தேசிய அறிவியல் விழாவில் அமைச்சர் கோவி. செழியன் பேச்சு
சென்னை, ஏப்.19 குழந்தைப் பருவம் முதலே அறிவியல் உணர்வை வளர்க்க வேண்டும். அறிவியல் உணர்வு வளர்ந்தால்தான் நமது நாட்டில் மூடநம்பிக்கைகள் ஒழியும் என்று அமைச்சர் கோவி. செழியன் கூறினார்.
தேசிய அறிவியல் விழா
சென்னை, கோட்டூர் புரத்தில் அமைந்துள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மய்ய வளாகத்தில், கடந்த 17ம் தேதி நடைபெற்ற தேசிய அறிவியல் விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) உயர்கல்வித் துறைக்கு தேர்தெடுக்கப்பட்ட 55 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கோவி. செழியன் பேசியதாவது: அறிவியலைக் கொண்டுதான் சமுதாய வாழ்வின் பிரச்சினை களைத் தீர்க்க வேண்டும். சமீபத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோ சனை கூட்டத்தில், கல்வி நிலையங்களில் அறிவியல் பூர்வமான கருத்துக்களும், கல்வியும் மட்டுமே போதிக்கப்பட வேண்டும் என்றும், எந்தக் காரணத்தைக் கொண்டும் அங்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக் கதைகளையோ தவறியும் மாணவர் களிடையே பரப்பிவிடக் கூடாது என்றும் முதலமைச்சர் கூறினார்.
அறிவியல் உணர்வு
குழந்தைப் பருவம் முதலே அறிவியல் உணர்வை நாம் வளர்க்க வேண்டும். அறிவியல் உணர்வு வளர்ந்தால்தான் நமது நாட்டில் மூடநம்பிக்கைகள் ஒழியும். 2025-2026ஆம் நிதி நிலை அறிக்கையில், ரூ.100 கோடியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் அரசு பங்களிப்புடன் சென்னை அறிவியல் மய்யம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பிற்கான பூர்வாங்கப் பணிகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை செயலாளர் சமயமூர்த்தி, கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவள்ளி, தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர் இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மய்ய செயல் இயக்குநர்லெனின் தமிழ்க்கோவன் ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.