பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

3 Min Read

சென்னை, ஏப்.8- வக்பு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் 6.4.2025 அன்று கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் வக்புதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகையை கண்டித்தும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 6.4.2025 அன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், ‘இந்தியா’ கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமை தாங்கினார். இதில், மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், மேனாள் தலைவர் தங்கபாலு, மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அருணாச்சலம், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

மேலும், தமிழக காங்கிரஸ் துணை தலைவர் கோபண்ணா, பொதுச் செயலாளர்கள் காண்டீபன், தளபதி பாஸ்கர், ஆர்.டி.அய். பிரிவு துணைத் தலைவர் மயிலை தரணி, ஓ.பி.சி. அணி மாநில துணைத் தலைவர் துறைமுகம் ரவி ராஜ், மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் அகமது அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-

இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பா.ஜனதாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். என்.ஆர்.சி., குடியுரிமை திருத்த சட்டம், பொது சிவில் சட்டம் என தற்போது வக்பு திருத்த சட்டத்தை கையில் ஏந்தி உள்ளார்கள். இந்த திருத்த சட்டம் அரசியல் சாசன சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது. இந்த சட் டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அந்த சட்டம் செல்லாது என அறிவிக்கப்படும்.
முந்தைய வக்பு சட்டத்தின் கீழ் யார் வேண்டுமென்றாலும், வக்புக்கு கொடை வழங்கலாம். ஆனால், இந்த சட்டத்தின்படி இனி பத்திரத்தின் மூலமாகதான் வக்புக்கு கொடை கொடுக்க முடியும். அதிலும் 5 ஆண்டுகள் இஸ்லாமிய மதத்தை பின்பற்றி வருகிறேன் என்று நிரூபித்தால்தான் கொடை வழங்க முடியும்.
மேலும், வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை யும் நியமிக்கலாம் என மசோதா கூறுகிறது. இந்து கோவில்களில் அறங்காவலராக இஸ்லாமியர் களை நியமிக்க முடியுமா? இதை இஸ்லாமியர்கள் கூட ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்த சட்டம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.

செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ‘நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க வக்பு திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது. அடுத்து, கிறிஸ்தவர்கள், பழங் குடியினர், மலைவாழ் மக்களுக்கு எதிராக சட்டத்தை இயற்றுவார்கள்’ என்றார்.

நாகையில்…

இதேபோல், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட வருமான வரித்துறை அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நாகை காங்கிரஸ் தலைவர் அமிர்தராஜா தலைமை தாங்கினார்.
அப்போது பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் நாகை பழைய கடற்கரையில் இருந்து படகு மூலம் ராமேசுவரத்துக்கு செல்ல முயன்றபோது காவல் துறையினர் காங்கிரஸ் கட்சியினர் 20 பேரை கைது செய்தனர்.

குமரியில்…

குமரி மாவட்டம் களியக் காவிளையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார்(கிள்ளியூர்), தாரகை கத்பர்ட் (விளவங்கோடு) உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *