சென்னை, ஏப். 19- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது. இதனையடுத்து ஆளுநர் ஆர்.என். ரவியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சென்னையில் ஏப்ரல் 25-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காததை உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்ததுடன் உச்சநீதிமன்றமே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது.
அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏப்ரல் 25 அன்று சென்னையில் சாஸ்திரி பவன் முன்பு மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதலாவதாக குளிர்சாதன மின்சார ரயில் சேவை
சென்னை, ஏப். 19- சென்னையில் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. கடற்கரை – தாம்பரம் -– செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 12 பெட்டிகளுடன் ஏசி புறநகர் ரயில் தயாரிக்கும் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடந்தது. சோதனை ஓட்டம் முடிந்த நிலையில் புறநகர் ஏ.சி. ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
காலை 7 மணிக்கு சென்னை கடற்கரை – தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில் இயக்கப்படுகிறது. 1,116 பேர் அமர்ந்தும், 3,796 பேர் நின்று செல்லும் வகையில் புறநகர் ஏ.சி. ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் காலை 7 மணிக்கு புறப்படும் ரயில் 8.45 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.
ஏ.சி. புறநகர் ரயில் கட்டண விவரம்;
புறநகர் ஏ.சி. ரயிலில் குறைந்தபட்சமாக ரூ.35, அதிகபட்சமாக ரூ.105ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை -– செங்கல்பட்டு இடையே ரூ. 105, கடற்கரை தாம்பரம் இடையே ரூ.85ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் – எழும்பூர் இடையே ரூ.60, செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரூ.85ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு உரிய பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் நடவடிக்கை
சமூக நலத்துறை எச்சரிக்கை
சென்னை, ஏப். 19- பெண்களுக்கான ‘பிங்க்’ ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலத்துறை எச்சரித்துள்ளது.
சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக ‘இளஞ்சிவப்பு’ ஆட்டோ சேவை தமிழ்நாடு அரசால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களை, ஆண்கள் சிலர் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன. வணிக ரீதியிலான போக்குவரத்து சேவைக்கு ஆண்கள் இதனை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. பெண்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத்துறை எச்சரித்துள்ளது.
மருத்துவத் துறை சாதனை
தமிழ்நாட்டில் மகப்பேறு கால உயிரிழப்புகள் 39ஆக குறைவு
சென்னை, ஏப்.19- தமிழ்நாட்டில் மகப்பேறு கால உயிரிழப்புகள் 45இல் இருந்து, 39 ஆக குறைக்கப்பட்டுள்ளது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சிறப்பு மருத்துவ சிகிச்சை
கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பிந்தைய 47 நாட்களுக்குள்ளும் பெண்களுக்கு ஏற்படும் தீவிர பாதிப்புகளுக்கு உயர் சிறப்பு மருத்துவ குழு சிகிச்சை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக கர்ப்பிணிகளுக்குத் தீவிர சிகிச்சையுடன் கூடிய அனைத்து வசதிகளும் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் குறித்த பட்டியல், அவர்களின், பிரசவ காலத்துக்கு ஓரிரு மாதத்துக்கு முன் வழங்கப்படுகிறது.
அந்தந்த கிராமப்புற செவிலியர்கள் வாயிலாக, அவ்வப்போது கர்ப்பிணியர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற தொடர் நடவடிக்கையால் கர்ப்ப கால உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 9 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில் ஒரு லட்சம் பிரசவங்கள் என்ற அடிப்படையில் உயிரிழப்புகள் கணக்கிடப்படுகிறது.
கரோனா காலக்கட்டத்தில் 90 ஆக இருந்த உயிரிழப்பு, அடுத்தடுத்த ஆண்டுகளில், 52 மற்றும் 45 ஆக பதிவாகி வந்தது. தற்போது, கர்ப்பிணியர் தொடர் கண்காணிப்பு மற்றும் பிரசவத்திற்கான மருத்துவமனை முன்கூட்டியே திட்டமிடல் போன்றவற்றால், கர்ப்பகால உயிரிழப்பு 39 ஆக குறைந்துள்ளது.
உயிரிழப்புகளை தொடர்ந்து குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஆயிரம் குழந்தைகளில், 8 ஆக இருந்த உயிரிழப்புகள், 7 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த இறப்புகள் குறைப்புக்கு, அதிகாரிகள் மற்றும் மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.