு ‘கடவுள் உண்டோ இல்லையோ என்பதைப் பற்றி கவலையும் விசாரணையும் அனாவசியம்” ‘என்று கருதும்படியாகவும் சிலருக்கு “மக்களுக்கு உலகவாழ்க்கை சுலபமாய் நடை பெறுவதற்கு கடவுள் உண்டு என்கின்ற உணர்ச்சியுடன் இருப்பது நல்லது என்கின்ற முடிவுக்கு வரும்படியாகவும் மற்றும் அநேகருக்குள் கடவுளைப் பற்றிய கவலை ஏன் என்கின்ற எண்ணத்தையும் உண்டாக்கி விட்டதுடன் கடவுள் இல்லை என்று நினைத்துக் கொள்வதால் மனிதன் உலகத்தில் வாழ்வதற்கு தகுதியுடையவனாகத் தகுந்த அறிவு, பொறுப்பு தன்னம்பிக்கை குற்றம் உணர்தல் முதலிய அருங்குணங்கள் ஏற்படும் என்கின்ற ஒரு உணர்ச்சியையும் அநேகருக்கு உண்டாக்கி இருக்கின்றது.
வேதம், சாஸ்திரம், இதிகாசம், புராணம்
- வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் என்பவைகளும் குடிஅரசு தோன்றுவதற்கு முன் அவற்றிற்கு இந்நாட்டில் இருந்த பெருமைகள் எவ்வளவு என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. ஆகவே அவ்வளவு பிரமாத மான மதிப்புகள் அவைகளுக்கு இருந்த உணர்ச்சிகள் எல்லாம் இப்போது மாறி வேதம், சாஸ்திரங்கள் என்பவைகள் எல்லாம் ஒரு சாராரின் ஆதிக்கத்திற்கும், பிழைப்பிற்கும் ஏற்பட்டதென்றும், அவைகளுக்கு தாங்கள் கட்டுப்பட்டவர்கள் அல்லவென்றும், தங்களுக்கு அது ஆதாரங்கள் அல்லவென்றும், புராணங்கள் என்பவைகள் கட்டுக் கதைகள் ஒழுக்கத்திற்கும், உண்மைக்கும், இயற்கைக்கும் மாறுபட்ட, வெறுக்கத்தகுந்த புஸ்தகங்கள், அவை கீழ் மக்களால் பெரிதும் தொகுக்கப்பட்டவைகள் இதிகாசங்கள் என்பவை நடந்தவை அல்ல, மதிக்கத் தகுந்தவை அல்ல, பூஜிக்கத் தகுந்தவை அல்ல என்று பண்டிதர்கள் முதல் அநேக அறிவாளிகளும் பாமர மக்களும் வெளியில் தாராளமாய் சொல்லப் புறப்பட்டு விட்டதோடு. அவைகளில், ஒரு சிலவற்றை மாத்திரம் கலைகளுக்காகவும் அதாவது கவி அழகு, கற்பனை அழகு, இலக்கண இலக்கிய அழகு ஆகியவைகளுக்கும் மாத்திரம் அதுவும் அந்தக் கருத்துடனேயேதான் பார்க்கத்தக்கது என்கின்ற அளவுக்கு அபிப்பிராயம் சொல்ல வந்து விட்டது, புராணங்களைப் பற்றி, சாஸ்திரங்களைப் பற்றி பேசுவதற்கே மக்கள் வெட்கப்படும்படியான நிலையும் ‘குடிஅரசு’ கொண்டு வந்துவிட்டு விட்டது.
சைவம், வைணவம் முதலிய
சிறு சமயங்கள்
சிறு சமயங்கள்
- மற்றபடி சைவம், வைணவம் ஆகிய சமயங்களைப் பற்றியோ என்றால் ‘குடிஅரசு’ தோன்றுவதற்கு முன் அச்சமயங்களே எல்லா மக்களுடைய வாழ்க்கையின் லட்சியமாய் இருந்து தாண்டவமாடினதுடன் அவைகளே மக்களுக்கு செல்வமாகவும், செல்வாக்காகவும், கீர்த்தியாகவும், அழகாகவும், பெருமையாகவும், நாகரிகமாகவும் விளங்கியதோடு சமய ஆச்சாரிகளும், மடாதிபதிகளும் ராஜாக்களுக்கு சமானமாய் கருதப்பட்டு வந்தவைகள் எல்லாம் குடி அரசு தோன்றிய பின் அவைகள் சிரிப்பாய் சிரிக்கத் தகுந்த நிலைமைக்கு வந்து, சமய வேதமும், சமயப் பெருமையும் பரிசீலிக்க தகுந்த நிலைக்கு வந்து விட்டதுடன் அதனதன் கொள்கைகளுக்கும், சமய ஆச்சாரிகளுக்கும், சமய தெய்வங்களுக்கும் முன்பிருந்த மதிப்பற்றுப் புதிய புதிய தத்துவங்களைச் சொல்லி குடி அரசுக் கொள்கைகள் தான் எங்கள் சமயக் கொள்கைகள் என்பதற்காக வியாக்கியானம் செய்வதன் மூலம் அவை காப்பாற்றப்பட வேண்டிய நிலமைக்கு வந்து விட்டன மற்றும் ‘குடிஅரசு’ தோன்றுவதற்கு முன் இவை ஒன்றை ஒன்று வைது கொண்டு இருந்தவைகள் இப்பொழுது எல்லாவற்றையும் மறந்து எப்படியாவது எந்தக் கொள்கையுடனாவது சமயம் என்பதற்காக ஒன்று உயிர் வாழ்ந்தால் போதும் என்கின்ற நிலையில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
(தொடரும்