திருச்சி, ஏப்.26 இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தில் மகளிர் நாளினையொட்டி 25.04.2025 அன்று மாலை 5.30 மணியளவில் இந்திரா அம்மையார் தங்கத்தாரகை விருது வழங்கும் விழா நடை பெற்றது. இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்களுக்கு 2025ஆம் ஆண்டின் கல்விக்கான சிறந்த நிர்வாகி விருது (“Best Administrator – Education” Award) வழங்கப்பட்டது.
இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் செயலர் பொறியாளர்
க. இராஜசேகரன், இயக்குநர் முனைவர் க. பாலகிருஷ் ணன் ஆகியோர் தலை மையில் பதிவாளர் முனைவர் எம். அனுசுயா மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல் வர்கள் முன்னிலையில் திருச்சி மாவட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர். நந்தினி மற்றும் திருச்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சீனி வாசன் ஆகியோர் முதல்வர் முனைவர்
இரா. செந்தாமரைக்கு சிறந்த நிர்வாகிக்கான விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை வழங்கி சிறப்பித்தனர். 36 ஆண்டுகள் மருந்தியல் துறையிலும் 18 ஆண்டுகள் நிர்வாகப் பொறுப்பிலும் திறம்பட செயல்பட்டதைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகள் 20 பேருக்கு தங்கத்தாரகை விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 3500 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரி யர்கள், பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக பங்கு கொண்ட இந்நிகழ்ச்சியில் மகளிரின் சிறப்பை போற்றும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.