சென்னை, ஏப்.11 டாக்டர் அம்பேத்கருக்கு விபூதி, குங்குமம் பூசமாட்டோம் என்ற உத்தர வாதத்தை மீறினால் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,”டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்த எங்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட் டோருக்கு அனுமதி வழங்க பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி மனு கொடுத்தோம். அதில், யாருக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்ப மாட்டோம். அம்பேத்கரின் சிலைக்கு காவி வேட்டி, சந்தன திலகம், விபூதி, குங்குமம் அணிய மாட்டோம் என்று பல உத்தரவாதம் அளித்து இருந்தோம். அப்படியிருந்தும், இதுவரை காவல் துறையினர் எங்கள் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை” என்று கூறியிருந்தார்.
அமைதிக்கு பாதிப்பு
இந்த வழக்கை நீதிபதி ஜி. கே.இளந்திரையன் விசாரித்தார். காவல்துறையினர் தரப்பில், அர்ஜூன் சம்பத்துக்கு அனுமதி வழங்கினால், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்று வாதிடப் பட்டது.
இதையடுத்து நீதிபதி, “மனுதாரர் அளித்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோருக்கு அனுமதியை காவல்துறையினர் வழங்கவேண்டும். உத்தர வாதத்தை மீறினால், அவர்கள் மீது சட்டப்படி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கல்லூரி மாணவி
அதேபோல, “வருகிற 14-ஆம் தேதி அம்பேத்கர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்த ஏராளமானோர் வருவார்கள் என்பதால், காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்களை அனுமதிக்கும்படி காவல் துறையினருக்கு உத்தர விட வேண்டும்” என்று சட்டக்கல்லூரி மாணவி அன்பரசி வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கிற்கு பதில் அளித்த காவல்துறையினர் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்படும் என்று கூறியிருந்தனர்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, “அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த ஏராளமானோர் வருவார்கள் என்பதால், அம்பேத்கர் மணிமண்டபத்தை காலை 7:30 மணி முதல் திறக்க வேண்டும். மேலும், அம்பேத்கர் பிறந்த நாளை அர்த்தமுள்ளதாகவும், அமைதி யாகவும் கொண்டாடப்படுவதை உறுதி செய்ய தேவையான நட வடிக்கைகளை காவல்துறையினர் எடுக்க வேண்டும்” என்று உத்தர விட்டார்.