தடை விதிக்கப்பட்டு
2 ஆண்டுகள் ஆகியும்
2 ஆண்டுகள் ஆகியும்
ரூ.6000 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம்
புதுடில்லி, மே 3 கடந்த 2023,மே 19ஆம் தேதி உயர் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள் அந்த நோட்டுகளை வங்கிகளில் திரும்ப செலுத்தினர். அந்த நேரத்தில், புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாகும்.
அதன்படி இந்தாண்டு ஏப்ரல் 30ஆம் தேதி, 98.24 சதவீதம் நோட்டுகள் திரும்ப வந்து விட்டன. ரூ.6,266 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை. மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த ரூ.2000 ரூபாய் நோட்டுகளில் 98.24 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிக் கிளைகளில் டெபாசிட் செய்ய அல்லது மாற்றி கொள்ளும் வசதி அனைத்து வங்கி கிளைகளிலும் 2023 அக்டோபர் 7 வரை இருந்தது. அதன் பின்னர் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் அவற்றை மாற்றி கொள்ளவோ அல்லது டெபாசிட்டோ செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடுக்கடலில் நாகை மீனவர்கள்மீது தாக்குதல்
இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
கோடியக்கரை, மே 3 நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தங்கள் எல்லைக்கு வந்து மீன்பிடிப்பதாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதனைத் தடுக்குமாறு ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்தி கடிதங்கள் எழுதி வருகிறது. இந்நிலையில், நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்கரைப் பேட்டை, வெள்ளப்பள்ளம், மருதூர் கிராமங்களைச் சேர்ந்த 14 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் 4 மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெவ்வேறு இடங்களில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலானது மீனவ மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.