செங்கல்பட்டு, ஏப்.18 செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் கிராமம், காந்தி தெருவில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றாண்டு கண்ட அரசுப் பள்ளி வளாகத்தில் ஏற்கெனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் உள்ளது. தற்போது அந்தக் கோயிலில் விரி வாக்கம் என்ற பெயரில் மேலும் பள்ளி வளாகத்தை இடித்து மண்டபம் கட்ட ஏற்பாடு நடைபெறுகிறது. இதனால் அரசுப் பள்ளிக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அப்பள்ளியில் அத்துமீறி நுழைந்து, கோயில் நிர்வாகம் என்ற பெயரில், பள்ளியையும், சாலையையும் ஒருசேர ஆக்கிரமிக்கும் இந்தச் செயலால் மாணவர்கள், பெற்றோர், பள்ளிக்கு அருகில் உள்ள குழந்தைகள் காப்பகம் (பால்வாடி), வருவாய் அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், ரயில் நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட அவசரப் பணிகளுக்குச் செல்லும் வழியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பள்ளி நடைபெறும் வேலைநாட்களிலேயே பேரிரைச்சல் ஏற்படுத்தும் ஒலிபெருக்கிகளைக் கட்டியும், வாசலை மூடி, பந்தல் அமைத்து, ‘அன்னதானம்’ என்ற பெயரில் பள்ளி வளாகத்தைக் குப்பைத் தொட்டியைப் போல பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சில சமூக விரோதிகள் வயிறு வளர்க்கப் பயன்படும் இக் கோவிலால் அரசுப் பள்ளி இடம் ஆக்கிரமிக்கப்படுவதைக் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.