கோவை, ஏப். 26– கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் குறிச்சி பகுதியில் 340 ஏக்கர் பரப்பளவில் 2 பிரிவாக குறிச்சி குளம் அமைந்து உள்ளது. குளத்தின் பல்வேறு இடங்களில் தமிழர் பண்பாட்டை பிரதி பலிக்கும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக குறிச்சி சின்னக் குளத்தின் நடுவில் 25 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சிலை முழுக்க, முழுக்க தமிழ் எழுத்துகளால் உருவாக்கப் பட்டு உள்ளது. மழையையும், வெயிலையும் தாங்கும் வகையில் துருப்பிடிக்காத வகையில் ஸ்டீல் மூலம் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து, ஆயுத எழுத்து என 247 தமிழ் எழுத்துக்களை கொண்டு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து திருவள்ளுவர் சிலையை வடிவமைத்த கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த திருமூர்த்தி கூறியதாவது:-
“திருவள்ளுவர் எழுதிய 1,330 திருக்குறளை போற்றும் வகையில் 1,330 தமிழ் எழுத்துகளால் இந்த கம்பீரமான சிலை உருவாக் கப்பட்டுள்ளது. 247 எழுத்து களில் சில எழுத்துகள் மீண் டும், மீண்டும் உபயோகிக்கப்பட் டுள்ளது. திருவள்ளுவருக்கு தமிழ் எழுத்துகளால் சிலை வைப்பது நாட்டிலேயே இது தான் முதல் முறை. தமிழ் எழுத்து களால் ஆன திருவள்ளுவர் சிலையில் சில சொற்கள் மறைத்து பொருத்தப்பட்டு உள்ளன. திருவள்ளுவர் அமர்ந்த நிலையில் சிலை வடிவமைக்கப் பட்டு உள்ளது.
அறம், பொருள், இன்பம் என்பதை கருப் பொருளாக வைத்து சிலை செய்யப்பட்டு உள் ளது. அறம் எனும் சொல் திருவள்ளுவர் சிலை யின் நெற்றி பகுதியில் வடிவமைக்கப்பட்டுள் ளது. வலது கை தோள்பட்டை பகுதியில் பொருள் என்ற சொல் லும், இடது கை தோள் பட்டை பகுதியில் இன்பம் என்ற சொல்லும் இடம் பெற்று இருக்கும்.
திருவள்ளுவர் மேற்குத் தொடர்ச்சி மலையை பார்க்கும் வகையில் வட மேற்கு திசையில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மாலை நேரத்தில் தங்கம் போல் ஜொலிக்கும். பகல் நேரங்களில் வெள்ளி போல் தெரியும். சிலை யானது 15 அடி அகலம், 25 அடி உயரம், 20 அடி நீளம் என 21/2 டன் எடையுடன் நிறுவப்பட்டுள்ளது.
வழக்கமான தமிழ் எழுத்துகள் மட்டுமல்லாமல் வட்டெழுத் துக்கள், இரட்டை எழுத்து வடிவங்கள் என தமிழர் பெருமை போற்றும் சிறப்பு அம்சங்கள், கலைநயமிக்க இந்த திருவள்ளுவர் சிலையில் இடம்பெற்றிருக்கிறது. இரு கண்களிலும் ‘அய்’ திருமூர்த்தி என்ற எழுத்தும் இடம் பெற்று உள்ளது. மாயா பிரமிடு கான் செப்ட்டில் உருவாக்கப்பட்டது. இந்த சிலையை செய்ய சுமார் 6 மாத காலம் ஆனது. இவ்வாறு அவர் கூறினார்.