உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் லால் கோலா குவான் பகுதியைச் சேர்ந்தவர்கள் முகேஷ் சோனி – பிரியான்ஷா சோனி (36) இணையர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பிரியான்ஷா சோனிக்கு அதீத இறைவழிபாடும், பக்தியும் இருந்துள்ளது. அதன் காரணமாக நவராத்திரி விழாவை இந்த ஆண்டு சிறப்புப் பூஜை, விரதம் என்று சிறப்பாக கொண்டாட மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி முதல் தொடங்கிய நவராத்திரி விழா ஏப்ரல் 7 ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. இந்த சூழலில்தான் நவராத்திரி விழாவை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருந்த பிரியான்ஷா சோனிக்கு கடந்த 30 ஆம் தேதி மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இந்து மதத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்களை தீட்டு என்று ஒதுக்கி வைக்கும் மூடப்பழக்கம் இருந்து வரும் சூழலில், நவராத்திரிக்கு பிரியான்ஷா சோனியால் கடவுளுக்கு விரதம் இருந்து பூஜை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளான பிரியான்ஷா சோனி திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் முகேஷ் சோனி அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சற்று உடல்நிலை தேறி வந்துள்ளார். அதன்பிறகு பிரியான்ஷா வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் மீண்டும் அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பிரியான்ஷா உயிரிழந்தார். மூடநம்பிக்கையால் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பக்தியும், மூடநம்பிக்கையும் ஓர் உயிரையே பலி வாங்கிய இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது!
ஒரு கேள்வி எழுகிறது. கடவுளிலும் பெண் கடவுள் இருக்கத்தானே செய்கிறது. இவர்கள் சொல்லுகிறபடிப் பார்த்தால் அந்த மூன்று நாட்களில் அந்தப் பெண் கடவுளச்சிகளை கோயில்களில் இருந்து அப்புறப்படுத்துவார்களா?
கேரள மாநிலம் அலப்பி மாவட்டத்தில் உள்ளது பகவதி அம்மன் கோயில்.
இந்தக் கோயிலில் உள்ள பகவதி என்று கூறப்படும் பார்வதி – பஞ்ச லோகத்தினால் ஆன சிலைக்கு மாதா மாதம் தவறாது மாதவிடாய் வருகிறதாம்! (நம்பி தொலையுங்கள்!)
தலைமைக் குருக்கள் தான் கண்ணால் பாராமலேயே மாதவிடாய் வந்த பகவதி அம்மன் உள்பாவாடையை அவிழ்த்து பக்கத்தில் உள்ள வாரியார் என்னும் உதவியாளரிடம் கொடுப்பாராம். (குறைந்தபட்சம் இதற்காவது ஒரு பெண் பூசாரியை அமர்த்தக் கூடாதா?).
உள் பாவாடையில் இரத்தக் கறை தென்பட்டால் ‘தாழாமன்மதம்’ என்னும் கோயில் தாந்திரிகன் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுமாம். அந்த வீட்டில் உள்ள இல்லக் கிழத்தி பரிசோதித்துப் பார்ப்பாளாம். இரத்தக் கறை அதில் தென்பட்டால், அந்தப் பகவதி அம்மனுக்கு ‘மாதவிடாய்’ வந்துள்ளதாக உறுதிப்படுத்துவாளாம்.
‘உடையாடி’ எனும் அந்த உள்பாவாடை உடனே பொது மக்களுக்கு விற்பனைக்கு வரும். போட்டிப் போட்டுக் கொண்டு அதிக விலை கொடுத்து வாங்குவார்களாம்! அதிலும் வியாபாரம் தான்!
இப்படி எல்லாம் பெண் கடவுளச்சிக்கு மாதவிடாய் வரும் என்று தலப்புராணம் எழுதி வைத்துள்ளார்கள்.
ஆனால் மாதவிடாய் வந்த ஒரு பெண் மட்டும் கோயிலுக்குள் சென்று வழிபட உரிமை கிடையாதாம் – கோயிலுக்குள் நுழைய தடையாம் – அதன் காரணமாக அந்தப் பக்தை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுதான் அர்த்தமுள்ள ஹிந்துமதம் – தெரிந்து கொள்வீர்!