லக்னோ பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவர் பதவியேற்பு விழாவின்போது பல்கலைக்கழக நிர்வாக ஏற்பாட்டின் படி 40 நாள் யாகம் நடத்தி 7 ஆறுகளின் புனிதநீர் தெளித்து இருக்கையில் அமரவைக்கப்பட்டார்.
லக்னோ பல்கலைக்கழகத்தின் ஹிந்தி துறையின் புதிய தலைவர் பேராசிரியர் பவன் அகர்வால் தலைவர் பதவியை ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அவர் பதவி ஏற்பதற்காக 7 புனித ஆறுகளில் இருந்துகொண்டுவரப்பட்ட நீரைக் கொண்டு சுமார் 40 நாட்களாக தொடர்ந்து பூஜை மற்றும் இதர மத நிகழ்வுகள் நடந்து வந்தன. இறுதியில் அவரை இருக்கையில் அமரவைக்க யாகத்தில் வைக்கப்பட்ட நீரை பல்கலைக்கழகம் முழுவதும் தெளித்தனர். பின்னர் அவரது இருக்கையில் வேதமந்திரம் முழங்க அவர் அமரவைக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பிரிவு பணியாளர்களும், மாணவர்களும் கலந்துகொள்ளவேண்டும் என்று சுற்றறிக்கை விடப்பட்டிருந்தது
உலகின் வேறு எந்த நாட்டின் பல்கலைக் கழகங்களிலாவது இத்தகைய காட்சிகளைப் பார்க்க முடியுமா? ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் சக பேராசிரியர்கள் இந்தியாவின் ஒரு பல்கலைக்கழகத்தின் ஒரு துறையின் தலைவர் அறையில் உட்கார்ந்திருக்க, பூஜை, யாகம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டதாவது: ‘‘இதில் என்ன தவறு? இதுதான் நமது இந்தியக் கலாச்சாரம்; இத்தனை ஆண்டுகள் நாம் அந்நியர்களின் மோகத்தில் அவர்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றி நமது பாரம்பரியத்தை கேலி செய்யும் அளவிற்குச் சென்றுவிட்டோம். அதன் விளைவுதான் நமது கலாச்சார நிகழ்வையே ஏளனம் செய்து கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்’’ என்று விளக்கம் தருகிறது.
இதுதான் இந்தியாவின் கலாச்சாரம் என்றால் இதைவிடக் கேடு ெகட்டது எது?
இந்தியாவில் புனித ஆறுகள் என்று சொல்லப்படுபவை எல்லாம் பெரும்பாலும் ஆலை தொழிற்சாலைகளின் கழிவுகளை உள்வாங்கக் கூடியவைதான்.
சராசரியாக நாள் ஒன்றுக்கு 400 உடல்கள் கங்கையில் எரிக்கப்பட்டு, கங்கையாற்றில் கரைக்கப்படுகின்றன கிழட்டுப் பசுக்கள் உயிரோடு தள்ளப்படுகின்றன.
கங்கையில் இறந்தால் முக்தி என்ற நம்பிக்கையில் கங்கையில் இறந்தவர்களின் உடலை அரைகுறையாக எரிந்த நிலையில் கங்கை நீரில் கரைத்து விடுவார்கள்; அப்பொழுது தான் செத்தவருக்குச் சிவலோகம் அல்லது வைகுந்தப் புண்ணியம் கிடைக்கும் என்பது கீழ்த் தரமான மூடநம்பிக்கையாகும்.
கங்கையின் அசுத்தத்தால் மக்களின் உயிருக்கு ஆபத்து, அதனைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று வழக்குரைஞர் எம்.சி. மேத்தா என்பவர் 1995இல் உச்சநீதிமன்றத்தில் வழக்கே தொடர்ந்ததுண்டே.
‘பாவம் போக்கும்’ காசி நகரத்தின் சாக்கடை நீர் முழுவதும் கங்கையில்தான் நாளும் கலக்கிறது.
இந்தியாவில் குழந்தைகள் மரணம் 100–க்கு 94 ஆகும். ஆனால் காசியையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மட்டும் 1000க்கு 133.94 ஆகும்.
இவற்றையெல்லாம் புனித நீராகக் கருதி அதனைக் கொண்டு வந்து 40 நாட்கள் பூஜைகள் நடத்தி, லக்னோ பல்கலைக் கழகத்தின் ஹிந்தி மொழித் துறைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்க வந்தவரை அந்தப் பதவியில் அமர்த்துகிறார்கள் என்றால் இதைவிடக் கொழுந்து விட்டு எரியும் மூடநம்பிக்கையை எங்கே காண முடியும்?
அதுவும் ஒரு பல்கலைக் கழகத்தில் இத்தகைய ‘ஆபாசமான’ புழுதிக் கூத்து! போகிற போக்கைப் பார்த்தால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்ற 51A(h) என்ற பிரிவை நீக்கினாலும் ஆச்சரி யப்படுவதற்கில்லை. அவர்கள் அமைக்க விரும்பும் ஹிந்து ராஜ்ஜியத்தில் இதற்கெல்லாம் இடம் ஏது?