டேராடூன், ஜூலை 3 – 100 மீட்டர் ஸ்பிரிண்ட், 200 மீட்டர் ஸ்பி ரிண்ட் மற்றும் குண்டு எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் 106 வயது மூதாட்டியான ராம்பாய். டேராடூனில் யுவ்ராணி விளையாட்டு கமிட்டி சார்பில் நடத்தப்பட்ட 18ஆவது தேசிய ஓபன் தடகள வாகையர் போட்டி யில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
அரியானா மாநிலம் சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் உள்ள கத்மா கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்பாய். கடந்த 1917இல் பிறந்தவர். மான் கவுரை பார்த்து விளையாட்டில் அவருக்கு ஆர்வம் வந்தது. அதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் விளையாட்டுப் பயிற்சியை தொடங்கினார். கடந்த ஆண்டு 45.40 நொடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்து மான் கவுர் படைத்த சாதனையை தகர்த்தார். மான் கவர், கடந்த 2017இல் 101 வயதில் 100 மீட்டர் தூரத்தை 74 நொடிகளில் கடந்திருந்தார்.
தற்போது தேசிய ஓபன் தடகள வாகையர் பட்டப் போட்டியில் 3 தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். ஒவ்வொரு பிரிவிலும் 5 முதல் 6 போட்டியாளர்களை சந்தித்து இந்த பதக்கத்தை அவர் வென்றுள்ளார்.
தனது 41 வயதான பேத்தி சர்மிளா சக்வான் தடகள விளையாட்டில் மூத்த குடிமக்களின் பங்களிப்பு குறித்து சொன்னதன் பேரில், அதில் ஆர்வம் கொண்ட ராம்பாய், 104 வயதில் பயற்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.