சென்னை, ஏப்.29 தமிழகத்தில் போதைப்பொருள், கஞ்சா விற்பனை விவாகாரம் தொடர்பாக நேற்று (28.4.2025) சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கும் காரசார விவாதம் நடந்தது.
சட்டப்பேரவையில் நேற்று (28.4.2025) காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர்.
போதை பொருள் விற்பனை
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: பொதுக்கூட்டம், மக்கள் பிரச்சினை களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுக்கிறது. காவல்துறைக்கு தெரியாமல் போதைப்பொருள், கஞ்சா விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை. சட்ட விரோத மதுபான விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் போதைக்கு அடிமையாகி சமூகவிரோத செயல்களில் ஈடுபடு கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: போராட்டம் நடத்த உரிய நேரத்தில் விண்ணப்பித்தால் காவல்துறை அனுமதி அளிக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் போதைப் பொருட்கள், குட்கா விற்பனை தலை விரித்தாடியது. நாங்கள் அதனை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்தோம். போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதாக ஒன்றிய அரசு அறிக்கை கூறுகிறது.
பழனிசாமி: அண்டை மாநிலங் களில் இருந்து ரயில்கள் வழியாக போதைப்பொருட்கள் கடத்தி வரப் படுகின்றன. உளவுத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டது. எதிர்க்கட்சிகளின் செயல்களைத்தான் அவர்கள் கண்காணிக்கின்றனர். கொள்ளையடிக்க ஏற்ற இடம் என்று கருதிதான் சென்னைக்கு விமானத்தில் வந்து கொள்ளை அடித்துச்செல்கிறார்கள். குற்றவாளிகளுக்கு தமிழ்நாடு என்றால் பயமும், அச்சமும் வரவேண்டும்.
குட்கா விற்பனை
அவை முன்னவர் துரைமுருகன்: திமுக ஆட்சியில் ரவுடிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர்: கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி களை காவல்துறையினர் விரைந்து கைதுசெய்தனர். உங்கள் ஆட்சிக் காலத்தில் காவல்துறைத் தலைவர் இயக்குநர் ஆகியோர் கூட குட்கா விற்பனையில் ஈடுபட்டது தெரியாதா? அதிமுக ஆட்சிக்காலத்தில் டில்லியில் இருந்து விமானத்தில் வந்து கொள்ளையடித்துச் சென்றது ஞாபகம் இருக்கட்டும்.
பழனிசாமி: போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. அண்ணா பல் கலைக்கழக மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். நாங்கள் 2026-இல் ஆட்சிக்கு வந்ததும் இந்த சம்பவம் குறித்து மீண்டும் விசாரிப்போம்.
முதலமைச்சர்: அண்ணா பல் கலைக்கழக மாணவி பாலியல் சம் பவத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். குற்றப் பத்திரிகையும் விரைந்து தாக்கல் செய்யப்பட்டது. இதை உயர் நீதிமன்றமே பாராட்டியுள்ளது. உங்கள் ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகள் எப்படி பாதுகாக்கப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு நடவடிக்கைகளில் தேசிய சராசரியைவிட தமிழ்நாடு அதிகம்.
சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்: திமுக ஆட்சியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு காரண மாக பெண்கள் தைரியமாக புகார் செய்கின்றனர். அதனால் போக்சோ வழக்குகள் அதிகம் பதிவாகி வரு கின்றன என்றார்.