மாநிலங்களை ஒடுக்க குடியரசு தலைவர், ஆளுநர்களை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்!

viduthalai
4 Min Read

‘‘நியாயமான கூட்டாட்சி சமநிலையை உறுதி செய்தல்’’ என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கட்டுரையை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ்  (21.4.2025) வெளியிட்டுள்ளது. அதில், ஒரு நூற்றாண்டு காலமாக திராவிட இயக்கம், வளர்ச்சியை விரைவு படுத்தவும், அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சிச் திட்டங் களைச் செயல்படுத்தவும், அதிகாரங்களை பரவலாக்க வேண்டியதன் அவசியத்தை வலுவாக ஆதரித்தும் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அக்கட்டுரை வருமாறு:

ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான அரசமைப்பின் விதிகள், சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மறுஆய்வு செய்வதற்கும், மாநிலங்களின் சுயாட்சியை வலுப்படுத்துவதற்கும் ,நியாயமான கூட்டாட்சி சமநிலையை உறுதி செய்வதற்கும் பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கும் மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைப்பது குறித்த அறிவிப்பை தாம் சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளதாகவும், மாநில அரசின் அதிகாரங்களில், ஒன்றிய அரசின் ஊடுருவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவதற்குமான முயற்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையே இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசமைப்புச் சட்டம், இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என தெளிவாக குறிப் பிட்டுள்ளதாகவும், இந்த முகவுரை மாநிலங்களுக்கு உள்ள உள்ளார்ந்த அதி காரங்களை எடுத்துக்காட்டுவ தாகவும் முதலமைச்சர் தெரிவித் துள்ளார்.

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு போதுமான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டியதன் அவசி யத்தை திமுகவின் நிறுவனர் அறிஞர் அண்ணா, தனது மாநிலங்களவை உரைகளில் மீண்டும் மீண்டும் எடுத்துரைத்திருந்ததையும் சுட்டிக்காட்டி உள்ள அவர், மாநிலங்களில் சுயாட்சி; ஒன்றியத்தில் கூட்டாட்சி, என்பது திமுகவின் அடிப்படைக் கொள்கை, இந்த இலக்கை அடைவதற்காக தலைவர் கலைஞர், நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஆணையத்தை அமைத்ததையும் நினைவுகூர்ந்துள்ளார்.

கலைஞர் நியாயமான அதிகாரப் பகிர்வுக்காகக் குரல் எழுப்பியபோது இருந்ததை விட தற்போது மிகவும் மோசமான ஒரு சூழ்நிலை ஏற்பட் டுள்ளதாகவும், முன்பு, சில அதி காரங்கள் மாநிலங்களிடமிருந்து பறிக்கப்பட்டன, தற்போது, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் கீழ், மாநிலங்களை முடக்கி, அவற்றின் உரிமைகளை நசுக்கி அவற்றை செயலற்றதாக மாற்றுவதற்கான தெளிவான முயற்சி நடந்து வருவதாகவும் குற்றம்சாட்டி உள்ள முதலமைச்சர், மாநிலங்களின் சட்டமன்ற அதிகாரத்தை பறித்து, மாநிலங்களை அடிபணியச் செய்யும் நிலைக்கு குறைக்க ஒன்றிய அரசு விரும்புவதாகவும், மாநிலங்களின் தனித்துவமான மொழியியல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை ஒழிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.

ஒன்றிய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் ஒத்திசைவு பட்டியல் என மூன்று முக்கிய பட்டியல்கள் மூலம் அதிகாரங்களை அரசியலமைப்பு தெளிவாக வரையறுத்துள்ளதாகவும், ஆனால் கடந்த தசாப்தத்தில், ஒத்திசைவு பட்டியலில் உள்ள அதிகாரங்கள் நடைமுறையில் ஒன்றிய பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, மாநிலப் பட்டியலில் தெளிவாக உள்ளவற்றின் மீது சட்டங்களை இயற்றுவதில் தீவிரம் காட்டி வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் வகையில், ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம், மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரங்களில் சட்டமன்ற அதிகாரங்களுக்கு கடுமையான தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும், உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் இந்தத் தடைகள் வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக் கொள்கை, மேட்டுக்குடிகளுக்கான ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாறாக, சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை அடிப்படையாகக் கொண்டது எனவும், மும்மொழித் திட்டம் மூலம் ஹிந்தியை திணிக்கும் சதி, தேசிய கல்விக் கொள்கையில் உள்ளதாகவும் விமர்சித்துள்ள முதலமைச்சர், இந்த சதித் திட்டத்தை நிராகரித்துவிட்டதால், சுமார் 42 லட்சம் மாணவர்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல், தமிழ்நாட்டிற்கான 2ஆயிரத்து 500 கோடி ரூபாய் கல்வி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். அண்மையில், நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை இரக்கமற்ற முறையில் தடுத்து நிறுத்தியதை சுட்டிக்காட்டி உள்ள முதலமைச்சர், இந்த இரண்டு முக்கியப் பிரச்சினைகளிலும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் அதன் இழிவான அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள நியாயமற்ற தொகுதி மறுவரையறை, சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களை தண்டித்து, சிறப்பாகச் செயல்படாத மாநிலங்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்பதால், நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை தாம் அம்பலப்படுத்தி உள்ளதாகவும், இதனை எதிர்கொள் வதற்கும், முற்போக்கான மற்றும் வளமான இந்தியா என்ற சிந்தனை தொடர்ந்து செழித்து வளர்வதை உறுதி செய்வதற்கும், ஒருமித்த எண்ணம் கொண்ட மாநிலங்களின் கூட்டணியை உருவாக்கி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

டில்லியில் அதிகாரக் குவிப்பு மூலம் கூட்டுறவுக் கூட்டாட்சி முறையை மாற்றுவதற்கு தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது, பாஜக ஆட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிரான போராட்டம், தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களுக்கும் உரிய அதிகாரங் களைப் பெறுவதற்குமானது என்றும், இந்த நியாயமான போராட்டத்தில் பிற மாநிலங்களும் தங்களுடன் இணையும் என்று நம்புவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வலிமையான மாநிலங்களால் மட்டுமே வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும், நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க முடியும் என்ற புரிதலில் உறுதியாக உள்ளதாகவும், ஒன்றிய-மாநில உறவுகளில் சமநிலையை மீட்டமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு வலுவான அமைப்பை கட்டமைத்து, மாநிலங்களின் உள் ளார்ந்த உரிமைகளை ஒன்றிய அரசு சீர்குலைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தனது கட்டுரையில் வலியுறுத்தி உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த காலங்களில் செய்தது போல, தமிழ்நாடு மீண்டும் தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற எழுச்சி பெறும் என்றும் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *