சென்னை, ஏப்.29- ‘நீட்’ தேர்வு வருகிற 4-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு தொடர்பாக சந்தேகத்துக்கிடமாக தேர்வர்களை யாரும் அணுகினால் அவர்கள் குறித்து புகார் தெரிவிக்க தேர்வை நடத்தக்கூடிய தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தனி இணையதளத்தை தொடங்கி இருக்கிறது. அதன்படி, https://nta.ac.in அல்லது https://neet.nta. ac.in என்ற இணையதளங்களில் தேர்வர்கள் நீட் தேர்வு முறை கேடுகளில் ஈடுபடும் நபர்கள் குறித்த புகார்களை அடுத்த மாதம் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டு உள்ளது. முறைகேடுகளில் ஈடுபடும், தவறான வழிகாட்டுதலால் தேர்வர்களை ஏமாற்ற முயற்சிக்கும் நபர்களிடம் இருந்து தேர்வர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது. அதாவது, நீட் வினாத்தாள் இருப்பதாக அங்கீகரிக்கப்படாத இணையதளங்கள், சமூக வலைத்தள பக்கங்களில் வந்தாலோ, தேர்வை அணுகுவது தொடர்பாகதொடர்புகொண்டாலோ, தேசிய தேர்வு முகமை மற்றும் அரசு அதிகாரிகள் போல தேர்வர்களை தொடர்பு கொண்டாலோ இந்த இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருக்கிறது.