25ஆம் சமூக நீதி திரைப்பட விழாவில் படைப்பாளிகளுக்கு கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வேண்டுகோள்!
சென்னை, ஏப். 20- பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் மறுபக்கம் இணைந்து நடத்திய சமூக நீதி திரைப்பட விழாவில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் பங்கேற்று ஆவணப்பட படைப்பாளிகளுக்கு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.
சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியமையார் அரங்கில் 13.04.2025, 14.04.2025 ஆகிய இரண்டு நாட்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை, 25 ஆம் சமூகநீதி ஆவணப்படங்கள் திரைப்பட விழா சிறப்பாக நடைபெற்றது. முதல் நாளில் 6 படங்களும், இரண்டாம் நாளில் 5 படங்களுமாக மொத்தம் 11 பன்னாட்டு ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.
முதல் நாள் திரையிடல்!
13.04.2025 அன்று காலை 11 மணிக்கு முதல் படமாக 1948 இல் அய்தராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது, இசுலாமியர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்பதைப் பேசிய “When Pomegranate Turns Grey”, ஒரிசாவில் பழங்குடி மக்கள் செய்யும் விவசாயம், விதை சேகரிப்பு ஆகியவற்றை ஓர் ஆய்வாளர் பார்வையில் பேசிய “Seed Stories”, இலங்கையில் வாழும் வயதான திருநங்கைகள் பற்றிப் பேசும் “Mary and Manju”, அய்ரோப்பாவுக்கு அகதிகளாக வருவோர் படும் அவதிகளைப் பேசும் “On hold”, திண்டுக்கல்லில் 3 பெண்களை 20 ஆண்டுகளாக உடனிருந்து பதிவு செய்து, அவர்களின் முன்னேற்றத்திற்குக் கல்வி தான் காரணம் என்பதை எடுத்துரைக்கும் “Dindigul Diaries”, அர்ஜென்டைனாவில் ஓர் ஏரியை விலைக்கு வாங்கிவிட்ட ஒருவரிடமிருந்து, அதை மீட்பதற்காக மக்கள் முன்னெடுத்த வீரியமான போராட்டத்தைப் பேசிய “Lago Escondido Soberania en juego” ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.
இரண்டாம் நாள் திரையிடல்!
முதல் நாளில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மிகவும் அக்கறையுடன், ஈடுபாட்டுடன் ஆறு இந்திய, பன்னாட்டு ஆவணப்படங்களைக் கண்டு ரசித்தனர். இரண்டு முறை விரிவான கலந்துரையாடல்களும் நடந்தன. இரண்டாம் நாளான 14.04.2025 அன்று காலை 11 மணியளவில், Lesbian, Gay, Bisexual, Transgender ஆகிய பாலியல் சிறுபான்மையினர் Queer எனும் சொல்லின் கீழ் ஒருங்கிணைந்து ஊட்டியில் தாங்களாகவே ஒரு பயிற்சி முகாமை ஏற்பாடு செய்து அதில் தங்களின் பிரச்சினைகளைப் பற்றி மனம் விட்டு உரையாடியதைப் பதிவு செய்திருந்த, “Hues & Blues”, ரோகிங்கியா இசுலாமியர்களின் அவலங்களைப் பதிவு செய்திருந்த “Cry to be heard”, இமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் மக்களிடையே மாதவிடாய் பற்றி நிலவும் மூடநம்பிக்கைகள் பற்றி பேசும் “Ladeej Problem Sohrai Chapter”, புதுச்சேரியில் 10 ஆண்டுகளாக விவசாயம் செய்யும் 4 ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைப் பதிவு செய்திருந்த “One Side of the Road”, போபாலில் தள்ளுவண்டியை வைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்தும் மக்களை மிக நெருக்கமாகப் பதிவு செய்திருந்த “Mind the Cart” ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.
திரையிடலும் கருத்தரங்கமும்!
இறுதியாக மாலை 5 மணிக்கு மேல் நிறைவு விழா நடைபெற்றது. திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், ஊடகவியலாளர் விஜய் ஆனந்த், பேராசிரியர் விஷ்ணுப் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்வை மறுபக்கம் ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான ”பெரியார் விருது” பெற்ற ஆர்.பி.அமுதன், பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் உடுமலை வடிவேல் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஆவணப்படங்கள் திரையிடலில் நடைமுறையில் இருக்கும் தடைகளைப்பற்றி அமுதன் குறிப் பிட்டார். வட இந்தியாவில் ஏறக்குறைய ஆவணப்படங்கள் திரையிட முடியாத சூழல்தான் இருக்கிறது என்றும், தமிழ் நாட்டில் அந்தப்பிரச்சினை இல்லை. குறிப்பாக பெரியார் திடல் மிகவும் உறுதுணையாக இருக்கிறது என்றும் எடுத்துரைத்தார். விஷ்ணுப்பிரியா, விஜய் ஆனந்த் ஆகியோர் தங்கள் அனுபவங் களைப் பகிர்ந்து கொண்டனர்.
கழகப் பொருளாளரின் வேண்டுகோள்!
நிறைவாகக் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் பேசும் போது, முதலில் 25ஆம் சமூக நீதி திரையிடலைப் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து அவர், “பிரச்சாரத்தின் மூலம் சமூகநீதியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதை விட, கலையின் மூலம் கொண்டு செல்வது மிகப்பெரிய வீச்சை உருவாக்கும். ஆகவே மண்டல் கமிசன் வரலாற்றை ஆவணப்படமாகத் தயார் செய்ய முன்வாருங்கள். எங்கள் ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு. அதே போல், தகுதியுள்ள ஆவணப்படங்களை, Periyar Vision OTT இல் வெளியிடுவது பற்றி உரியவர்களுடன் கலந்து பேசி அறிவிப்பு செய்கிறோம்” என்றும் குறிப்பிட்டார்.
மன நிறைவளித்த திரையிடல்!
இந்த திரையிடலின் நோக்கமே பொய்களும், முன்முடிவுகளும், வதந்தி களும், மேம்போக்கான முழக்கங்களும் நிறைந்த இன்றைய சூழலில் ஆழமான, பொறுப்பான, நிதானமான, உண்மைக்கு நெருக்கமான கலை அனுபவத்தைக் கொடுத்து சக மனித மனங்களை ஆற்றுப்படுத்துவது தான். அந்த வகையில் இரண்டு நாள் திரையிடல்களும் அந்த மனநிறைவைக் கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாம் நாளில் 45 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் தேநீர், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
கலந்து கொண்டோர்
இரண்டு நாள் திரையிடலில் பேராசிரியர்கள் வீ.அரசு, அ.மங்கை, உலக சினிமா பாஸ்கரன், இயக்குநர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், நாடக இயக்குநர் சிறீஜித் சுந்தரம், இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த திருநங்கை விருது பெற்ற அ.ரேவதி, மு.இரா.மாணிக்கம், ஆவடி முருகேசன், கவுரி சங்கர், சுரேஷ், புகழேந்தி, யுகேஷ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட ஆளுமைகள், கலைத் துறையினர், செயல் பாட்டாளர்கள், பேராசிரியர்கள், மாண வர்கள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.