கோவை,ஏப்.28- த.வெ.க. கட்சியின் வாக்குச் சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவையில் 2 நாட்கள் நடை பெற்றது.
இந்த கருத்தரங்கில் பங்கேற்க கட்சியின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் (26.4.2025) கோவைக்கு வந்தார்.
அப்போது அவரை பார்ப்பதற்காகவும், வரவேற்பதற்காகவும் கோவை விமான நிலையத் தில் அந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் அங்கு திரண்டனர்.
இதன் காரணமாக விமான நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. அத்துடன் விமான நிலையத்தில் இருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன.
மேலும் விமான நிலைய சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் த.வெ.க. மாநகர் மாவட்டச் செயலாளர் சம்பத் உள்பட பலர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதுபோன்று துணை முதலமைச்சர் கோவை வருகையையொட்டி விமான நிலைய சாலையில் தி.மு.க. கொடி நடப்பட்டு இருந்தது. அந்த கொடியையும் சிலர் சேதப்படுத்தியதாக தெரி கிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி, த.வெ.க.நிர்வாகிகளான திண்டுக்கல் செல்லமுத்து, ஒட்டன்சத்திரம் மனோஜ்குமார் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.