கலைஞர் பாதையில்
மு.க.ஸ்டாலின்!
மாநில சுயாட்சி விவகாரத்தில் மேனாள் முதலமைச்சர் கலைஞர் முதல்முறையாக உயர்மட்ட குழுவை அமைத்தார். 1969-இல் நீதிபதி ராஜமன்னார் ஆணையத்தை அமைத்தார். அதைத் தொடர்ந்து 1984-இல் எம்.ஜி.ஆர். நீதிபதி சர்க்காரியா ஆணையம் அமைத்தார். அதையடுத்து 2002-இல் ஜெயலலிதா நீதிபதி வெங்கடாசாலையா ஆணையத்தையும், 2010-இல் கலைஞர் , நீதிபதி பூஞ்சி ஆணையத்தையும் அமைத் தனர். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீதிபதி குரியன் ஜோசப் குழுவை அமைத்துள்ளார்.
அவுரங்கசீப்பிற்காக அய்.நா.வை நாடிய முகலாய வாரிசு
இந்தியாவின் கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷாவின் வழித்தோன்றல் எனக் கூறிக்கொள்ளும் யாகூப் ஹபீபுதீன், அவுரங்கசீப் கல்லறையைப் பாதுகாக்கக்கோரி அய்.நா.வை நாடியுள்ளார்.
அய்.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோவிற்கு எழுதிய கடிதத்தில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னத்தில் மாற்றம் செய்வது பன்னாட்டு விதிகளை மீறுவதாகும், எனவே கல்லறையைப் பாதுகாக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி யாகூப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவா் சோ்க்கைக்குத் தடை? ஹாா்வா்டு பல்கலைக் கழகத்துக்கு எச்சரிக்கை
நியூயார்க், ஏப்.18 மாணவா் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தங்களது உத்தரவை செயல்படுத்தாவிட்டால் அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவா்களைச் சோ்ப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்தப் பல்கலைக்கழகத்துக்கு உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் கிறிஸ்தி நோயெம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரும் 30-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து வெளிநாட்டு மாணவா்களின் சட்டவிரோத செயல்பாடுகள், வன்முறைச் செயல்கள் ஆகியவை குறித்த முழு விவரங்களை துறைக்கு தெரியப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், வெளிநாட்டு மாணவா்கள் பரிமாற்ற திட்டத்தில் பங்கேற்பதற்காக பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழ் உடனடியாக ரத்து செய்யப்படும்.யூத வெறுப்புவாதத்துக்கு ஹாா்வா்டு பல்கலைக்கழகம் அடிபணிந்துள்ளது. அதன் வளாகத்தில் அமெரிக்க-விரோத, ஹமாஸ்-ஆதரவு கோட்பாடுகள் நஞ்சைப் பரப்பிவருகின்றன.
ஹாா்வா்டு பல்கலைக்கழகம் ஒரு தலைசிறந்த கல்வி நிறுவனம் என்பதெல்லாம் பழங்கதையாகிவிட்டது என்று அந்தக் கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.முன்னதாக, ஹாா்வா்டு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவா்கள் அரசியல் சாா்பு செயல்களில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது. எனினும், அதை ஏற்க பல்கலைக்கழக நிா்வாகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதைத் தொடா்ந்து அந்தப் பல்கலைக்கழகத்துக்கான 220 கோடி டாலா் (சுமாா் ரூ.18,870 கோடி) நிதியை அரசு நிறுத்திவைத்துள்ளது. இதை மேனாள் அதிபா் ஒபாமா உள்ளிட்டோா் வன்மையைகக் கண்டித்தனா். இந்தச் சூழலில், வெளிநாட்டு மாணவா்களைச் சோ்ப்பதற்காக அந்தப் பல்கலைக்கழகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியையே ரத்து செய்யப்போவதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.