* அண்ணா தி.மு.க. என்பது அமித்ஷா தி.மு.க. ஆன அவலம்!
* அ.தி.மு.க.வின் கடைசி அத்தியாயத்தை எடப்பாடி எழுதிக் கொண்டு இருக்கிறார்
தஞ்சையில் தமிழர் தலைவர் அளித்த பேட்டி
அண்ணா தி.மு.க. என்பது – இப்பொழுது அமித்ஷா தி.மு.க.வாக மாறி விட்டது என்றும், அ.தி.மு.க.வின் கடைசி அத்தியாயத்தை எடப்பாடி பழனிசாமி எழுதிக் கொண்டிருக்கிறார் என்றும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். தமிழ்நாடு ஆளுநரைப்பற்றி கருத்துத் தெரிவிக்கையில், உச்சநீதிமன்றம் ஆளுநருக்குக் குட்டு வைத்த பிறகும் ஆர்.என்.ரவி ஆளுநராகத் தொடரக் கூடாது. அரசமைப்புச் சட்டப்படிதான் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நடக்கிறது என்பதைக் காட்ட விரும்பினால் தமிழ்நாடு ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும், புதிய ஆளுநரை நியமிக்க வேண்டும் என்றார் கழகத் தலைவர்.
நேற்று (12.4.2025) காலை தஞ்சைக்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கும், அதே போல, இந்திய அரசமைப்புச் சட்டத்தினுடைய மாண்புகளைப் பாதுகாப்பதற்கும், மாநில உரிமைகள் என்பவற்றிற்கும் மிகப்பெரிய காவலனாக இருந்து, ஒரு மாநில முதலமைச்சர் எப்படி வழிகாட்ட முடியும் என்பதற்கும், ஓர் எடுத்துக்காட்டான, பதிவுக்குரிய நாள்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு தந்த நாளாகும் (8.4.2025). உச்சநீதிமன்றம் தந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு கடந்த 8 ஆம் தேதி அன்று வந்தது. அத்தீர்ப் பின்படி நிலுவையில், சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 மசோதாக்கள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆளுநர் செயல்பாட்டால் 9 பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தர் இல்லை
அப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த மசோதாக்களினுடைய தத்துவம் முடக்கிப்பட்டிருந்து. மாநிலத்தில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பல்கலைக் கழகங்களில், சுமார் 8 அல்லது 9 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை. அதனுடைய அமைப்பு முறைகளைச் சரிவர நடத்த முடியவில்லை.
நிதி மேலாண்மை சரியாக நடத்தப்படவில்லை. காரணம், எல்லாம் தன்னுடைய அதிகாரம், எல்லாம் நானே என்று சொல்லக்கூடிய ஓர் ஆளுநராக அடாவடித்தனம் செய்தார்; அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான போக்கை மேற்கொண்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள்.
பதவிக் காலம் முடிந்தும் ஆளுநர் ஆர்.என். ரவி பதவியில் நீடிக்கலாமா?
அதை எதிர்த்து இதுவரையில் மக்கள் எத்தனையோ கிளர்ச்சிகள் செய்தும்கூட, அதைப்பற்றி அவரோ, அவரை அனுப்பிய டில்லி நிர்வாகமோ, உள்துறை அமைச்சகமோ, பிரதமரோ கவலைப்படாமல், அவருடைய பதவிக் காலம் முடிந்த பிறகும்கூட, குறிப்பிட்ட அளவிற்கு நாங்கள் இத்தனை ஆண்டுகள் அவரை நீடிக்கிறோம் என்று சொல்லாமல், மறு உத்தரவு வருகின்ற வரையில், அவரை வெளிப்படையாக மீண்டும் கொண்டு வந்தார்கள்.
இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதம் என்று பலர் குரல் கொடுத்தார்கள். காரணம், அவர் நடப்பது, அரசமைப்புச் சட்டத்தின்மீது எடுத்த பதவிப் பிரமாணத்திற்கு விரோதம் என்பதையும் மிகத் தெளிவாகச் எடுத்துச் சொன்னார்கள்.
உச்சநீதிமன்றத்தில் அரிய தீர்ப்பு – புதிய திருப்பம்
அவற்றிற்கெல்லாம் சட்ட ரீதியாகவே, தெருக்களத்தில், மக்கள் மன்றத்தில் தீர்வு காணுவதற்கு முன், நீதிமன்றத்தின் மூலமாகவே, சட்டத்தின்மூலமாகவே தீர்வைக் காணலாம் என்று நம்முடைய திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்கள், தன்னுடைய ஆழ்ந்த ஆளுமையை, நல்ல அறிஞர்களுடைய சிந்தனைகளையெல்லாம் ஏற்று, உச்சநீதிமன்றத்தில் சிறந்த வழக்குரைஞர்களை வைத்து, வழக்குத் தொடுத்தார். தன்னுடைய நிலைப்பாட்டை, தன்னுடைய அரசின் நிலைப்பாட்டை வழக்குரைஞர்கள் மூலம் எடுத்துக் கூறியதன் விளைவாக, உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள், வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு பெருமை மிகுந்த தீர்ப்பை அளித்தார்கள்.
அவர்களின் தீர்ப்பின்படி, காலவரையறையற்று, ஒரு மசோதாவை ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ நிலுவையில் வைத்திருக்க முடியாது என்பதைத் தெளிவாக்கி, காலக் கெடுவினை நிர்ணயித்தார்கள். இது ஒரு புதிய திருப்பம் – இந்திய அரசமைப்புச் சட்ட வரலாற்றில்.
ஆர்ட்டிக்கல் 142 விதியை பயன்படுத்தி, உச்சநீதிமன்றம் சில நேரங்களில், அசாதாரண நேரங்களில், தங்களுடைய ஆளுமையை, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று இருப்பதைப் பயன்படுத்தி, நிலுவையில் இருந்த 10 மசோதாக்கள் முன்தேதியிட்டு நடைமுறைக்கு வந்ததுள்ளன.
சில மசோதாக்கள், குடியரசுத் தலைவரின் மாளிகையில் நிலுவையில் இருந்தன. குடியரசுத் தலைவர் என்று சொன்னால், நடைமுறையில் அது உள்துறை அமைச்சகத்தில் கிடப்பில் இருப்பது என்று பொருள்.
எப்படி, ஆளுநருக்குத் தனியாக ஒரு நிலைப்பாடு இல்லையோ – அரசின் நிலைப்பாடுதான் அவருடைய நிலைப்பாடாக இருக்கவேண்டும் என்பது அரசமைப்புச் சட்டமோ – அதுபோலவேதான், குடியரசுத் தலைவரும்! ஒன்றிய ஆட்சி என்ன நினைக்கிறதோ, அதன்படிதான் அவர் செயல்படவேண்டும் என்பது அரசமைப்புச் சட்ட மரபு – அதுதான் தத்துவம்.
ஆகவே, அதற்கேற்ப மிகத் தெளிவாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடுத்திருக்கின்ற தீர்ப்பின்படி குடியரசுத் தலைவரானாலும், அவரையும் அரசமைப்புச் சட்டம் கட்டுப்படுத்தும்.
குடியரசுத் தலைவருக்குக் கடிவாளம்!
அந்த நிலையில், குடியரசுத் தலைவரும், ஒரு மசோதாவை காலவரையறையின்றி கிடப்பில் போட முடியாது என்று கால நிர்ணயத்தை நிர்ணயித்திருக்கிறது.
இரண்டாவது முறையாக மாநில சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதா, அரசமைப்புச் சட்டப்படி ஒப்புக்கொள்ளப்படவேண்டும். அப்படியில்லாமல், அங்கும் இங்கும் பந்தாடிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த அரசியல் விளையாட்டு எல்லாம் இனிமேல் நடக்காது – நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் மிகத் தெளிவாக ஏற்கெனவே தமிழ்நாடு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 10 மசோதாக்களும் செல்லுபடியாகும் என்று கூறி, வழிகாட்டு நெறிகளை வகுத்துள்ளது உச்சநீதிமன்றம்.
செய்தியாளர்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மவுனமாக இருக்கிறாரே?
தமிழர் தலைவர்: மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று அர்த்தம்.
அப்படித்தான் பொதுவாகச் சொல்வார்கள்! அவர் மவுனமாக இருப்பது மட்டும் போதாது; அவருக்குச் சுயமரியாதை இருக்குமானால், அவருடைய ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருக்கவேண்டும்.
இதற்கு முன்புகூட பேரறிவாளன் வழக்கு உள்பட இரண்டு, மூன்று முறை உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கின்றது. அந்த வழக்குகளைகூட உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
ஆளுநரின் மவுனம் இப்போது முக்கியமல்ல; அவருடைய ராஜினாமாதான் மிக முக்கியமானதாகும்.
அப்படி அவர் பதவி விலகவில்லையானால், ஒன்றிய அரசு அதனுடைய மரியாதையை, மதிப்பைக் காப்பாற்றிக் கொண்டு, நாங்கள் அரசமைப்புச் சட்டப்படிதான் ஆட்சியை நடத்துகின்றோம் என்று காட்ட விரும்பினால், உடனடியாக தமிழ்நாடு ஆளுநரைத் திரும்பப் பெறவேண்டும். வேறொரு ஆளுநரை நியமனம் செய்யவேண்டும்.
அண்ணா தி.மு.க. அல்ல – அமித்ஷா தி.மு.க. என மாறி விட்டது
செய்தியாளர்: அ.தி.மு.க.வும் – பி.ஜே.பி.யும் கூட்டணி அமைத்திருக்கிறதே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: அ.தி.மு.க. முதலில் அண்ணா தி.மு.க. என்றுதான் தொடங்கப்பட்டது. அதனுடைய இன்றைய கதி, அமித்ஷா தி.மு.க.வாக முடிவு பெற்றிருக்கிறது.
ஏற்கெனவே, அம்மா தி.மு.க.வாக இடையில் இருந்தது. பிறகு அடிமை தி.மு.க.வாக ஒரு காலகட்டத்தில் இருந்தது.
இப்போது பரிணாம வளர்ச்சியில், எந்த அளவிற்குக் கீழிறக்கத்திற்குச் சென்றிருக்கின்றார்கள் என்றால், அ.தி.மு.க. என்பது, அமித்ஷா தி.மு.க.வாகி, பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, அமித்ஷா மட்டும்தான் பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி மவுனத்தையே மிக முக்கியமாகக் கொண்டிருந்தார்.
எந்தக் கட்டத்திலும் இனிமேல் பா.ஜ.க.வோடு கூட்டணி கிடையாது என்று சொன்ன வீராதி வீரர் அல்லவா இவர்!
அதுமட்டுமல்ல, வார்த்தைக்கு வார்த்தை, ‘‘அம்மாவின் ஆணைப்படி’’ என்று அம்மாவை பொம்மையாக வைத்து ஆட்சி நடத்தினார்களே, அந்த அம்மா என்ன சொன்னார், ‘‘மோடியா? லேடியா?’’ என்று சவால் விட்டுக் கேட்டாரே!
அவருக்கும் பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. பா.ஜ.க.வோடு எந்தக் காலத்திலும் கூட்டணி கிடையாது என்று பிரகடனப்படுத்திவிட்டு, பிறகு மறுபடியும் இதுபோன்ற நிர்ப்பந்தத்தால், பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தார்.
அதனுடைய விளைவுகளை அவர் அனுபவித்த காரணத்தினால்தான், கடைசியாக அவர் தெளிவான, திட்டவட்டமான முடிவெடுத்து, ‘‘லேடியா? மோடியா?’’ என்று கேட்டார்.
இப்போது இவர்கள், மோடி பக்கம் சென்றிருக்கிறார்கள். அந்த அம்மையாருடைய தலைமையிலிருந்து நழுவிவிட்டார்கள். இவர்களிடம் கொள்கை இல்லை.
தி.மு.க. கூட்டணியை அசைத்துப் பார்க்க முடியாது!
அதேநேரத்தில், எத்தனைப் பேர் கூட்டணி சேர்ந்தாலும், இன்றைய தி.மு.க. தலைமையில் இருக்கின்ற கூட்டணியை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது.
தி.மு.க. கூட்டணியினுடைய வெற்றி 200 இடங்கள் என்று இதற்கு முன்பு சொன்னார்கள்; ஆனால், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிமூலமாக, அந்த 200 இடங்களையும் தாண்டக் கூடிய ஒரு நல்ல வாய்ப்பை அமித்ஷாவே அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க.வின் கடைசி அத்தியாயம் என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் என்று வரலாற்றில் இடம்பெறும்.
எனவே, கடைசி அத்தியாயத்தை எழுதுகின்ற வாய்ப்பை அவருக்கு, அரசியல் கொடுத்திருக்கிறது. அவருடைய கோழைத்தனமான அரசியல், அதைத்தான் செய்திருக்கிறது.
அதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்; இது என்னுடைய ஆசையோ, அவர்களைத் தாக்கவேண்டும் என்பதற்காகவோ சொல்லவில்லை.
மகாராட்டிராவில் என்ன நடந்தது?
முதலில், கட்சியிலிருந்து வெளியேறியவர்களை வைத்துத்தான் உள்ளே நுழைந்தார்கள். முதலமைச்சராககூட ஆக்கினார்கள் சில காலத்திற்கு. மோடி வித்தைகள் போன்று, அமித்ஷா வித்தைகளை செய்தார்.
கொஞ்ச நாள்களுக்கு பொம்மை முதலமைச்சராக வைத்திருந்தார்கள். பிறகு ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்கள், மகாராட்டிராவில்.
மணிப்பூர் வரலாறும் அது. பல மாநிலங்களின் வரலாறு ஏற்கெனவே சுவரெழுத்தாக இருக்கிறது.
அதைப் படிக்க, எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் தவறிவிட்டார்கள். எனவேதான், அதற்கான விளைவை கடுமையாகக் கொடுக்கவேண்டி இருக்கும்.
அ.தி.மு.க. 5 பிளவுகளாக ஆனதற்கு யார் காரணம்?
ஏற்கெனவே அ.தி.மு.க.வை 5 பிளவுகளாக ஆக்கிவிட்டார்கள், அமித்ஷாவும் – பா.ஜ.க.வும்.
அய்ந்தாகப் பிளவுபடுத்திவிட்டு, ஆறாவதாக அணைத்து அந்தக் கட்சியை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே, அழிப்பதில் பலவகை உண்டு.
எதிர்த்து அழிப்பது ஒருவகை. அணைத்து அழிப்பது என்பது ஆரியத்திற்குக் கைவந்த கலையாகும்.
ஆகவே, அணைத்து அழிக்கக்கூடிய கடைசி வரலாறு எழுதப்படவிருக்கிறது.
செய்தியாளர்: அமைச்சர் பொன்முடி சைவ, வைணவ மதங்களை அவமதிக்கும்படி பேசியுள்ளாரே?
தமிழர் தலைவர்: அதற்காகத்தான் தி.மு.க. தலைவர் உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
அமைச்சர் பொன்முடி பேசியதைவிட, பா.ஜ.க.காரர்கள மோசமாகப் பேசியிருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய தலைமை, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
பா.ஜ.க. தலைவர், ‘‘யார் யாரெல்லாம் கொச்சையாகப் பேசியிருக்கிறார்கள் என்கிற ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது’’ என்றெல்லாம் எடுத்துக்காட்டிப் பேசியிருப்பது கொச்சைத்தனமாகும்.
அதைப்பற்றியெல்லாம் அந்த இயக்கமோ, மற்றவர்களோ கவலைப்படாமல், அவரை ஒரு பொறுப்பிலிருந்து மட்டும் கவுரமாக நகர்த்தியிருக்கிறார்கள்.
ஆனால், எவ்வளவுதான் வேண்டியவராக இருந்தாலும், அவர்கள்மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லக்கூடிய துணிவு, அந்தத் திறமை, அந்தத் திராணி தி.மு.க. தலைமைக்கு உண்டு.
ஆகவேதான், அண்ணா சொன்ன கட்டுப்பாட்டை இன்றைய முதலமைச்சர் மிகத் தெளிவாகக் கொண்டு போகிறார் என்பதற்கு இதுவே அடையாளம், நபர்கள் முக்கியமல்ல; அவர்களுடைய செயல்தான் எங்களுக்குக் குறி என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.
உங்களுடைய கேள்விக்கு இதுதான் பதில்.
– இவ்வாறு செய்தியாளர்களிடையே கூறினார் .