கவிஞர் கலி.பூங்குன்றன்
கோயிலில் தாழ்த்தப்பட்டோர்
நுழைவு பற்றி ஜெயேந்திரர்;
ஆதி – திராவிடர், அரிஜன் போன்றவர்கள் எல்லாம் கோயிலுக்குச் சென்றுவிட்டுத்தான் வருகிறார்கள். அதில் பிரச்சினை இல்லை, ‘தலித்’ என்ற பெயரில் வரும்போதுதான் குழப்பம். ஆரோக்யசாமி, யூசுப் போன்ற பெயர்களில் வருகிறார்கள். இதனால் கோயிலுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடும் என பயப்படுகிறார்கள். நான்கு பேர், அய்ந்துபேர் போனால் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை, கும்பல் கும்பலாகப் போனால் எப்படி? கோயிலில் பாதுகாப்புக் கருதியே அவ்வாறு தடை செய்யப்படலாம்.
(தினகரன் 16-11-2002)
• • •
தீண்டாமை ஒழிப்பு வீரரா இவர்?
10-11-2002 அன்று மதுரை மாவட்டம் தும்பைப் பட்டிக்குச் சென்றார் ஜெயந்திரர். அது முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த ஊர். அவ்வூர் வீரகாளியம்மன் கோயிலில் வந்து இறங்கினார், அக்கோயில் பூசாரி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர். அவர் தீப ஆராதனை காட்டினார். அதனைக் கும்பிட்ட ஜெயேந்திரர் அவர் கொடுத்த பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவரை யாரும் நெருங்கி விடாதபடி கவனித்துக் கொண்டனர் அவரின் பாதுகாவலர்கள். சுவாமிகளை யாரும் தொட்டு விடக் கூடாது என மைக்கில் திரும்பத் திரும்ப அறிவித்துக் கொண்டே இருந்தனர். ஜெயேந்தி ரரும் தன் தோளில் அணிந்திருந்த சால்வையை எடுத்து தலித்துகள் தன்னைத் தீண்டி விடாதபடி கால்களை மறைத்துக் கொண்டார்.
கோயில் நிகழ்ச்சிக்குப்பின் கக்கன் நினைவு மண்டபத்துக்கு வந்து ஜெயேந்திரர் மாலையிடுவார் எனத் திட்டமிடப்பட்டு இருந்தது. மக்களும் அங்கே காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அவர் அங்குச் செல்லாமல் புறப்பட்டு விட்டார்.
(நக்கீரன் 10-11-2002)
• • •
ஜெயிலுக்குப் போவோர் யார்?
கேள்வி: சமீப காலமாக மக்களை ஏமாற்றும் போலிச்சாமியார்கள் நிறைய பிடிபடுகிறார்கள். யார்மீது தவறு?
ஜெயேந்திரர் பதில்: மஷனுக்குப் பேராசை இருக்கிற வரைக்கும் இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். என்னா சுருக்கு வழியில் சம்பாதிக்கனும்னு ஆசைப்படுகிற நிறைய பேர் போலிச் சாமியாராக எழுந்தருளி இருக்காங்க. ஜனங்களும் இவங்கள நம்பிப் போறாங்க. இதனால ஜனங்க, சாமியார்கள் இரண்டு பேருக்குமே ஆபத்து வருது, ஆனா, ஜனங்க தப்பிச்சு வேறொரு சாமியார்கிட்ட போயிடு றாங்க, இவங்கள நம்பி வேஷம் போட்ட சாமியார்கள்தான் ஜெயிலுக்குப் போறாங்க. அதனால் இந்த விஷயத்தில் சாமியார்கள்தான் பொது ஜனங்ககிட்ட இருந்து பயந்து ஒதுங்கியிருக்க வேண்டும். (சொல்லிவிட்டு வாய்விட்டு ரசித்துச் சிரிக்கிறார்)
(குங்குமம் – 27-8-1998)
குறிப்பு: அப்படி சொன்னவரே ஜெயிலுக்குப் போனார் என்பதுதான் சுவையான சங்கதி ஹ…ஹ…ஹ…
• • •
இமாம் பசந்த் இனி “இராம் பசந்த்” அண்மையில் மதுரைக்கு விசிட் அடித்தார் சங்கராச்சாரியார். அவரைச் சந்தித்து ஆசி வாங்கிய பக்தர்கள் கூட்டத்தில் ஒருவர் மாம்பழங் கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு, “இது உரம் போடாமல் இயற்கையாக காய்த்துப் பழுக்கவச்ச பழம்” என்று சொல்ல…
“அப்படியா? இந்த மாம்பழத்தின் பெயர் என்ன?” என்று ஆர்வமாகக் கேட்டிருக்கிறார் சங்கராச்சாரியார்.
உடனே அந்த பக்தர் ‘இமாம் பசந்த்’ என்று சொல்லியிருக்கிறார்.
” மாம்பழத்திற்கு இப்படி ஒரு பெயரா?” என்றபடி சிரித்த சங்கராச்சாரியார் “பரவா யில்லை சீக்கிரமே இதையும் இராம் பசந்த்துன்னு மாத்திட்டாப் போச்சு” என்றாராம்.
(ஜூனியர் விகடன்’ 1-6-20)
குறிப்பு: பழத்தின் பெயரைக் கேட்கும்போது கூட இப்படி ஒரு துவேஷம்!
• • •
சர்ச்சைக்குரிய இடத்தில்
இராமர் கோயில் கட்ட வேண்டும்
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி யொன்றில் காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அயோத்தியில் தற்போது சர்ச்சைக்கு உரிய இடம் என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் இராமர் கோயில் கட்டப்பட வேண்டும், இதற்கான சமரச முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன்”
(‘தினத்தந்தி’ 5-6-2008)
இவர்தான் இரு மதத்தவர்களுக்கிடையே சமரசம் செய்யச் சென்றார் என்பது சரியான தமாசுதான்.
காஞ்சி சங்கராச்சாரியார் குறித்த மேற் கண்ட தகவல்கள் மூலம் அவரின் பார்ப்பன வெறியும், இந்துமதக் குரூரமும் தான் என்கிற ஆணவமும் விளங்கவில்லையா?
இவர்கள்தான் ஆணவம், கன்மம், மாயைகளைத் துறந்தவர்களாம்! – வாயால் சிரிக்க முடியுமா?
3
இவர்களை அடையாளம் காண வேண்டாமா? “ஒரே சுடுகாடு கூடாது”
எல்லா ஜாதியினருக்கும் ஒரே சுடுகாடு இருக்க வேண்டும் என்ற கருத்தை காஞ்சி சங்கராச்சாரியார் எதிர்த்துள்ளார். எல்லா வகுப்பினரும் ஒரே வகையான எரிப்பு முறையைக் கடைப்பிடிக்காததால் இது முடியாத ஒன்று என்றார் அவர்.
இது சாத்தியப்படாது என்று கூறிய சங்கராச்சாரி, ஒரே சுடுகாடு தேவை என்பதை வலியுறுத்தவில்லை.
மின்சார சுடுகாடு இந்து தர்மத்துக்கு எதிரானது என்று அவர் கூறினார்.
இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டும் என்று கூறிய அவர், மதமும், அரசியலும் ஒன்றாக கலக்கக் கூடாது என்றார். நாகர்கோயிலில் நடைபெற்ற வகுப்புக் கலவரத் தில் சில அரசியல் கட்சிகளுக்குப் பங்கு உண்டு என்று அவர் குற்றம் சாட்டினார். மதுரையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்த போது இவ்வாறு கூறியிருக்கிறார்.
(‘விடுதலை’ 8.3.1982 திங்கள் பக்கம் 1)
• • •
பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது
Sankaracharya Against Quota for women in politics. Virtually rejected for the demand for Seperate reservation for women.
(‘The Pioneer’ 17-3-1997)
• • •
செருப்புக்குப் பூஜை!
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிருக்கை கிராமத்தில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பெயரால் மணி மண்டபம் – ரூ.3 கோடி செலவில்; 151 தூண்கள்; முழுக்க கிரானைட் கற்கள்; அவரது செருப்பு வைத்துப் பூஜிக்கப்படும்.
(‘ஆனந்த விகடன்’, ஜூன் 1997)
• • •
பி.ஜே.பி.க்கு ஆதரவு
திருவானைக்காவில் கோயில் திருப்பணிகளைத் துவக்கி வைத்து பின் செய்தியாளர்களிடம் ஜெயேந்திரர் கூறியது.
பி.ஜே.பி. என்றால் வெறுக்காமல் ஸ்திரமான அரசு ஒன்றை அமைக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்
(‘தினமலர்’, 19-3-1998)
• • •
அணுகுண்டுக்கு ஆதரவு
அணுகுண்டு சோதனை வெற்றிக்கு ஜெயேந்திரர் பாராட்டு!
(‘தினமணி’, 16-5-1998)
• • •
பாபர் மசூதி – ஒரு கட்டடம்!
அயோத்தியில் கட்டடத்தை இடிப்பது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை.
(‘தினமணி’ 27.11.2000 பக்கம் 1)
குறிப்பு: பாபர் மசூதி சங்கராச்சாரியார் பார்வையில் ஒரு கட்டடம் – அவ்வளவுதான்: மற்றவர்களின் வழிபாட்டுத்தலம் என்றால் இவர்களுக்குக் கிள்ளுக்கீரை – அப்படித்தானே!
இந்துக் கோயில்கள் மட்டும் கட்டடம் அல்லாமல் வேறு என்னவாம்
விஜயகாந்துக்குத் தூபம்!
ரஜினியுடன் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கலாம். விஜயகாந்த்துக்கு ஜெயேந்திரர் அட்வைஸ்.
(‘குமுதம்’, 18.1.2001)
குறிப்பு: ஒரு சங்கராச்சாரியாருக்கு இதுதானா வேலை? இன்றைக்கு விஜயகாந்த் என்கிற நடிகர் கட்சி ஆரம்பித்துள்ளதற்கு இவர்தான் காரணமோ!
காசைக் கரியாக்கு!
தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பது மதம் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் அரசியலோ, நீதிமன்றமோ தலையீடு செய்வது சரியாக இருக்காது.
தீபாவளிப் பண்டிகைக்குக் காரணமான நரகாசுரன் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் கிருஷ்ண பரமாத்வால் வதம் செய்யப்பட்டான். எனவே அந்த நேரத்தில் பட்டாசுகளை வெடிப்பதில் இந்துக்கள் அதிக ஆர்வம் காட்டுவது எப்படி தவறாகும்?
(“தினமலர்”, 2.11.2001)
குறிப்பு: காசைக் கரியாக்காதே என்று அறிவுரை சொல்ல வேண்டியவர் இந்து மதம் என்கிற வெறியுடன் இப்படிச் சொல்லுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
தமிழ்மீது வெறுப்பு
கரூர் மாவட்டம் திருமலை முத்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு 9.9.2002 அன்று தமிழில் மந்திரம் சொல்லி நடைபெற்றது. இதனைக் கண்டித்து கோயில் பொறுப்பாளர்களுக்குக் கடிதம் எழுதிய ஜெயேந்திர சரஸ்வதி, கும்பாபிஷேகங்களில் சமஸ்கிருத மந்திரங்கள் தொன்று தொட்டு ஓதி வரும் வழக்கத்தை கைவிடுவது முறையல்ல என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
(‘இந்தியா டுடே’, 2.10.2002)
குறிப்பு: தமிழில் குடமுழுக்கு நடந்ததால் கோயில் குருக்கள் பார்ப்பனர்கள் கோயிலை இழுத்து மூடினார்கள். தீட்டுக் கழித்துத் தான் மீண்டும் கோயிலைத் திறந்தார்கள். பார்ப்பனர் களும் தமிழர்கள்தான் என்று சொல்லுபவர்கள் இந்த இடத்தைக் கவனிப்பார்களா?
பார்ப்பன மயமே!
காஞ்சீபுரத்தை அடுத்த கலவையில் சங்கர மடம் நடத்தும் முதியோர் இல்லத்தில் 160 பேர்; வேத பாட சாலையில் 21 சிறுவர்கள்; அனைவரும் பிராமணர்கள்.
(‘தினமணி’, 16.1.2005)
• சுடுகாட்டிலும் கூட பேதம் இருக்க வேண்டும்.
• பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது
• செருப்புக்குப் பூஜை
• பி.ஜே.பி.க்கு ஆதரவு
• தமிழில் குடமுழுக்குக் கூடாது
• பார்ப்பனர்களுக்கு மட்டுமே இடங்கள்.
இப்படிக் கூறுபவர்கள் நடந்து கொள்பவர்கள் தமிழின விரோதிகள் அல்லவா – சமத்துவத்துக்கு எதிரிகள் அல்லவா?
இவர்களை இன்னமும் லோகக் குரு என்று மதிப்பவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?
தமிழர்களே சிந்தியுங்கள்!
(தொடரும்)
குற்றப் பத்திரிகை
‘காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் வியாழக்கிழமை இரவு (11.11.2004) கைது செய்யப்பட்ட ஜெயேந்திரர் வெள்ளிக்கிழமை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சின்ன காஞ்சிபுரம் தெற்கு மாட வீதியைச் சேர்ந்த ஆனந்த சர்மா மகன் சங்கரராமன். இவர் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். 2004 செப்டம்பர் 3-ஆம் தேதி மாலை கோயில் அலுவலகத்தில் இருந்த சங்கரராமனை அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கோயில் வளாகத்திலேயே நடைபெற்ற இக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை செய்யப்படுவதற்கு 2 நாள்களுக்கு முன்னர் ஜெயேந்திரருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து சங்கரராமன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். உங்களைப் பற்றிய எல்லா விஷயத்தையும் வெளியில் சொல்லி விடுவேன் என்று அவர் அக்கடிதத்தில் ஜெயேந்திரரை மிரட்டியுள்ளார். அதன் பிறகே அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
காலை 6.15 மணிக்கு போலீஸ் வாகனத்தில் காஞ்சீபுரம் குற்றவியல் நடுவர் மன்றத்திற்கு (எண்1) ஜெயேந்திரர் அழைத்து வரப்பட்டு நீதிபதி ஜி. உத்தமராஜ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார் – அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் காலை 7.35 மணிக்கு வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குற்றப்பிரிவு 302,120-பி, 34,201 ஆகிய பிரிவுகள்
கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் போலீசார் ஜெயேந்திரர்மீது பதிவு செய்துள்ளனர்.
(‘தினமணி’ 13 நவம்பர், 2004,
சனிக்கிழமை, சென்னை)