சூரிய சக்தி மூலம் இயங்கும் பொருள்களின் விற்பனை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பான தொழில்களும் அதிகரித்துள்ளன. புதிய கண்டுபிடிப்பாக, சூரிய சக்தியை சில இரசாயனங்களுக்குள் அடைத்து 18 ஆண்டுகளுக்குச் சேமித்து வைக்க முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சுவீடனின் சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன் இம்மூன்று வாயுக்களையும் திரவ நிலையில் அடைத்து, அதில் சூரிய ஒளி பாயும் போது, திரவ வாயுக்களின் மூலக்கூறுகளில் மாற்றம் ஏற்படுவதைக் கண்டறிந்துள்ளது. இதன் மூலம், சூரிய ஒளியின் சக்தியை 18 ஆண்டுகளுக்குச் சேமித்து வைக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஒருமுறை இந்தத் திரவம் அடைத்திருக்கும் மின் கலனை மின்னேற்றம் (சார்ஜ்) ஏற்றிவிட்டு, தேவைப்படும் நேரத்தில் மூலக்கூறுகளைச் சூடாக்கி பயன்படுத்தலாமாம். வாட்டர் ஹீட்டர், சிறிய மின் அடுப்புகள், விளக்குளுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை இந்தத் திரவ மின் கலனால் வழங்க இயலும்.
அதிகபட்சம் 250 வாட் வரையில் சக்தியைச் சேமிக்க முடியும் என்பதையும் சுவீடன் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. தீவிர ஆய்வில் உள்ள இந்த திரவ பேட்டரி, இன்னும் 10 ஆண்டுகளில் சந்தைக்கு விற்பனைக்காக வரவிருக்கிறது. சூரிய மின்சக்தி துறையில் மிகப்பெரிய மைல் கல்லாக இந்தத் தொழில்நுட்பம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.