பாளையங்கோட்டையில் ஆயுள் கைதியாக இருந்தவர் தோழர் மானமிகு அ.பக்கிரி முகம்மது; அவர் 1980 அக்டோபரில் நமது தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
”எனது பெருமதிப்பிற்கும், மரியாதைக் கும் உரிய மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு, மானமிகு தம்பி அ.பக்கிரி முகம்மது எழுதும் விவரம், வணக்கம்!
அய்யா, நான் ஆயுள் தண்டனையில் இருக்கிறேன். 12 வருஷம் ஆகிறது. அப்படி இருந்தும் பகுத்தறிவுப் பணிக்கு வேன் நிதிக்காக என்னால் முடிந்த அளவு ரூபாய் 15 அனுப்பி இருக்கிறேன். தாங்கள் பெற்றுக் கொண்டதற்கு உடன் கடிதம் எழுதுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன். விடுதலை இதழ் வந்து கொண்டிருக்கிறது. மிகவும் நன்றி!”
– அ.பக்கிரி முகம்மது,
சி.என்.ஓ.2640,
மத்திய சிறை, பாளை
12 வருடமாக சிறையில் இருக்கிறார் – அவருக்கு ‘விடுதலை’ கிடைக்கவில்லை; ஆனாலும், அவருக்கு நாள்தோறும் ‘விடுதலை’ (ஏடு) கிடைத்துக் கொண்டு இருப்பதைக் கண்டு மனநிறைவுப் பெறுகிறார்; மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
தலைவர் ஆசிரியரின் பகுத்தறிவுப் பணி வேன் நிதிக்காக சிறையிலிருந்த ஓர் ஆயுள் கைதி நன்கொடை அளித்து ஆனந்தம் அடைகிறார். அது ரூபாய் 15 அல்ல; பதினைந்தாயிரத்துக்குச் சமம்!
இத்தகைய தொண்டர்கள் இந்த இயக்கத்திற்கு இருக்கும்வரை எந்தக் கொம்பனாலும் இந்த இயக்கத்தை அசைத்துப் பார்க்க முடியாது. ‘அரோகரா’ போடும் அண்ணாமலைகள் நமது ஆயுள் கைதி பக்கிரி முகம்மதுக்கு முன்………… தூசு!
‘விடுதலை’க்கு சந்தா சேர்ப்பதாக இருந்தாலும், ‘தகைசால்’ தமிழர் தலைவர் ஆசிரியருக்கு ஊர்தி வழங்குவதாக இருந்தாலும், அவை எல்லாம் அவருக்காக அல்ல.
அய்யா விட்டுச் சென்ற பணிகளை வீறுகொண்டு தொடர்ந்து முடிப்பதற்காகத்தான்.
கருஞ்சட்டைத் தோழர்களின் எண்ணிக்கையை மட்டும் கொண்டு இந்தக் கழகத்தை எடை போட்டால், அவர்கள் ஏமாற்றத்தின் புழக்கடைக்குத் தள்ளப்படு வார்கள்.
பட்டை போட்ட தோழரும், கழுத்தில் கொட்டை கட்டிய தோழரும் தந்தை பெரியாரின் பற்றாளர்களாகப் பரிணமிப்பது ஏன்?
கடவுள் நம்பிக்கையாளர்களும், கடவுள் மறுப்பாளரான தலைவரைப் பார்த்து ”தந்தை பெரியார்” என்று தலைவணங்குவது ஏன்?
பார்ப்பனீய ஆதிக்க மிதியடியின்கீழ் நசுக்கப்பட்ட கோடானு கோடி ‘பஞ்சம’, ‘சூத்திர’ மக்களிடத்தில், பெண்கள் மத்தியில் தன்மானச் சூடேற்றி எரிமலையாக வெடிக்கச் செய்த வெண்தாடி வேந்தர் ஆயிற்றே!
கடலூர் ஞானியார் அடிகள் எப்படி ஈர்க்கப்பட்டார்? தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைவர் பெரியார் என்று தனி வணக்கம் செலுத்தியது ஏன்?
இதற்குள் அடங்கியிருப்பதுதான் – இது பெரியார் மண் – புடம் போட்ட திராவிட மண் என்பது!
கேலி பேசுபவர்கள் தங்களைத் தாங்களே கேலி செய்து கொள்கிறார்கள் என்று பொருள்; இழி மொழி பேசுபவர்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்கிறார்கள் என்று பொருள்.
சூத்திரன் என்றால், விபச்சாரி மகன் என்று எழுதி வைக்கப்பட்டுள்ள மனுதர்மத்தை கொளுத்திய வராயிற்றே – கொளுத்தச் சொன்னவராயிற்றே – தொடர்ந்து கொளுத்திக் கொண்டுதானே இருக்கிறோம்.
1953 இல் திருச்சியில் சில இடங்களில் பார்ப்பனக் கூலிகள் தந்தை பெரியாரின் உருவப் படங்களைக் கொளுத்தினார்கள்.
தந்தை பெரியாரிடம் அதுபற்றிச் சொன்னபோது என்ன சொன்னார்?
ஆத்திரப்பட்டாரா? கோபக்கனலைக் காட்டினரா? நகைத்தார்.
”என் படத்தைக் கொளுத்துவதற்கு நானே பணம் தருகிறேன்” என்ற தலைவராயிற்றே!
அந்தத் தலைவரைப்பற்றி தறுதலைகள் குரைக் கட்டும் – நமது கவனம் சிதறவேண்டாம்!
இப்பொழுது நம் எண்ணமெல்லாம் அதிகாரத்தைத் தம் கையிருப்பாய் வைத்துக்கொண்டோர், ஊடகங் களைத் தம் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண் டிருப்பவர்கள் ராமராஜ்ஜியத்தை உண்டாக்கத் துடிக்கிறார்கள்; ஒரே மதம்தான் இங்கே கோலோச்ச வேண்டும் என்று புலியாட்டம் போடுகிறார்கள்.
பாடத் திட்டத்தைப் பார்ப்பனமயமாக்குகிறார்கள் (உ.பி.யில் ‘பகாவான் கிருஷ்ணன்’பற்றி எம்.பி.ஏ., பட்டமாம்!), நீட்டைக் கொண்டு வந்து ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்டு தந்தை பெரியாரின் தொண்டால் தலைநிமிரும் தருணத்தில் அவர்களின் கழுத்தை நீட்டாக சீவிட முனைந்து விட்டார்கள்.
இந்த சதித் திட்டத்தை மக்கள்முன் கொண்டுசெல்ல வேண்டாமா?
91 வயதிலும் நம் தலைவர் ஊர் ஊராய் நாள்தோறும் நாள்தோறும் சுற்றிச் சுழன்று சூறாவளிப் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது – நியாயம் தானா?
”விடுதலை!”, ”விடுதலை!”, ”விடுதலை!” – ஆம் தந்தை பெரியார் தந்த அந்த பே(£)ராயுதம் தமிழர்கள் இல்லந்தோறும் பரவினால் அதன் பலன் பெரிது – மிகப்பெரிது!
அதனால்தான் ”’விடுதலை’ என்பது தமிழன் இல்லம் என்பதற்கான அறிவிப்புப் பலகை” என்றார் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
எல்லா வகைகளிலும் விடுதலை நம் இனத்துக்குத் தேவை என்றால், தமிழன் இல்லங்களில் எல்லாம் ‘விடுதலை’ ஏடு தேவை! தேவை!!
நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘விடுதலை’க்கு 50 ஆண்டு ஆசிரியர் என்ற காலகட்டத்தில், 50 ஆயிரம் சந்தாக்களைச் சேகரித்துக் கொடுத்தோம்.
60 ஆண்டு ஆனபோது, 60 ஆயிரம் சந்தாக்களைத் திரட்டிக் கொடுத்தோம் (2022 இல்).
சந்தாக்களின் காலம் நிறைவுறும் கட்டத்தில் இருக்கிறோம்.
அதைப் புதுப்பிப்பது மக்களின் சிந்தனைகளை மேலும் புதுப்பிப்பது அல்லவா!
கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில்,
”கழகத் தலைவர் ஆசிரியரின் 91 ஆம் அகவை தொடங்கும் இந்த காலகட்டத்திலும் தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பாதையில் தொய்வின்றி பயணம் தொடரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெரும் சாதனைகளில் ஒன்றான
61 ஆண்டுகள் ‘விடுதலை’யின் ஆசிரியர் என்கிற சாதனையைப் போற்றும் விதமாக துணைத் தலைவர் முதல் அனைத்து தலைமைக் கழக அமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் நூறு ‘விடுதலை’ ஆண்டு சந்தாக்களைத் திரட்டுவது என்னும் இலக்கோடு செயல்பட்டு தமிழர் தலைவரின் 91 ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக தமிழர் தலைவரின் பிறந்தநாளான டிசம்பர் 2ஆம் தேதிக்குள் வழங்குவது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை நிறைவேற்றிக் காட்டுவோம்! சந்தா புத்தகங்கள் தலைமைக் கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
(சென்னையில்) தமிழர் தலைவரின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளில் (2.12.2023) சந்தாக் களை ஆசிரியரிடம் அளித்து அகமகிழ வைப்போம்.
அவர் விரும்புவது – விரும்பிக் கேட்பது அது ஒன்றுதானே!
அதுகூட அவருக்காகவா? அய்யா கொள்கையை அவனியெங்கும் பரப்பிடத் தொண்டு செய்து கிடப் பதே எம்பணி என்பதை மூச்சுக் காற்றாகக் கொண்ட வராயிற்றே!
அடுத்த 15 நாட்களுக்கு நாம் விடும் மூச்செல்லாம் ‘விடுதலை’, ‘விடுதலை’ என்று முழங்கட்டும் – கால்கள் ஓடட்டும் – கரங்கள் வாங்கட்டும்.
‘விடுதலை’யால் பலன் பெறாத ஒரே ஒரு தமிழன் உண்டா? தமிழன் இல்லம்தான் உண்டா? நன்றிக் கடன் ஆற்ற அவர்கள் துடித்துக்கொண்டுதானே இருப்பார்கள்.
பயன்படுத்திக் கொள்வீர்!
பணியாற்றத்
தொடங்குவீர்!
தொடங்குவீர்!!
– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
பொறுப்பாசிரியர், ‘விடுதலை’