வெளிநாட்டில் உயிரிழக்கும் ஏழைத் தமிழர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி

3 Min Read

வெளிநாட்டில் உயிரிழக்கும்

ஏழைத் தமிழர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி

அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

சென்னை, மே 2 வெளிநாடுகளுக்கு சென்று உயிரிழக்கும் அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். பேரவையில் 29.4.2025 அன்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள்.

தமிழ்நாட்டில்25 இலங்கை தமிழர் முகாம்களில் கணினி வசதிகளுடன் கூடிய படிப்பகம் ரூ.49.87 லட்சத்தில் அமைக்கப்படும். அயலக தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்காக மருத்துவ சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும். உலகளாவிய தொழில் வாய்ப்புக்கு தமிழ்நாட்டை மேம்படுத்தும் விதமாக ‘டிஎன் ஸ்கில்ஸ் இண்டர்நேஷனல்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.  அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் ஒருவர் வெளிநாட் டுக்குச் சென்று உயிரிழக்கும் பட்சத்தில், வறிய நிலையில் உள்ள அவரது குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார் அமைச்சர் சா.மு.நாசர்.

புரட்சிக் கவிஞரின் பிறந்தநாளையொட்டி

‘தமிழ் வெல்லும்’ என்ற பெயரில் பல்வேறு போட்டிகள்

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, மே 2 புரட்சிக்கவிஞர் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் ‘தமிழ் வெல்லும்’ என்ற பெயரில் பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வாரமாகக் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மய்யம் வாயிலாக ‘தமிழ் வெல்லும்’ என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. போட்டிகளும் அவற்றுக்கான விதிமுறைகளும் பின்வருமாறு:

பேச்சுப் போட்டி: ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’, ‘உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!’, ‘பாரடா உனது மானிடப் பரப்பை!’, ‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்’, ‘ஒரு கதை சொல்லட்டுமா’ ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் படைப்புகள் காட்சிப் பதிவு அல்லது குரல் பதிவு அமைய வேண்டும். (3 நிமிடம்).

கவிதைப் போட்டி: ‘தமிழே! தமிழர் உயிரே!’, ‘வரிப் புலியே தமிழ் காக்க எழுந்திரு!’, ‘இனிமைத் தமிழ்மொழி எமது!’, ‘தமிழும் நானும்’ ஆகிய 4 தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் ஒரு பக்க அளவில் கவிதைகள் அமைய வேண்டும். கவிதைகளை பிடிஎப் கோப்பில் அனுப்ப வேண்டும்.

கட்டுரைப் போட்டி: ‘புதியதோர் உலகு செய்வோம்’, ‘துறைதோறும் தொண்டு செய்வாய்!’, ‘அறிவை விரிவு செய்!’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ ஆகிய தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 3 பக்க அளவில் கட்டுரை எழுதி பிடிஎப் கோப்பில் அனுப்ப வேண்டும்.

ஓவியப் போட்டி: புரட்சிக் கவிஞரின் கவிதைகள், காவியங்கள், நாடகங்களைக் கருவாகக் கொண்டு ஓவியங்கள் அமைய வேண்டும். ஓவியங்களை பிடிஎப் கோப்பாக அனுப்ப வேண்டும்

ஒப்பித்தல் போட்டி: பாவேந்தரின் ‘தமிழியக்கம் நூலிலிருந்து கரும்பு தந்த தீஞ்சாறே, ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் பாடல்களை பரிந்துரைக்கலாம். படைப்பு காட்சிப் பதிவு அல்லது குரல் பதிவு வடிவில் அமைய வேண்டும். (3 நிமிடம்). போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் படைப்புகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மே மாதம் 31-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *