‘‘நீங்கள் என்ன பிராமண துவேஷியா? ஜாதி துவேஷியா?’’ ‘‘நான் கொசு வலை கட்டிக் கொண்டிருக்கின்றேன், அதனால் நான் கொசுத் துவேஷியா?’’ -பெரியார்
ஆஸ்திரேலியா, ஏப்.29 ஒருமுறை பெரியாரிடம் கேள்வி கேட்டார்கள், ‘‘நீங்கள் என்ன பிராமண துவேஷியா? ஜாதி துவேஷியா?’’ என்று. ‘‘நான் கொசு வலை கட்டிக் கொண்டிருக்கின்றேன் என்றால், கொசு துவேஷி என்று சொல்வீர்களா?’’ என்று பெரியார் கேட்டார். மலேரியா நோயை ஒழிக்கவேண்டுமானால், கொசுவை அழிக்கவேண்டும். அதேபோன்று ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றால், அது கடவுள் ரூபத்தில் வந்தாலும், அது சாஸ்திர ரூபத்தில் வந்தாலும், மற்ற எந்த ரூபத்தில் வந்தாலும் அல்லது அரசியல் ரீதியாக வந்தாலும், அதனை எதிர்க்கவேண்டும் என்ற உணர்வோடு திராவிடர் கழகம் பணி செய்துகொண்டிருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஆஸ்திரேலிய தமிழ்த் தொலைக்காட்சிக்குத்
தமிழர் தலைவரின் நேர்காணல்
தமிழர் தலைவரின் நேர்காணல்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆஸ்திரேலியா பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் சார்பில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டபோது, ஆஸ்திரேலியத் தமிழ்த் தொலைக்காட்சியின் நெறியாளர் திருமதி.ராதிகா நேர்காணல் கண்டார்.
அந்நேர்காணலின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
ஆணவக் கொலைகளும், ஜாதீய வன்முறைகளும் அண்மைக்காலமாக நிறைய நடைபெறுகின்றனவே!
நெறியாளர்: சீசா போன்று மேலே, கீழே போகும் சொன்னீர்கள்; இப்போது வலதுசாரி கருத்துகள் மேலே இருக்கின்ற காரணத்தினால்தான், தமிழ்நாட்டில் இடைநிலை ஜாதிகளுடைய ஆணவக் கொலைகளும், ஜாதீய வன்முறைகளும் அண்மைக்காலமாக நிறைய நடைபெறுகின்றன.
இதற்கான காரணம், வலதுசாரிக் கருத்துகள் மேலே இருப்பதுதான் காரணம் என்று நினைக்கிறீர்களா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? திராவி டர் கழகம் அதனை எப்படி மேற்கொள்ளப் போகிறது?
தந்தை பெரியார் அணுகுமுறை – புண்ணுக்குப் புனுகு பூசுவதல்ல!
தமிழர் தலைவர்: ஜாதி ஒழிப்பிற்காகத்தான் சுயமரியாதை இயக்கம் நூறாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
ஜாதி ஒழிப்பிற்காக, திராவிடர் கழகத்தின் அணுகுமுறை, தந்தை பெரியார் அவர்களு டைய அணுகுமுறை இருக்கிறதே, அது மேலெ ழுந்தவாரியாக புண்ணுக்குப் புனுகு பூசுவதல்ல.
மாறாக, நோய்நாடி, நோய் முதல்நாடக் கூடியது.
அப்படிப் பார்க்கும்போது, ஜாதிக்கு அடித்தளம் மிக முக்கியமானதாகும்.
பெரியார்தான் சொன்னார், ஜாதியை ஏன் ஒழிக்க முடியவில்லை என்றால், முதலில் வர்ணம், அந்த வர்ணத்தில் நாலாயிரம் ஜாதியை பிரித்துப் பிரித்து வைத்திருக்கிறார்கள். மெஜாரிட்டியாக இருப்பவர்கள், எதிரியாக இருக்கக்கூடிய உயர்ஜாதிக்காரர்கள், ஆதிக்கஜாதிக்காரர்கள் மூன்று சதவிகிதம்தான். மூன்று சதவிகிதமாக இருக்கக்கூடியவர்கள், 97 சதவிகிதமாக இருக்கக்கூடியவர்களை சந்திக்கவேண்டும்.
தனித்தனி ஜாதிகளாகப்
பிரித்து விட்டார்கள்
பிரித்து விட்டார்கள்
அப்படிச் சந்தித்தால், 97 சதவிகிதமாக இருக்கக் கூடியவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்பதினால், அவர்களைத் தனித்தனி ஜாதிகளாகப் பிரித்து விட்டார்கள்.
மொத்த எண்ணிக்கையில் 97 சதவிகிதம். ஆனால், 97-லிருந்து 9700 ஜாதிகளாகப் பிரித்து விட்டார்கள்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
புரட்சிக்கவிஞர் அவர்கள் அழகாகச் சொல்வார்,
‘‘‘ஓ’ என் சகோதரரே ஒன்றுக்கும் அஞ்சாதீர்!
நாவலந்தீவு நமைவிட்டுப் போகாது,
வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால்
சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்;
ஆகையால் எல்லாரும் அங்கே தனித்தனிதான்.
ஏகமனதாகிஅவர் நம்மை எதிர்ப்பதெங்கே?
பேதம் வளர்க்கப் பெரும்பெரும்பு ராணங்கள்!
சாதிச்சண்டைவளர்க்கத் தக்கஇதிகாசங்கள்!
கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக்
கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார்.
தேன் சுரக்கப் பேசிஇந்து தேசத்தைத்தின்னுதற்கு
வான்சூரரை விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார்.
இந்த உளைச்சேற்றை, ஏறாத ஆழத்தை
எந்தவிதம் நீங்கி நம்மை எதிர்ப்பார்? இன்னமும்,
சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத்
தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி
ஊறும் பகுத்தறிவை இல்லாதொழித்துவிட்டுச்
சாறற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக் குன்றவைத்துப்
பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கி யேஅந்தக்
கற்கள் கடவுள்களாய்க் காணப் படும்அங்கே.
இந்த நிலையிற் சுதந்தரப் போரெங்கே?
கொந்தளிப்பில் நல்லதொரு கொள்கை முளைப்பதெங்கே?
‘தேகம் அழிந்துவிடும், சுற்றத்தார் செத்திடுவார்;
போகங்கள் வேண்டாம்; பொருள் வேண்டாம் மற்றுமிந்தப்
பாழுலகம் பொய்யே பரமபதம் போ என்னும்
தாழ்வகற்ற எண்ணுங்கால் சாக்குருவிவேதாந்தம்.
சாதிப் பிரிவும் சமயப் பிரிவுகளும்,
நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும்,
மூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சிசெய்தே
ஓடச்செய்தால் நமையும் ஓடச்செய்வார் என்பேன்.’’
அதுபோன்று தனித்தனியாக வந்தவுடன், ஓர் ஆள் இருக்கிறான்; அரை சதவிகிதம் இருக்கிறது. ஆகவே, அவர்களைப் பிரித்தாளக் கூடியது.
Divde and Rule என்பதைத்தான் ஆரியம் மிக முக்கிய மாக அவர்களுடைய தத்துவ ரீதியாக இந்தி யாவைப் பொறுத்தவரையில், வேத கலாச்சாரம் என்பவை மூலமாக, ஜாதி, வர்ணத்தை நியாயப்படுத்துவதோடு, அகலப்படுத்திக் கொண்டே வரக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றார்கள்.
ஒரு மதத்தில் பல பிரிவுகள்; பல பிரிவுகளுக்குள்ளே உட்பிரிவுகள் என்று மதத்திலேயே இருக்கிறது.
அந்த மதத்திற்கே என்ன வரையறை என்று சொன்னால், கடவுளை நம்புகிறவர்களும் அந்த மதத்தில் இருக்கலாம்; கடவுளை நம்பாதவர்களும் இருக்கலாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, யார் வந்தாலும், அவர்களுடைய ஈர்ப்புகளுக்கு அவர்களை இழுத்துவிடுவது.
தனக்குத்தான் செல்வாக்கு இருக்கவேண்டும் என்று நினைத்தார்கள்
இப்படியெல்லாம் அவர்கள் வைத்திருக்கின்ற காரணத்தினால்தான், முதலில் ஜாதியை உருவாக்கிப் பிரித்துவிட்டார்கள். ஆனால், அந்த ஜாதியை உரு வாக்கிப் பிரிக்கும்போது, அதில் தனக்குத்தான் செல்வாக்கு இருக்கவேண்டும் என்று நினைத்தார்கள்.
மைனாரிட்டிகள் எப்போதுமே கட்டுப்பாடாக இருக்கிறார்கள். 97 சதவிகிதம் இருக்கின்ற பெரும்பான்மையானவர்களைத் தனித்தனியாகப் பிரித்து, 970 என்றும், 9700 என்றும் பிரித்தார்கள்.
ஆகவே, இவர்கள் குதிரை சவாரி செய்வதற்கு, ஆதிக்கம் செலுத்துவதற்கு வசதியாகப் போயிற்று.
அம்பேத்கர் சொன்ன
‘‘படிக்கட்டு ஜாதிமுறை!’’
‘‘படிக்கட்டு ஜாதிமுறை!’’
இதைத்தான் அம்பேத்கர் அவர்கள், ‘‘படிக்கட்டு ஜாதிமுறை’’ என்றார். மற்ற நாடுகளில் இருப்பது பேதம் மட்டும்தான். ஆனால், படிக்கட்டு ஜாதி முறை என்பது, ஒரு படி, அதற்கும்கீழே இன்னொரு படி, அதற்கும் கீழே இன்னொரு படி.
அழகாக இன்னொரு விளக்கமும் சொன்னார் அம்பேத்கர் அவர்கள்.
ஒரு பெரிய அய்ந்தடுக்கு மாளிகையை அழகாகக் கட்டி; அய்ந்தாவது மாடி மேலே ஒரு சமுதாயத்தினர்; நான்காவது மாடியில் இன்னொரு சமுதாயத்தினர்; இப்படி எல்லா மாடிகளிலும் ஒவ்வொரு சமுதாயத்தினர் என்றால், அந்த மாளிகைக்கு கதவே கிடையாது. மேலே இருப்பவர்கள் மேலேயே இருப்பார்கள்; கீழே இருப்பவர்கள் அங்கேயேதான் இருக்கவேண்டும். இதுதான் ஜாதிய முறை.
ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாற லாம். ஆனால், ஒரு ஜாதியில் பிறந்தவர்கள், சாகும்வரை அந்த ஜாதியில்தான் இருக்கவேண்டும் என்று சொல்லி, கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில், மூளை விலங்கு போடப்பட்டது.
பெரியார் சம்மட்டியால்தான்
உடைக்க முடியும்!
உடைக்க முடியும்!
கால் விலங்கு என்பது பொருளாதார பேதம்.
கை விலங்கு என்பது அரசியல் பேதம்.
ஆனால், மூளைக்குப் போட்ட விலங்கு என்பதை உடைக்கவேண்டும் என்றால், பெரியார் சம்மட்டி யால்தான் உடைக்க முடியும்.
அதனை வேகமாக அடித்து உடைக்க முடியாது. அதற்குப் பதிலாகக் கருத்தாக்கம், பிரச்சாரம், போராட்டத்தின் மூலமாகத்தான் மூளைக்குப் போட்ட விலங்கை உடைக்க முடியும்.
இந்தக் கருத்துகளை, போராட்டங்களை திராவிடர் கழகம், ஜாதிக்கு எதிராக நூறாண்டுகளுக்கு முன்பாகச் சொல்லி, படிப்படியாக மக்களுக்கு அந்த உணர்வுகளை உண்டாக்கியது.
நூறாண்டுகளுக்கு முன்பு, காசு கொடுத்தாலும் நாடகம் பார்க்க முடியாது. ‘பஞ்சமர்களுக்கு இடமில்லை’ என்று நோட்டீசிலேயே போட்டிருப்பார்கள். இன்றைக்கு அதுபோன்ற நிலை இல்லை.
ஒவ்வொரு துறையிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தவர்களை வீழ்த்தி, இன்றைக்கு மேலே வந்துகொண்டிருக்கிறார்கள்.
சமஸ்கிருதக் கலாச்சாரத்தில், ஆண் – பெண் சமத்துவத்திற்கே இடமில்லை!
ஆனாலும், ‘பக்தி’ என்ற பெயராலும், ‘கடவுள்’ என்ற பெயராலும், ‘சாஸ்திரங்கள்’ என்ற பெயராலும் பல பிரிவுகளை வைத்துக்கொண்டு, ஜாதியை அதோடு இணைத்துவிட்டார்கள். அதனுடைய விளைவு சடங்குகள்.
அந்த சடங்குகளில் பார்த்தீர்களேயானால், சமஸ்கி ருதக் கலாச்சாரம். அந்த சமஸ்கிருதக் கலாச்சாரத்தில், ஆண் – பெண் சமத்துவத்திற்கே இடமில்லை. ஜாதியைப் பாதுகாப்பது ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் வைதீகம், ஸநாதனம் என்கிற பெயரால் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
இவை அத்தனையும் நடைபெறுகின்ற கார ணத்தினால், மதத்தை அவர்கள் எளிமையாகப் புகுத்தி, வலதுசாரிகள் தங்களுடைய கொள்கையை திணிக்கி றார்கள்.
ஜாதியைக் காப்பாற்றவேண்டும். ஜாதியைக் காப்பாற்றவேண்டுமானால், எது மூலமாக இருக்கவேண்டும்.
ஜாதியை, நீங்களோ, நாங்களோ உருவாக்கவில்லை. கடவுளே, உருவாக்கியிருக்கிறார்.
இதுதான் மனுதர்மம், இதுதான் பகவத் கீதை.
‘‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்’’
நான்கு ஜாதிகளையும் நானே உண்டாக்கினேன்.
வர்ண தர்மத்தைப் பார்த்து, ‘‘நான் மாற்ற முடியுமா?’’ என்றால், என்னாலேயே மாற்ற முடியாது.
சட்டங்களைக்கூட திருத்தலாம்; ஆனால், வர்ண தர்மத்தை மாற்றவே முடியாது. இப்படி சொல்லிச் சொல்லி, மூளையில் போட்ட விலங்கைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், அந்த மூளையில் போட்ட விலங்கை உடைக்கின்ற பணியைத்தான், பெரியார் இயக்கம், சுயமரியாதை இயக்கம் மிகத் தெளிவாக நடத்திக் கொண்டு வருகிறது. அதில் மிகப்பெரிய அளவிற்கு வெற்றியும் பெறுகிறது.
ஆனால், அவர்கள் (வலது சாரிகள்) கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சியைப் பிடித்துக்கொண்டு, அதை ஒரு கருவியாக்கிக் கொண்டு, ஆயுதம் இல்லாத ஒருவரோடு போராடுவது; இன்னொரு பக்கம் ஆயுதங்களைக் கைகளில் வைத்துக்கொண்டு போராடுவது என்கிற ஏற்ற தாழ்வு உள்ள ஒரு நிலை இருக்கிறது.
ஆகவே, திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், பிரச்சாரம், போராட்டம் – இந்த இரண்டையும் செய்கிறது.
ஜாதி மறுப்புத் திருமணங்கள் அளவிற்கு, ஆணவக் கொலைகள் கிடையாது!
ஆணவக் கொலைகளைப்பற்றிச் சொன்னீர்கள். ஆனால், ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஏராளமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜாதி மறுப்புத் திருமணங்கள் அளவிற்கு, ஆணவக் கொலைகள் கிடையாது.
ஆனால், ஆணவக் கொலைகளை நடத்துவதோடு, ஜாதிப் பெருமைகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.
ஒரு காலத்தில், சங்க காலம் என்று தமிழ்ச் சமு தாயம் சொல்லிற்று. இப்போதும் தமிழ்நாட்டில், மற்ற இடங்களில் ஒரு புதிய சங்க காலம் இருக்கிறது. அது ஜாதிச் சங்க காலம். அப்படிப்பட்ட ஒரு கொடுமையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, எங்கெங்கெல்லாம் முற்போக்குக் கருத்துகள், இடதுசாரி கருத்துகள் வந்ததோ, அங்கெல்லாம் மதத்தை, பக்தியை, கோவில்களைக் கட்டி அல்லது மத அமைப்புகளைத் உருவாக்கி, மதவெறியைத் தூண்டிவிடும் ஒரு நிலையை உருவாக்குகிறார்கள்.
ஏன் கடவுள் மறுப்பு?
ஏன் மதத்தைப்பற்றி பேசுகிறோம்? என்றால், கடவுள் மேலேயோ, மதத்தின் மேலேயோ எங்களுக்குக் கோபம் இல்லை.
எவை எவையெல்லாம் ஜாதிக்கு முட்டுக் கொடுக்கின்றனவோ, எவை எவையெல்லாம் ஜாதிக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கின்றதோ, அவற்றை ஒழிக்கவேண்டும்.
நோய்க் கிருமியை அழிப்பதுதான் மருத்துவர்களின் பணி!
உதாரணமாக நோய்க் கிருமியால் ஒரு நோய் பரவும்போது, அந்தக் கிருமியை அழிப்பதுதான் மருத்துவர்களின் பணியாகும். அதுபோன்றதுதான் எங்களுடைய பணி.
பெரியார் அய்யா அவர்கள், மிக எளிமையான உதாரணத்தை மக்கள் மத்தியில் சொல்லுவார்.
கொசுக்கள் கடிப்பதினால் மலேரியா நோய் வருகிறது. மலேரியா நோயை ஒழிக்கவேண்டும் என்றால், என்ன செய்யவேண்டும்?
ஒரு காலத்தில், ‘தூங்கா மருந்து’ என்று ஒரு மருந்தைக் கொடுத்தார்கள். ஆனால், அது பயன்படவில்லை.
அப்படியானால் என்ன செய்யவேண்டும்?
கொசு எப்படி உற்பத்தியாகிறது என்று ஆராய்ந்தார்கள். நீர்த்தேக்கக் குட்டைகளால், அசுத்தங்களால் கொசு உற்பத்தியாகிறது. அப்படியானால், குட்டைகளைத் தூர்க்கவேண்டும்.
இந்த அணுகுமுறைதான், பெரியாருடைய அறி வியல்பூர்வமான அணுகுமுறையாகும்.
ஜாதியை ஒழிக்கக்கூடிய, சமத்துவத்தை விரும்பக் கூடிய, மானுடம் ஒன்று என்று சொல்லக்கூடிய, ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்று சொல்லக்கூடியவர்கள் இந்த அணுகுமுறையைத்தான் கொள்ளவேண்டும்.
கொசுவை ஒழிக்கவேண்டும் என்பதுதான் குறிக்கோள். அப்படியில்லாமல் அதில் ஒரு சமரசம் செய்துகொண்டு, குட்டையும் இருக்கலாம்; கொசு வுக்கும் வாய்ப்புக் கொடுக்கலாம் என்ற நிலை பயன்தராது.
பெரியாரிடம் கேட்ட கேள்வியும் –
பதிலும்!
பதிலும்!
ஒருமுறை பெரியாரிடம் கேள்வி கேட்டார்கள், ‘‘நீங்கள் என்ன பிராமண துவேஷியா? ஜாதி துவேஷியா’’ என்று.
‘‘நான் கொசு வலை கட்டிக் கொண்டிருக்கின்றேன் என்றால், கொசு துவேஷி என்று சொல்வீர்களா?’’ என்று கேட்டார்.
மலேரியா நோயை ஒழிக்கவேண்டுமானால், கொசுவை அழிக்கவேண்டும்.
எந்த ரூபத்தில் ஜாதி வந்தாலும்
அதனை எதிர்ப்போம்!
அதனை எதிர்ப்போம்!
அதேபோன்று ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றால், அது கடவுள் ரூபத்தில் வந்தாலும், அது சாஸ்திர ரூபத்தில் வந்தாலும், மற்ற எந்த ரூபத்தில் வந்தாலும் அல்லது அரசியல் ரீதியாக வந்தாலும், அதனை எதிர்க்கவேண்டும் என்ற உணர்வோடு திராவிடர் கழகம் பணி செய்துகொண்டிருக்கிறது.
அதையும் மீறி, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஆணவக் கொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அதைவிட அதிகமான அளவிற்கு, ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன.
(தொடரும்)