உரைநடை நாடக இலக்கியம் -2
காட்சி – 1 இடம்: வீடு
(மகன் கூடத்தில் மேசையின் எதிரில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறான். தாய் வருகிறாள்.)
தாய்: கோயிலுக்குப் போக வேண்டாமா தம்பி?
மகன்: படித்துக் கொண்டிருக்கிறேனம்மா.
தாய்: கோயிலைவிட முக்கியமா,படிப்பு?
மகன்: சிக்கலான கேள்வி! ஏனம்மா, படிப்பைவிட கோயிலா முக்கியம்?
தாய்: கோணல் புத்தி – கடவுள் அருளால் கல்வி வரும், கல்வியால் கடவுள் அருள் கிடைக்குமா?
மகன்: கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன் என்று சொல்லுகிறார்கள் தமிழ்ச் சான்றோர்கள். கடவுள் அருளால் கல்வி வருவது உண்மையானால் கல்விச் சாலைகள் எதற்கு? நான் கஷ்டப் பட்டு படிப்பது எதற்கு?
தாய்: கல்வியால் கடவுள் அருள் கிடைக்குமானால் கட்டியிருக்கும் கோயில்கள் எதற்கு?
மகன்: என் கேள்வியும் அதுதானம்மா?
தாய்: (திகைப்பு) அப்படியானால் கோயிலுக்குப் போகமாட்டாயா?
மகன்: போகிறேனம்மா! கோயிலுக்கு அப்பா போகிற வழக்கமாயிற்றே.
தாய்: அவர் ‘எக்சிபிஷனு’க்குப் போயிருக்கிறார்.
மகன்: கோயிலைவிட ‘எக்சிபிஷன்’ முக்கியமென்று அப்பா நினைக்கிறார். அது சரிதானே அம்மா?
தாய்: தப்பு அவருக்கு நாளாவட்டத்தில் கோயில் நினைவு குறைந்து கொண்டு வருகின்றது
மகன்: காரணம் ?
தாய்: ஏழ்மைதான்.
மகன்: ஆமாம் அம்மா. பணக்காரருக்குத்தான் கோயில். கும்பா பிஷேகம், தேர், திருவிழா எல்லாம். அப்படியிருக்கும்போது.?
தாய்: இப்போது கோயிலுக்குப் போகமாட்டேன் என்கின்றாயா?
மகன்: போகிறேனம்மா அப்பா கோயிலுக்குப் போகாவிட்டால் நீங்கள் போவீர்களே அம்மா?
தாய்: பெண்கள் போகிற மாதிரியாகவா இருக்கிறது. இன்றைய கோயில்கள்!
மகன்: உண்மை! வியப்பு! தாய் நுழையத் தகுதியற்ற கோயிலில் இந்த சேய் நுழையலாமா அம்மா?
தாய்: அப்படியானால் இப்பொழுது கோயிலுக்குப் போக மாட்டாயோ?
மகன்: போகிறேனம்மா
தாய்: அபிஷேக ஆராதனைக்குரிய சாமான்கள் எல்லாம் இதோ இந்தா பணம் (பணத்தை நீட்டுகிறாள்.)
மகன்: பணத்தை வாங்காமல்) பரமன் பூசனைக்குப் பணம் எதற்கம்மா
தாய்: கோயிலில் நுழைய டிக்கட்! மூலவரை நெருங்க டிக்கட்!
மகன்: ஷோ! கொட்டகை மாதிரி! டிக்கட் வாங்காவிட்டால்?
தாய்: கதவின் தாழ் கடுகளவும் நகராது.
மகன்: அன்புதானே அம்மா சிவம்! அதற்கு அடைக்கும் கதவு ஏன்? அகற்றும் தாழ் எதற்கு?
தாய்: பெரியவர்கள் ஏற்பாட்டில் பிழை சொல்லலாமா.தம்பி.
மகன்: அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? நீங்கள் சொல்லும் பெரியோர்களை நோக்கித்தானம்மா திருவள்ளுவர் கேட்கிறார் அப்படி.
தாய்: கோயில் வருமானத்திற்காக அப்படி வைத்திருக்கிறார்கள்.
மகன்: நல்ல கூட்டுக் கம்பெனி! இன்னும் என்ன அம்மா செலவு?
தாய்: அபிஷேகம் சாத்துபடி ஆனபின்பு, அய்யர் அர்ச்சனை என்று வருவார். தட்சணை கொடுக்க வேண்டும். அதன் பிறகு உன் பெயர், குலம், கோத்திரம், நட்சத்திரம் எல்லாம் கேட்பார்.
மகன்: வகுப்புவாத விலாசம் எதற்கம்மா?
தாய்: தமிழிலே கேட்டுக்கொண்டு போய், சிவபெருமானிடம் இன்ன விலாசத்தாரை நல்லபடி வைக்கவேண்டும் என்று சமஸ் கிருதத்திலே.
மகன்: ரெகமண்டேஷனா? ஏனம்மா! தமிழிலே சொன்னால் சங்கரனுக்கு விளங்காதா? தென்னாடுடைய சிவனே போற்றி என்றாரே மாணிக்கவாசகர்: சிவபெருமான் திராவிடநாட்டு ஆசாமிதானே அம்மா?
தாய்: அதெல்லாம் தமிழிலே சொல்லக் கூடாது என்று சொல்லுகிறார்கள்.
மகன்: எந்த மடப்பயல்? தமிழை அருளிச்செய்து, தமிழர் கட்டிய திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தென்னாடுடைய சிவபெருமானுக்கு தமிழ் நஞ்சானால். செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள அவமதிப்பு கொஞ்சமா அம்மா| தாய்மொழியை தலை கவிழ்க்க நிறுவப்பட்டதே சங்கரன்கோயில் என்றால் எந்த நாய் அணுகும் அந்த நச்சுப் பொய்கையை!
தாய்: அப்படியானால் இப்போது கோயிலுக்குப் போகமாட்டாயா?
மகன்: போக வேண்டுமா?
தாய்: (கோபமாக) ஆமாம்.. போகத்தான் வேண்டும்.
மகன்: போகிறேனம்மா நான் கோயிலுக்குப் போய் திரும்பிவர எவ்வளவு நேரம் பிடிக்கும்?
தாய்: அபிஷேகம், சாத்துபடி,ஆராதனை வேதபாராயணம், பிரசாத விநியோகம், பெரிய மேளம், சின்ன மேளம், சாமி அம்மன் திருப்பள்ளி, திருக்கடைக் காப்பு, பண்டாரத்தின் தேவாரப் பண்ணோடு கோயில் கதவடைப்பு!
மகன்: தமிழுக்கு என்ன அவமதிப்பு! போகவா அம்மா?
தாய்: (கோபமா) என்ன போகவா-அம்மா.
(மகன் கோயிலுக்கு வேண்டிய சாமான்களை எடுத்துக்கொண்டு போகிறான்.)
காட்சி – 2 – இடம் : கோயில்
(கோயிலின் எதிரில் நூற்றுக்கணக்கான ஆண், பெண் பிச்சைக்காரர்கள் இரு வரிசையாக உட்கார்ந்து கோயிலுக்கு வருவார் போவாரை நோக்கிக் கெஞ்சி அழுகிறார்கள்.)
- கால் இல்லாதவன் அய்யா!
- இரண்டு காலும் இல்லாதவனய்யா!
- கையில்லாதவனய்யா!
- இரண்டு கையும் இல்லாத முண்டம் அய்யா!
- கண் தெரியாத கபோதி அய்யா!
- இரண்டு கண்ணும் தெரியாதவன் அய்யா!
- புண்ணு புடிச்சவன் அய்யா!
- புண்ணு வெடிச்சு புழுவு நெளியுதய்யா!
- புள்ளைத்தாச்சி அய்யா!
10 பச்சைப் பிள்ளைக்கு பால் இல்லை அய்யா!
(பணக்காரக் குடும்பம் சில பிச்சைக்காரர்கள் நீட்டிய கைகளை ‘சீச்சி’ என்று விலக்கிக் கொண்டு கோயிலுக்குள் போகிறார்கள். பூசனைத் தட்டுகளோடு, அவர்கள் ஏறிவந்த கார்கள், முழக்கத்தோடு ஒருபுறம் குழுவுகின்றன.)
மகன்: (இக்காட்சியைக் கண்டு) பணக்காரரின் நடிப்பு! பஞ்சைகளின் துடிப்பு! ‘பசி பசி’ என்று ஏந்திய கைப் பந்தலின் கீழ் குனிந்து போகிறார்கள். கொடிய நெஞ்சம் படைத்தவர்கள். ஏங்கித் துடிக்கும் ஏழைகளைக் கண்டும் இரக்கங் காட்டாதே. என் தரகர்களின் நன்மை கருதி என் கோயிலுக்கே தட்டு எடுத்துக் கொண்டு வா என்று கூறுகிறதா இதிலுள்ள சிற்பச்சிலை? இரக்கமே உருவாயமைந்தவன். எல்லாம் வல்ல எம்பெருமானென்றால் ஏழைகளைக் கண்டும் இரக்கமில்லாமல் உள்ளே செல்லும் இவர்கள் உள்ளத்தை அவன் அருளா அண்டும்? இல்லை; இருள்தான் மண்டும்.
(இதற்குள் அவன் அருகில் அழுகின்ற பிள்ளையைக் காட்டி அலறுகின்றாள் ஒருத்தி)
ஒருத்தி: பச்சைக் குழந்தைக்கு உதட்டில் பால் பட்டு பத்து நாளிருக்குமய்யா!
(மகன் பால் செம்பை எடுத்து அவளிடம் கொடுக்கிறான். பழத்தில் இரண்டைப் பிய்த்து அவளிடம் கொடுக்கிறான். அதைக் கண்ட பிச்சைக்காரர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். அனைவருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறான். கால் இல்லாதவர்களும் கண் இல்லாதவர்களும். இவனை அணுகும் முயற்சியில் தடுமாறி விழுந்து அலறுகிறார்கள். பதறி ஓடி அவர்களை எல்லாம் தாங்கி நிறுத்திக் கையிலிருந்த பணத்தையெல்லாம் பங்கிட்டு விடுகிறான். மீதியிருந்த தட்டையும் வெறுங்கையோடு இருந்த கிழவனிடம் கொடுத்து விடுகிறான். கிழிந்த துணி போர்த்திய ஒரு கிழவிக்கு அவள் கெஞ்சியது கேட்டுத் தன் மேலாடையைப் போர்த்துகின்றான். கையை மெய்யில் போர்த்திய மற்றொரு கிழவனுக்கு தன் சட்டையைக் கழற்றிப் போடுகிறான். அரையில் கட்டியிருந்த எட்டு முழ வேட்டியில் பாதியை ஒரு பச்சைக் குழந்தையின் பரிதாபங் கண்டு கிழிக்க முயலுகையில், பிச்சைக் காரர்கள் இரக்கத்தால் வேண்டாம் என்று தடுக்கிறார்கள். ஓர் அர்ச்சகன் கோயிலுக்குள்ளேயிருந்து வெளியே வருகிறான்.)
அர்ச்சகன்: நோக்கு அதுதானோ கோயில்?
மகன்: ஆம்; நடமாடும் கோயில்.
அர்ச்சகர்: கொண்டு வந்ததை கோயிலுக்குண்ணோ கொடுக்கணும்.
மகன்: (பாட்டு)
படம் ஆடு கோயில் பரமர்க்கு ஒன்றுஈயில்
நடம்ஆடு அக்கோயில் நம்பர்க்கு அஃது ஆகா
நடம்ஆடு அக்கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படம்ஆடு அக்கோயில் பரமர்க்கு அஃதுஆமே.
நடமாடும் கோயில்களாகிய இந்த ஏழைகளுக்கு ஒன்று கொடுத்தால், படம் ஆடு கோயிலில் எழுந்தருளியிருக்கிற பரமர்க்கு கொடுத்தது மாதிரி அதைவிட்டு கோயிலிலுள்ள சிலைக்கு ஒன்று செலவிட்டால் அது இந்த ஏழை மக்களை ஏமாற்றிய மாதிரி.
அர்ச்சகர்: சுயமரியாதைக்காரர்கள் பேசும் பேச்சு! நடராஜ மூர்த்தியை நசுக்க நல்ல தந்திரம்!
மகன்: நான் சொன்னது திருமூலர், திருமந்திரம்.
(ஏழைகளை மற்றொரு தரம் பார்க்கிறான். அவர்கள் ஆசையோடு ஒவ்வொன்றையும் அருந்தி மகிழக் கண்டு தன் முகத்தில் மகிழ்ச்சி காட்டிச் செல்லுகிறான்.)