சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப் பணியாளர்களுக்கான உதவிகளை, சலுகைகளைப் பட்டியலிட்டார் (28.4.2025).
- அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்வு (இதற்காக மட்டும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1252 கோடி தேவைப்படுகிறது). ஓய்வூதியக்காரர்கள், குடும்ப ஓய்வூதியக்காரர்களும் பயன் பெறுவர்.
- ஈட்டிய விடுப்பு நாள்களில் 14 நாள்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை வரும் அக்டோபர் ஒன்று முதல் செயல்பாட்டுக்கு வரும். (ஆண்டு ஒன்றுக்கு ரூ.3561 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்).
- அரசுப் பணியாளர்களுக்கு விழாக் கால முன்பணம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- அரசுப் பணியாளர்கள் ஆசிரியர்களின் குழந்தைகள் தொழிற்கல்வி பயில ரூ.ஒரு லட்சமாகவும், கலை மற்றும் அறிவியல் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு முன்பணத் தொகை ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
- திருமண முன்பணம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான முன்பணமாக இதுவரை பெண் பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம், ஆண் பணியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
- பொங்கல் விழாவுக்காக ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பரிசுத் தொகை ரூ. 500லிருந்து, ரூ.1000 ஆக உயர்த்தப்படும். (இந்த உயர்வால் 4 லட்சத்து 70 ஆயிரம் சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவர்).
- ஓய்வூதியர்களுக்கான விழாக்கால முன்பணம் ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ. 6 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்புக் காலம் தகுதிக்கான பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
இதனால் பதவி உயர்வின் போது பாதிப்பு ஏற்படுவதைக் கவனத்தில் கொண்டு அரசு பெண் பணியாளர்களின் மகப்பேறு மருத்துவ விடுப்புக் காலத்தை அவர்களின் தகுதிக்கான மருத்துவக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
- இதில் முக்கியமாக பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றியதாகும். இத்திட்டம் குறித்து ஆய்ந்து அறிக்கை அளிக்க அமைக்கப்பட்டுள்ள அரசின் குழு தனது அறிக்கையை செப்டம்பர் 30க்குள் அளிக்க அறிவுறுத்தப்படும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு இத்தகைய உதவிகள், சலுகைகளை அடுக்கடுக்காக முதல் அமைச்சர் அறிவித்துள்ளார்.
அரசுப் பணியாளர்கள் சமூகத்தில் ஒரு முக்கியமான அங்கமாகும். அரசுப் பணியாளர்கள் சமூகத்தில் சக மக்களின் பொருளாதார நிலையையும் கணக்கில் கொள்வார்கள் என்பதில் அய்யமில்லை.
தமிழ்நாடு அரசைப் பொருத்தவரையில் 2024-2025 நிதியாண்டின் நிலவரப்படி மொத்த கடன் கிட்டத்தட்ட ரூ. 9 லட்சம் கோடியாகும்.
இந்த நிதியாண்டில் ரூ.1.05 லட்சம் கோடி வரை கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
2024-2025ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ள கடன் தொகை ரூ.49,638 கோடியாகும்.
இவற்றை எல்லாம் அரசுப் பணியாளர்கள் உணராதவர்கள் அல்லர். மாநில அரசு ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் ஒரு ரூபாய் கொடுக்கிறது என்றால், ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு அளிக்கும் தொகை வெறும் 29 காசுகள் மட்டுமே.
பிஜேபி ஆளும் மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுப்பதும், பிஜேபி ஆளாத மாநிலங்களுக்குக் கிள்ளிக் கொடுப்பதும் இன்றைய ஒன்றிய அரசின் நடைமுறையாகும்.
அரசுப் பணியாளர்கள் ஒன்றிய அரசின் பாரபட்சத் தன்மையை எதிர்த்தும் குரல் கொடுக்க வேண்டும்.
இன்றைய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, ஜி.எஸ்.டி.யை எதிர்த்தவர் என்பதை மறந்து விடக் கூடாது. ஒன்றிய அரசு எங்களுக்குப் பிச்சை போடுகிறதா? என்று கேட்டவர்தானே!
அரசுப் பணியாளர்களின் சங்கத்தினர் இதுகுறித்து எல்லாம் எதிர்த்தும் குரல் கொடுப்பதோடு தீர்மான வடிவத்திலும் ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.
இன்றைய “திராவிட மாடல்” அரசு போன்ற அரசுப் பணியாளர்கள் மீது அக்கறை கொண்ட ஓர் அரசை இந்தியத் துணைக் கண்டத்தில் விரல் நீட்டி சுட்டிக் காட்ட முடியாது.
சமூகப் பொறுப்புடன் இதில் அரசுப் பணியாளர்களும், பொது மக்களும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
மற்ற மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மன நிறைவு கொள்ள ஏராளமான காரணங்கள் உண்டு என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.