இந்த நாட்டில் நாட்டுப் பற்றோ, மனிதப் பற்றோ உள்ள அரசாங்கமானாலும், பொதுத் தொண்டு செய்யும் ஸ்தாபனங்களானாலும், அல்லது தனிப்பட்ட சமுதாயப் பற்றுள்ள மக்களானாலும் அவர்கள் முதலாவது செய்ய வேண்டிய காரியம் நாட்டு மக்களை அறிவாளியாகச் செய்து அவர்களது பகுத்தறிவு ஆராய்ச்சித் தன்மையைப் பெருக்க வேண்டியதாகும்.
மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கு ஒரு வழி செய்து அவர்களுக்கு கவலையோ, குறைபாடோ ஏற்படுவதற்கு இல்லாமல் பொருளாதார சமத்துவமும், சமுதாய சமத்துவமும் ஏற்படும்படிச் செய்ய வேண்டும்.
இந்தத் தன்மைகள் உள்ள நாட்டைத்தான் நாடு என்றும், சுதந்திர பூமி என்றும் சொல்லலாம்; இவை இல்லாத நாட்டையும், சமுதாயத்தையும் சிறைக்கூடம் என்றும், அடிமை சமுதாயம் என்றும் தான் சொல்லப்பட வேண்டும்.
சாதாரணமாக அரசர்களால் ஆளப்படும் நாடுகளும், சமுதாயமும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனெனில், அரசனுக்கு ஆட்சி முறை மதமும், சாஸ்திரங்களுமே தான். மக்களால் ஆண்டு கொள்ளப்படும் நாட்டுக்கு ஆட்சி முறை அறிவும், சுதந்திரமுமே தான்.
மதமும், சாஸ்திரங்களும் மனிதனின் அறிவையும், சுதந்திரத்தையும் ஒழிப்பதற்கென்றே, மக்களை மடையர்களாகவும், அடிமைகளாகவும் ஆக்குவிப்பதற் கென்றே ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட சாதனங்களாகும். அவைகளும் மக்கள் காட்டுமிராண்டிகளாய், மிருக பிராயத்தில் இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்டவைகளாகும். எப்படி என்றால், மக்களுக்குப் பயத்தைக் காட்டியே அதாவது பேய், பிசாசு, பூதம் என்பவைகளைச் சொல்லி எப்படி மக்கள் பயப்படுத்தப்பட்டார்களோ, அதுபோலவேதான் மதத்தையும், சாத்திரங்களையும் கூறி மக்களைப் பயப்படுத்தி விட்டார்கள்.
மதத்திற்கும், சாஸ்திரங்களுக்கும் கடவுளை எஜமானனாக, மூலகர்த்தாவாக வைத்து உண்டாக்கினார்கள் என்றாலும், கடவுள் வேறு – மதம், சாஸ்திரம் வேறு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், கடவுள் அறியாமையில் இருந்து தோன்றியதாகும்.
மதமும், சாஸ்திரங்களும் அயோக்கியத்தனத்திலிருந்து அதாவது மக்களை மடையர்களாக்கவும் பயப்படுத்தி அடிமை களாக்க வேண்டும் என்ற எண்ணத்தின் மீதே உண்டாக்கப் பட்டவைகளாகும். உலக அறிஞூர்களால் ஒப்புக் கொள்ளப் பட்ட மேல்நாட்டு குறிப்பிடத்தகுந்த அறிஞூர்களாலேயே இக்கருத்து வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, கடவுளைக் கற்பித்தவனை மன்னித்து விடலாம். ஏனெனில், அவன் மடை யன், அறிவில்லாத காரணத்தால் கற்பிக்க வேண்டியவனாவான்.
ஆனால், மதத்தையும், சாஸ்திரங்களையும் (ஆத்மா, மோட்சம், நரகம்) கற்பித்தவன் அயோக்கியன். இவனை மன்னிக்கவே முடியாது. இவன் மக்களைப் பயப்படுத்த வேண்டியே இவற்றைக் கற்பித்து இருக்கிறான் என்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். கடவுளைக் கற்பித்தவன் “உலக உற்பத்திக்கு, நடத்தைக்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்தக் கர்த்தாதான் கடவுள்” என்று உத்தேசத்தின் மீது உறுதிப்படுத்திச் சொல்லுகிறான்.
அதாவது சந்தேகத்தின் பயனை (பெனிஃபிட் ஆஃப் டவுட்) கடவுளுக்குக் கொடுக்கிறான்.
ஆனால், மதமும், சாஸ்திரமும் அப்படி இல்லை. முழுப் பொய்யையே கற்பனை செய்து மக்களை ஏய்ப்பதற்கென்றே, பயப்படுத்துவதற்கென்றே பாகுபடுத்தி மதமும், சாஸ்திரமும் அமைக்கிறான்.
இந்த அமைப்புக்கு (இதை அமைப்பு என்பதற்கு) ஆதாரம் என்னவென்றால், பல மதங்கள், பல சாஸ்திரங்கள் இருப்பதும், அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக (நேர்மாறாக) இருப்பதுமேயாகும்.
மற்றும் இப்படி கற்பித்தவர்கள் என்பவர்கள் மனிதத் தன்மைக்கு மேம்பட்டவர்கள் என்பதும், இந்து மத சாஸ்திரங்கள் இயற்கை பிரத்தியட்ச விதிகளுக்கு மாறுபாடாக இருப்பதும் மற்றொரு ஆதாரமாகும்.
இதை நாம் ஏன் குறை கூறுகிறோம் என்றால், இவை அறிவை மாத்திரமல்லாமல், ஒழுக்கம், நேர்மை, அன்பு, அருள், ஒற்றுமை, சமநிலை முதலியவற்றைப் பாழ் செய்வதோடு வளர்ச்சியையும் கெடுத்து விஞ்ஞானத்தை மறைத்து அஞ்ஞானத்தை வளர்த்து வருகிறது.
இதை உணர நாம் வெகுதூரம் போக வேண்டியதில்லை. “நமது” மதத்தையும், சாஸ்திரங்களையும் எடுத்துக் கொண் டாலே போதுமானதாகும்.
நம் (திராவிடர்) தமிழர்களாகிய மக்களுக்கு (கடவுள் உண்டா? இல்லையா? என்பது வேறு விஷயம். ஆனால்) மதமே இல்லை. இந்து மதம் நம் மதம் என்று கருதிக் கொண்டி ருக்கிறோம். இதுவே ஒரு மாபெரும் ‘இமயமலை அளவு’ முட்டாள்தனமாகும். ஏன்? இந்து மதம் என்றால் என்ன? அதற்குப் பொருள் என்ன?
மதம் என்னும் சொல்லுக்குக் கிறிஸ்து மதம், இஸ்லாம் மதம் என்பதற்கு உள்ள இலட்சணப்படி, ஆதாரப்படி, இலட்சியம், ஆதாரம், சரித்திரம் ஏதாவது உண்டா? இந்து மத, சாத்திரம், வேதம், என்பதாக ஏதாவது இருக்கிறதா?
இந்து மதத்தைப் பார்ப்பனர் வேத மதம் என்கிறார்கள். பார்ப்பனர் தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அதனால், அதை ஆரிய மதம் என்றும் சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஆங்கில அகராதிகளில் இந்து மதம் என்றால் பிராமணர் மதம் என்றும், கிறித்தவர், மகமதியர் அல்லாதார்களுடைய மதம் என்றும் குறிப்பிடப்பட்டி ருக்கிறது. விரிக்கில் பெருகும் சுருக்கிக் கொள்கிறேன்.
இந்து மதத்திற்கு ஆதாரம் வேதம், சாஸ்திரம், புராண, இதிகாசமே! இந்து மதத்தின்படி நாம் கீழான பிறவி, நான்காவது, அய்ந்தாவது ஜாதியாராவோம்! அதனால் மேற்கண்ட மத ஆதாரங்களைப் படிக்கத் தகுதி அற்றவர்களாக ஆக்கப்பட்டிருக் கிறோம். வேத, சாத்திர, புராண, இதிகாச ஆதாரங்கள் பெரிதும் நம் மக்களை இழி குலமாக்கி, அயோக்கியராக்கி பல வழிகளிலும் அவமானப்படுத்தியுள்ளன. ஆகவேதான், கடவுள், நம்பிக்கை, மதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் ஒழிக்கப் பட்டே ஆகவேண்டுமென்று கூறுகிறோம்.
(தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்
‘விடுதலை’ 17.12.1969).