சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கமும் கோயில் நுழைவுப் போராட்டங்களும் (5)

Viduthalai
6 Min Read

கி.வீரமணி

மதத்தை விட்டுவிடுங்கள்
எதற்கும் உங்கள் முயற்சியும் சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாவிட்டால் ஒரு காரியமும் நடவாது. தவிரவும் இத்தீண்டாமை ஒழிவதற்கு இது ஒரே ஒரு மார்க்கம் தான் என்று நான் சொல்ல வரவில்லை. தீண்டாமை ஒழிய வேண்டுமானால் மதத்தைவிட்டு விடுங்கள், அல்லது ஏதாவது ஒரு மதம் வேண்டுமானால் தீண்டாமை இல்லாத மதத்தைத் தழுவலாம். உதாரணமாக மகமதிய மதத்தில் மனிதனில் உயர்வு தாழ்வும், தீண்டாமையும் இல்லை.
இனியும் உங்களுக்குத் தோன்றுகின்ற மதத் தைத் தழுவலாம். ஆகவே, நீங்கள் தயவு செய்து நான் சொல்லுவதையும் சாமி சகஜானந்தம் சொல்லு வதையும் பொறுமையுடனும் சுய புத்தியுடனும் ஆராய்ச்சி செய்து பார்த்து உங்களுக்கு சரி என்று தோன்றியபடி நடவுங்கள்” என்று பேசி முடித்தார். பிறகு சாமி சகஜானந்தம் எழுந்து நான் திரு.ராமசாமி பேசியதை மறுக்கவில்லை என்றும், எங்களிடம் செய்யும் பிரச்சாரத்தை பார்ப்பனரிடமும் உயர்ந்த ஜாதி இந்துக்களிடம் செய்யக் கூடாதா என்று சொல்வதாகவும் சொல்லி வந்தனோபசாரம் சொல்ல கூட்டம் முடிவு பெற்றது.
(‘குடி அரசு’, – 27.10.1929)
துறையூரில் நவம்பர் மாதம் 17ஆம் தேதி மாலை நடந்த விஷயா லோசனைக் கூட்டத்தில் முசிறித் தாலுகா தாழ்த்தப்பட்டவர்கள் மகாநாட்டை அடுத்து வரும் ஜனவரி முதல் வாரத்தில் நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானங்கள்
1. நம் சென்னை மாகாண முதல் சுயமரியாதை மகாநாட்டின் தலைவர் ஊ.பு.அ.சவுந்திரபாண்டியன் அவர்களைத் தலைவராக இருக்கும்படி தாழ்த்தப் பட்ட மக்களால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
2. நம்நாட்டிற்குத் தலைவர் ஈ.வெ.ரா. கண்ணப்பர், சாமிசகஜாநந்தம், தண்டபாணி, ஆரியா முதலிய பெரியோர்களை விஜயம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
3. மகாநாட்டின் தேதி தலைவர் அவர்களின் சவுகரியப் பிரகாரம் தெரிவிக்கப்படும்.
4. முசிறித் தாலுகா ஆலயப் பிரவேசத்திற்கு திருவாளர்கள் ரஞ்சித்சிங், எம். ஏ.நடராஜன், வி.மாரிமுத்து, கே.வீராசாமி, என்.எஸ்.கந்தசாமி, எஸ்.ராமசாமி, மரியண்ணன், மருதமுத்து, எஸ்.ரெங்கசாமி, உத்தண்டன் ஆகியவர்கள் உடல், பொருள், ஆவி, மூன்றையும் தத்தம் செய்யத் தயாராய் இருக்கிறார்கள்.
விழுப்புரம் சாமிநாதன் அவர்கள் தலைமையில் 05.12.1929இல் முசிறி சிவன் கோயிலில் ஆலயப் பிரவேசம் நடத்தப்படும்.
மேற்படி தேதியில் உயர்திருவாளர்கள் பி.டி.ராஜன் – மதுரை, கே.சி.சுப்ரமண்யம் – நாகை, டி.பி. வேதாசலம் – திருச்சி, ஆறுமுகம்பிள்ளை – கடலூர் முதலிய பெரியோர்களாகிய வழக்கறிஞூர்களுக்குத் தந்திச் செய்திகள் அனுப்பப்படும்.
’திராவிடன்‘, 21.11.1929
இராமநாதபுரம் ஜில்லா தேவஸ்தான கமிட்டியார் மேற்படி தேவஸ்தான கமிட்டிக்குக் கட்டுப்பட்ட குளம், கிணறு, ரஸ்தா, பள்ளிக் கூடம் ஆகியவைகளில் யாவரும் தடையில்லாமல் செல்லலாம் என ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகத் தெரிகிறது.

தேவதாசி ஊழியம்
அத்துடன் அந்த தேவஸ்தான கமிட்டிக்குக் கட்டுப்பட்ட எல்லா கோயில்களிலும் தேவதாசிகள் ஊழியத்தை அடியோடு நிறுத்திவிட வேண்டுமென்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். மற்றும் சர்வ ஹிந்துக்களுக்கும் ஆலயங்களில் பிரவேசம் அளிப்பதைப் பற்றி ஆலய தருமகர்த்தர்களின் அபிப்பிராயம் அறியும் பொருட்டு
7 கேள்விகள் அடங்கிய ஒரு சுற்றுக் கடிதமும் அனுப்பியிருக்கிறார்கள். அக்கடிதத்தில் அடங்கியுள்ள கேள்விகள் ஆவன:-
1. உங்கள் கோயில் பெயர்
2. ஹிந்துக்கள் எல்லாம் உங்கள் கோயிலுக்குள் செல்வதுண்டா?
3. கோயிலுக்குள் எல்லோரும் செல்லுமிடத்துக்கு வரையறையுண்டா? உண்டானால் அதற்குக் காரணம் என்ன?
4. எல்லா ஹிந்துக்களும் கோயிலுக்குள் செல்லா விட்டால் அதற்குக் காரணம் என்ன?
5. ஜாதி காரணமாக கோயிலுக்குள் போக வொட்டாது யாராவது தடுக்கப்படுகிறார்களா?
6. தடுக்கப்பட்டால் அப்படித் தடுக்கப்படுவதற்குக் காரணம் என்ன? அப்படித் தடுப்பதற்கு உங்களுக்கு ஏதாவது அதிகாரமுண்டா? உண்டானால் அது எழுத்து மூலமாக ஏற்பட்டதா? அதன் முழு விவரம் என்ன?
7. ஜாதி பேதமில்லாமல் யாவரையும் கோயிலுக்குள் விடுவதற்கு உங்களுக்குச் சம்மதமா?

ஆலயங்களின் அனாச்சாரம்
இராமநாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டியாரின் இம்முயற்சியினால் தீண்டாமை யொழிந்து விடுமென்றோ, ஆலயப் பிரவேச உரிமையில்லாதவர்கள் சமீபத்தில் ஆலயப் பிரவேச உரிமை பெற்று விடுவார்களென்றோ மகிழ்ச்சி யடையக் காரணமில்லையாயினும், இவ்வளவு முற்போக்கான முறையில் நடந்து கொள்ள ஒரு தேவஸ்தான கமிட்டியார் துணிந்து முன்வந்ததை நமக்குப் பாராட்டாமலிருக்க முடியாது. குருட்டு நம்பிக்கைகளுக்கும் அனாச்சாரங்களுக்கும் இருப்பிடமாய் இருப்பது ஆலயங்கள்.
அந்த ஆலயங்களைப் பரிபாலனம் செய் வோருக்கு இவ்வளவு சுதந்திர மனப்பான்மை தோன்றியிருப்பதினால், தென்னாட்டிலே சுயமரியாதை உணர்ச்சி மிக வேகமாகப் பரவி வருவது குறைகிறது. கமிட்டியார் தீர்மானங்களை பொது ஜனங்களும் சர்க்காரும் ஆதரித்தால்தான் அவை அமலுக்கு வரமுடியும். ஈரோடு தேவஸ்தான கமிட்டியார் அக்கமிட்டி எல்லைக்குட்பட்ட ஆலயங்களில் எல்லா ஹிந்துக்களும் பிரவேசிக்கலாம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருப்பதையும் அது இப்பொழுது அமலுக்கு வராமல் இருப்பதையும், அத்தீர்மானத்தை நம்பி ஆலயப் பிரவேசம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டதையும் தென்னாட்டார் மறந்திருக்கமாட்டார்களல்லவா? வெறும் தீர்மானங்கள் நிறைவேற்றுவதினால் மட்டும் ஒரு பயனுமுண்டாகாது.
நிறைவேறிய தீர்மானங்கள் அமலுக்குக் கொண்டு வர ஜனங்களுக்கு மனத்துணிவு வரவேண்டும்.
(‘குடி அரசு’ – 26.08.1930)
“கோயிலுக்குள் போகலாம்”

திருச்செந்தூர் கோவில் பிரவேச
வழக்கில் அய்க்கோர்ட்டுத் தீர்ப்பு
19.03.1935இல் நீதிபதிகள் ராமேசம், ஸ்டோன்ஸ், இருவர்களும் திருச்செந்தூர் ஆலயப் பிரவேச வழக்கில் தீர்ப்புக் கூறினார்கள். இந்த வழக்கு சட்ட சம்பந்தமான வியாக்கியானத்தைப் பற்றிய தகராறில் பிரிவி கவுன்சில் வரையில் போய் மறுபடியும் ஹைக்கோர்ட்டுக்கு வந்தது.
இப்போது கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமிகோயிலில் ‘எண்ணெய் வாணியர்’ என்கிற ஜாதியாருக்கு ஆலயப் பிரவேச உரிமை உண்டு.
திருச்செந்தூரிலுள்ள சில வாணியர்கள் தமது வகுப்பினருக்குப் பிரதிநிதிகள் என்ற ஹோதாவில் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தர்ம கர்த்தாக்களையும் ஸ்தலத்தார் என்று சொல்லப்படும் சில உரிமையாளரையும் பிரதிவாதிகளாக்கி, அந்த ஆலயத்தில் மற்ற மேல் ஜாதி ஹிந்துக்கள் போகும் இடம் வரையில் போய் தரிசனம் செய்யத் தமக்கு உரிமை உண்டென்று வழக்குத் தொடர்ந்தார்கள். முதலில் இது தூத்துக்குடி சப்-கோர்ட்டில் நடந்தது.

உரிமை உண்டா?
பிரதிவாதிகள் பின் வருமாறு ‘தாவா’ செய்தார்கள். வெளிப் பிரகாரத்தில்கூட இந்த வகுப்பினர் வருவதற்கு உரிமை கிடையாது. 1877இல் இதைப்பற்றி வியாஜ்ஜியம் நடந்திருக்கிறது. வாணியர்களுக்கு இந்தக் கோயிலில் பிரவேச உரிமை இல்லையென்று அப்போது தீர்ப்பு கூறப்பட்டிருப்பதால், இப்போது கொண்டுவரப்படும் வழக்கு “முன் வழக்கால் பாதிக்கப்படுகிறது என்று அவர்கள் விவாதித்தார்கள்.
வாணியர்கள் – “வைசியர்கள்” என்று ருசுவா காவிட்டாலும் அவர்கள் சூத்திரர்களுக்குக் குறை வானவர்களல்ல. முன் வியாஜ்யம் பிரதிநிதித்துவ வியாஜ்ஜியமல்ல; ஆகையால், இப்போது வரும் பிரதி நிதித்துவ வியாஜ்ஜியத்தை முன் தீர்ப்பு பாதிக்காது என்று சப்-கோர்ட்டு கருதியது. வாணியர்களுக்கு உரிமையுண்டு என்று தீர்ப்புக் கூறப்பட்டது.
இதன் மீது ஹைக்கோர்ட்டில் தர்மகர்த்தாக்களும் ஸ்தலத்தாரும் அப்பீல் செய்தனர். முன் தீர்ப்பினால் பாதகம்தான் என்று சொல்லி ஹைக்கோர்ட்டு, வாணியர்களுக்கு விரோதமாக தீர்ப்பு கொடுத்தது.
முன் வழக்கால் பாதகம் ஏற்பட்டதா என்பதைப் பற்றி வாணியர்கள் பிரிவி கவுன்சிலில் அப்பீல் செய்தார்கள் பாதகமில்லையென்று பிரிவி கவுன்சில் சொல்லி விட்டதோடு, இந்த வழக்கின் உள்விஷயங்களையும் கவனித்து தீர்ப்புக் கூறும்படி உத்தரவிட்டது.

வழக்கு
கடைசியாக இப்பொழுது ஹைக்கோர்ட்டில் வழக்கு வந்தது.
வாணியர்கள் எக்காலமும் பிரவேச உரிமையை அனுபவிக்கவில்லை யென்பதை ருசுச்செய்வது பிரதிவாதிகள் பொறுப்பு; ஏனென்றால், வாணியர்கள் வைசியர்களைவிட தாழ்ந்தபடியிலிருப்பவர்களல்லர். பிரதிவாதிகள் முன் அனுஷ்டானத்தை ருசுச் செய்யவில்லை; 1862 க்கு முன் வாணியர்களுக்கு பிரவேச உரிமை இருக்கவில்லையென்று ருசுவாக வில்லை.
ஆகையால், அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது – அதாவது சப்-கோர்ட்டின் தீர்ப்பு உறுதி. வாணியர்களுக்கு உரிமையுண்டு என்பதே இப்போது ஏற்பட்டுள்ள தீர்ப்பு.
இந்த வழக்கில் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் டி.எல். வெங்கடராமய்யர், வி.சம்பந்தம் செட்டி ஆகியோர் வாணியர் கட்சிக்கும், டி.ஆர். வெங்கட ராமய்யர் கே. எஸ்.சங்கரய்யர் டி,நல்லசிவம் பிள்ளை தர்மகர்த்தாக்களுக்காகவும் ஆஜரானார்கள்.
(‘தினமணி’)
குறிப்பு:- பிரிட்டிஷ் ஆட்சி நம் நாட்டில் இல்லாமல், பார்ப்பனர்களுடைய வருணாசிரம தர்ம சுயராஜ்ய ஆட்சி இருந்திருக்குமானால், இத்தகைய தீர்ப்பு ஏற்பட்டிருக்க முடியுமா? இத்தகைய வழக்குத் தொடர்ந்ததையே அதிகப்பிரசங்கித்தனமானதென்று கருதி, அதற்காக வாதிகளுக்குக் கடுந் தண்டனை கொடுத்திருப்பார்கள் என்பதில் என்ன சந்தேகம்? வருணாசிரம தரும ஆட்சிக்காரப் பார்ப்பனர்களின் வாலைப்பிடித்துக் கொண்டு திரிபவர்கள் இதைக் கவனிப்பார்களா?
(‘குடிஅரசு’, 24.03.1935)
முற்றும்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *