கச்சத்தீவு விவகாரம் பேசாமல் மவுனம் காத்தது ஏன்?
மீனவர்கள் நலனில் பிரதமர் மோடி நாடகமா?
ராமேசுவரம், ஏப்.10- இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பின்னரும் தமிழ்நாடு மீனவர்களும், படகுகளும் முழுமையாக விடுவிக்கப் படாததால், மீனவர்கள் நலனில் பிரதமர் மோடி நாடக மாடுகிறாரா? என்று மீனவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.
பிரதமர் மோடி ஏப். 4ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றார். அங்கு அந்நாட்டு அதிபரிடம் இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசினார்.
இதனால், பிரதமர் பயணத்தை முடித்து நாடு திரும்பும்போது அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள்; படகுகளும் விடுவிக்கப் படுமென தமிழ்நாடு மீனவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லை.
இதனால், மீனவர் விடுதலைக்கான பேச்சுவார்த்தை என்பது கண் துடைப்பிற்காக செய்ததாக தெரிகிறது என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜ் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி இலங்கை செல்லும் போது மீனவர்கள் முழுமையாக விடுதலை செய்யப்படுவார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடைசி சந்திப்பில் எங்களிடம் உறுதியளித் திருந்தார்.
இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்திருந்த நிலையில், பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றார்.
ஏமாற்றத்திற்கு ஆளான மீனவர்கள்
இலங்கை அதிபரிடம், இந்திய பிரதமர் மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசியதாக தகவல் மட்டுமே வெளிவந்தது. மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு ஏற்படும் என வெளிப்படையான எந்த அறிவிப்பும் வராதது ஒட்டுமொத்த தமிழ்நாடு மீனவர்களையும் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாக்கியது.
பிரதமர் மோடி மீன வர்கள் பிரச்சினைக்கு கண் துடைப்பு நடவடிக்கையை செய்துள்ளார். 2015இல் அதிபர் மைத்திரிபாலா சிறிசேனாவிடம் மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை வைத்ததின் அடிப்படை யில், இலங்கை சிறையில் இருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 33 பேரை உடனடியாக விடுதலை செய்தார்.
ஆனால் தற்போது இந்திய நாட்டின் பிரதமர் கேட்டும் நடக்கவில்லை.
மீனவர்கள் பிரச் சினையை மனிதாபி மான அடிப்படையில் கையாள வேண்டும் என இலங்கை அதிபர், இந்தியா வந்தபோது பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஆனால் அதன் பிறகு மீனவர்களின் சிறைபிடிப்பும், படகுகள் பறிமுதல் செய்யும் நட வடிக்கைகள் அதிகரித்தது.
ஏன்? இரு நாட்டு அரசுகளும் மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த முன் வரவில்லை? ராமேசுவரம் வந்து சென்ற பிரதமர் மோடி, மீனவர்களை சந்திக்க மறுத்தது ஏன்? மீனவர்கள் துயரத்தை அறியாத மோடி, நிகழ்ச்சி மேடையில் மீனவர்களுக்கு துணையாக இருப்போம் என பேசியது மிகவும் வேடிக்கையானது.
கச்சத்தீவு குறித்து
வாய் திறக்காதது ஏன்?
கச்சத்தீவை மீட்க வேண்டுமென தமிழ் நாடு அரசு சார்பில் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் தனது பேச்சில் கச்சத்தீவைப் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. வெறுமனே மீனவர்களை விடுவித்தது தொடர்பாக மட்டும் பேசிவிட்டு சென்றார்.
நாட்டுக்கு அதிக பொருளாதாரத்தை ஈட்டித் தரும் மீனவர்களை மோடி அரசு வஞ்சிக்கிறது. 2011இல் காங்கிரஸ் ஆட்சியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கினார்கள். ஆனால் மோடி அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்க வில்லை. பிரதமரின் இந்தப் பயணம் பெரும் முதலாளிகளுக்காக இருந்திருக்கலாம்’’ என்றார்.
எப்போதுதான் தீருமோ?
மீனவர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பிரதமரின் ராமேசுவரம் வருகையின்போது நாங்கள் அனைவருமே எதிர்பார்த்தது கச்சத்தீவு குறித்து பேசி நம்பிக்கையை ஏற்படுத்துவார் என்றுதான். ஆனால், அது நடக்கவில்லை. பிரதமரும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அடிக்கடி ராமேசுவரம் வந்து செல்கின்றனர்.
ஆனால், இத்தீவின் முக்கிய தொழிலாகவும், இந்தியாவுக்கு பெரும் வெளிநாட்டு செலாவணியை பெற்றுத் தரும் மீன்பிடித்தொழிலில் உள்ள சிரமங்களை களைய முன்வருவதில்லை. இம்முறை மீனவ பிரதிநிதிகளை சந்திப்பார்கள் என தகவல் கிடைத்தது. அதற்கான வாய்ப்பை நாங்களும் எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால், அது நிறைவேறவில்லை. எங்கள் பிரச்சினை எப்போதுதான் தீரும்’’ என்றனர்.