சாயம் வெளுத்தது : ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சட்ட பேரவையில் அதிமுக, பிஜேபி தவிர மற்ற கட்சிகள் பாராட்டு

viduthalai
2 Min Read

சென்னை, ஏப்.9- ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு சட்டப்பேரவையில் நேற்று (8.4.2025) அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்த தீர்ப்பை அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சிகள் பாராட்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேரவையில் பேசிய முதலமைச்சர் இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என பெருமிதம் தெரிவித்தார்.

பெரிய வெற்றி

இதையடுத்து உறுப்பினர்கள் எஸ்.பழனி நாடார் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ஜெ.முகம்மது ஷாநவாஸ் (விசிக), தி.சதன் திருமலைக்குமார் (மதிமுக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), எம்.எச். ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும், தமிழ்நாடு அரசையும், முதல்வரையும் பாராட்டியும் பேசினர்.

சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி: அகில இந்திய அரசியலுக்கும், அரசியவாதிகளுக்கும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில், முதலமைச்சர் இந்த தீர்ப்பை பெற்று தந்துள்ளார். இது முதலமைச்சரின் முயற்சிக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும். தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 சட்ட முன்வடிவுகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது செல்லாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அமைச்சர் துரைமுருகன்: வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு குறித்து, இந்த பேரவையில் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். முதலமைச்சரை இளம் வயதில் இருந்து தெரியும். மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் மடியில் நான் வளர்ந்தவன். பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த முதலமைச்சரும் செய்யாத சாதனையை நம் முதலமைச்சர் செய்துள்ளார்.

மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞர், மாநில சுயாட்சிக்கு அடிகோலினார். அவரது மகன் இன்றைக்கு ஆளுநர் தேவையில்லை என்ற அளவுக்கு கொண்டு வந்துள்ளார். இங்குள்ள ஆளுநரைப் பார்த்து தான் மற்ற ஆளுநர்களுக்கு ஆணவம் வந்தது.

பேரவைத் தலைவர் மு.அப்பாவு: அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை மட்டும்தான் சட்டப்பேரவையில் வாசிக்கும் உரிமை ஆளுநருக்கு உள்ளது என்பதை, இந்த சட்டப்பேரவைதான், இந்த முதல்வர்தான் இந்தியாவுக்கே வழி காட்டினார். அதேபோல்தான் இப்போதும் உச்ச நீதிமன்றத்தில் நீதியை முதலமைச்சர் பெற்று தந்துள்ளார்.

நாகப்பட்டினத்தில் இயங்கி வரும் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் வைக்க வேண்டும் என அதிமுக ஆட்சி காலத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டு கிடப்பில் கிடந்தது. மீண்டும் இரண்டாவது முறையாக இதே சட்டப்பேரவையில் அந்த பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் வைக்க வேண்டும் என்று மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியது இன்றைய முதலமைச்சர்தான். அதற்குக்கூட நன்றி சொல்ல அதிமுக தயக்கம் காட்டுவது வேதனையான விஷயம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று நமது மகிழ்ச்சியை வெளிப் படுத்தியுள்ளோம். அதேபோல், எதிர்க் கட்சியான அதிமுக மற்றும் மத்தியில் ஆட்சி செய்கின்ற பாஜக ஆகிய இரண்டு கட்சிகளையும் தவிர, மற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் பாராட்டியும், வாழ்த்தியும் பேசி அந்தத் தீர்ப்பினை வரவேற்றுள்ளனர்.

இந்நேரத்தில், நமது அரசமைப்பு சட்டத்தில் மாநில சட்டப்பேரவைகளுக்கு அளிக்கப் பட்டிருக்கக் கூடிய உரிமைகளை நிலைநாட்டிய உச்ச நீதிமன்றத்துக்கு, தமிழ்நாடு அரசு, அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *