பாட்டாளி கட்டறுத்துப் பரந்தாமன் மேல்தொடுக்கப்
பாட்டெடுத்துத் தந்தாயே நீயும்!!
நாட்டினிலே நிலவிவரும் நால்வர்ணக் கதையழிக்க
ஈட்டியோடு எடுத்துவந்தாய் தீயும்!!
தீட்டிவைத்த சொல்வாளால் கொடுமைகளை வேரறுக்கத்
தேடிவைத்தாய் பெரும்படையை நாளும்!!
வேட்டுவைத்தே சாதிமதம் வேகவைத்துப் பொதுவுடைமை
மீட்டிநின்றாய் செந்தமிழின் யாழும்!!
கண்கண்டால் காதலெனக் கதைத்ததனை ஒதுக்கிவைத்துக்
கலந்தவிரு வெள்ளமென்றாய் காதல்!
கந்தலுடைத் தொழிலாளி கடுமுழைப்பைக் கண்டுவானம்
கொந்தளித்த கோபமென்றாய் விண்மீன்!
வெண்ணிலவைப் பார்க்கையிலும்
வெந்தசோற்றுப் பானையென
விருந்தாக்கிக் கொண்டதுன்றன் கண்கள்!!
மண்கண்ட அரசவியல் மாடுகளைக் கொண்டுநீயும்
வரைந்தவிதம் காட்டுமுன்றன் கைகள்!
எல்லோர்க்கும் எல்லாமும் இருக்குமிடம் காட்டுதற்கே
ஏற்றிவைத்தாய் விளக்குமொழிப் பாட்டு!!
துள்ளாத மனம்துள்ளும்! தோன்றவரும் பகைநடுங்கும்!
சொல்லத்தான் உன்பாட்டைக் கேட்டு!!
கள்ளத்தார் கதைமுடிக்கக் கருத்தைத்தான் வெடிகுண்டாய்க்
கைமாற்றிச் சென்றாயே நேற்று!
சொல்லித்தான் முடிந்திடுமோ எம்புரட்சிக் கவியுன்சீர்
தொல்லுலகும் உள்ளவரை போற்றும்!!
– சுப.முருகானந்தம்.
மாநிலச் செயலாளர்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.