சென்னை, ஏப். 20- அ.தி.மு.க.வுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள எஸ்டிபிஅய் கட்சி, பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஅய் பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் பேசியதாவது:
பா.ஜ.க.வை எதிர்க்கக் கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது – பாஜக கூட்டணிக் கட்சிகளை எஸ்டிஅய் கட்சி அங்கீகரிக்காது. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பாஜகவின் முழக்கமாக இருந்தது. ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள் – இப்போது முழக்கம் எங்கே போனது?
நிர்ப்பந்தம்
அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க எவ்வளவு பெரிய நிர்ப்பந்தம் கொடுத்து நேரம் கொடுத்து எத்தனை வாய்ப்புகள் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும். பாஜகவுக்கு இது கைவந்த கலை, தனக்கு கட்டுப்பட்டுத்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள். நீதி நேர்மை நியாயம் அனைத்தையும் துறந்து சாணக்கிய தத்துவ அடிப்படையில் எந்த எல்லைக்கும் போவார்கள், அந்த அடிப்படையில் அதிமுகவை கபிளீகரம் செய்திருக்கிறார்கள்.
பாஜகவை பொறுத்த வரையில் தனக்குச் சாதகமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள் தனக்குத் தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள் அதுதான் அவர்களின் நிலைப்பாடு.என்று கூறினார்.