வெற்றித் தீர்ப்பின் மகிழ்ச்சியைப் பாராட்டுவதற்கு தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள் நேரில் வருகை தந்தார். “சமூகநீதியின் சரித்திர நாயகர் என்று உங்களைச் சொல்லி வருகிறோம். இப்போது மாநில உரிமையின் காவலராகவும் இருக்கிறீர்கள்” என்று வாழ்த்தினார். அவருடைய வாழ்த்துகளைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு, “காவல் காக்கும் வேலையைத்தானே மக்கள் என்னிடம் ஒப்ப டைத்திருக்கிறார்கள். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்” என்று சொன்னேன்.
நீண்ட பொதுவாழ்வு அனுபவம் கொண்ட ஆசிரியர் அய்யா உடனே தனக்கேயுரிய சொல்லாற்றலுடன், “சவுகிதார் என்று பிரதமர்மோடி தன்னைத்தானே சொல்லிக்கொண்டார். ஆனால், நீங்கள்தான் சமூக நீதிக்கும், மாநில உரிமைக்குமான உண்மையான காவலர். மக்களின்காவலர்” என்று பாராட்டினார். தாய்க்கழகத்தின் பாராட்டு எப்போதுமே கூடுதல் உழைப்புக்குத் தெம்பு தரக்கூடியது என்றார் முதலமைச்சர்.