மூன்றாவது மொழி தேர்வு:
இந்தி பேசப்படாத மாநிலங்களில் இந்தி-இந்தி பேசப்படும் மாநிலங்களில் சமஸ்கிருதம்
• மைத்ரி பொரேச்சா
• சம்பவி பார்த்தசாரதி
• விக்னேஷ் ராதாகிருஷ்ணன்
மூன்றாவது மொழியாக பிற மொழிகளைக் கற்பிக்கும் / கற்கும் கல்வி வசதிகள் வழங்கப்படாததால், ஹிந்தியும், சமஸ்கிருதமும் தெரிவு செய்யப்பட்டுள்ளன என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
மும்மொழிக் கல்வி திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்துவிட்டதைச் சார்ந்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண போதுமான புதிய புள்ளி விவரங்கள் இன்னும் கிடைத்தபாடில்லை. தற்போது மாநில பள்ளிகளில் கற்பிக்கப்படும் மொழிகள் பற்றிய பட்டியல் கிடைத்தால் தான் சரியான புரிதல் ஏற்படும். முக்கியமான தரவுகள் இத்தகைய பட்டியல் மூலம்தான் கிடைக்கும்.
மக்களவையில் தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இது பற்றி கேள்வி எழுப்பினார். அவருக்கு அளிக்கப்பட்ட பதில் மூலம் மூன்று மொழிகள் கற்பிக்கப்பட்டு வரும் பள்ளிகள் எத்தனை என்பது மட்டுமே தெரியவந்ததே தவிர அவை என்னென்ன மொழிகள் என்று குறிப்பிடப்படவில்லை.
அகில இந்தியப் பள்ளிக்கல்வி ஆய்வு கடைசியாக நடந்தது 2009 ஆம் ஆண்டில். ஆனால் அதன்படி சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் வெளிப்படவேயில்லை. கல்வித் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த சிலரின் உதவியால் ‘தி இந்து’ நாளிதழுக்கு அந்த அறிக்கையின் நகல் ஒன்று கிடைத்துள்ளது. குறிப்பாக அந்த 2009 ஆம் ஆண்டின் ஆய்வு அறிக்கையிலும் ஆரம்பக் கல்விப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வரும் மொழிகள் பற்றிய தரவுகள் மட்டுமே பள்ளிகள் வாரியாக குறிப்பிடப்பட்டிருந்தன. முழுமையான புள்ளி விவரங்கள் அதிலும் காணப்படவில்லை. 1995ஆம் ஆண்டு மக்களவையில் இது பற்றிய ஒரு கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில் 27 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும், பள்ளிகளில் மும்மொழித் திட்டம் நடைமுறையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மொழிகள் எவை என்று குறிப்பிடப்படவில்லை.
2009 ஆம் ஆண்டின் ஆய்வுப்படி பார்த்தால், ஆரம்பக்கல்வி நிலையில் பீகாரில் 99.1 சதவிகித பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்பட்டு வருவது தெரிய வருகிறது, 64 சதவிகிதப் பள்ளிகளில் ஆங்கிலமும், 56 சதவிகிதம் பள்ளிகளில் சமஸ்கிருதமும் கற்பிக்கப்பட்டு வருவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மற்ற மொழிகள் 8 சதவிகிதப் பள்ளிகளில் மட்டுமே கற்பிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் 94 சதவிகிதப் பள்ளிகளில் இந்தி; 75.3 சதவிகிதப் பள்ளிகளில் ஆங்கிலம்; 65.2 சதவிகிதப் பள்ளிகளில் சமஸ்கிருதம், துவக்கப் பள்ளிக் கல்வி நிலையங்களில் கற்பிக்கப்பட்டு வருவது தெரியவருகிறது. 7 சதவிகிதப் பள்ளிகளில் மட்டுமே இதர மொழிகள்.
உத்ராகாண்டில் 99.5 சதவிகிதப் பள்ளிகளில் இந்தி; 85.5 சதவிகிதப் பள்ளிகளில் ஆங்கிலம்; 79.4 சதவிகிதப் பள்ளிகளில் சமஸ்கிருதம்; 2.6 சதவிகிதப் பள்ளிகளில் இதர மொழிகள்.
மேற்கண்ட மூன்று மாநிலங்கள் சார்ந்த தரவுகள் மூலம் நமக்குத் தெரிய வருவது:
இந்தி பேசப்படும் மாநிலங்களில் மூன்றாவது மொழியாக கற்பிக்கப்பட்டு வருவது பெரும்பாலும் சமஸ்கிருதமாகவே உள்ளது. இது குறிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. காரணம் – 1968 ஆம் ஆண்டின் தேசியக் கல்வி திட்டம் இந்தி பேசப்பட்டும் மாநிலங்களில் ஏதேனும் ஒரு தென்னிந்திய மொழி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படலாம் என்று குறிப்பிட்டிருந்தது.
இமாச்சலப் பிரதேச கல்வித் துறையினர் ‘தி இந்து’ நாளிதழுக்கு கீழ்கண்டவாறு தகவல் அளித்துள்ளனர்:
ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் தெலுங்கு, தமிழ் மற்றும் ஃபிரெஞ்சு மொழிகள் கற்பிக்கப்படவில்லை. இமாச்சலப் பிரதேசத்தின் பள்ளிகளில் பஞ்சாபி மொழி கற்பிக்க 100 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதி பெற்றுள்ளன. அவற்றுள் 34 சதவிகிதப் பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன. 100 உருது மொழி ஆசிரியர் பணியிடங்களில் 71 சதவிகிதம் காலியாக உள்ளன. ஆனால் 5078 சமஸ்கிருத ஆசிரியர் பணியிடங்களில் 9.8 சதவிகித பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.
அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதையும், காலியாக உள்ள பணியிடங்கள் மிகவும் குறைவாகவே இருப்பதையும் பார்க்கும்போது நம்மால் புரிந்துக் கொள்ள முடிவது என்னவென்றால் – மூன்றாவது மொழியாக இமாச்சலப் பிரதேசத்தில் சமஸ்கிருதமே விரும்பப்பட்டு வருகிறது என்பது தான்.
உத்தரப்பிரதேசத்திலும் தற்போது இதே போன்றதொரு நிலையே உள்ளது. அங்குள்ள நடுநிலைக் கல்வித் துறையின் செயலாளர் பகவதி சிங் இவ்வாறு கூறுகிறார்:
“எங்கள் பள்ளிகளில் மலையாளம் படிப்பது ஒரே ஒரு மாணவர். தமிழ் படிப்பவர்கள் மூன்றே பேர். கன்னடம் கற்க சேர்ந்துள்ள மாணவர்கள் அய்ந்து பேர் மட்டுமே. இவர்கள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுத உள்ளனர்.”
2009 ஆம் ஆண்டின் ஆய்வு மூலம் மேலும் தெரிய வருபவை:
குஜராத்தில் உள்ள பள்ளிகளில் ஆரம்பக்கல்வியில் 97 சதவிகிதத்திற்கும் அதிகமான பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வருவது குஜராத்தி மொழி. 20.9 சதவிகிதப் பள்ளிகளில் ஆங்கிலம். 64 சதவிகிதப் பள்ளிகளில் இந்தி. 2.2 சதவிகிதப் பள்ளிகளில் மட்டுமே இதர மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
கருநாடக மாநிலத்தில் 97.5 சதவிகிதப் பள்ளிகளில் கன்னட மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. 86.2 சதவிகிதப் பள்ளிகளில் ஆங்கிலம் 30.4. சதவிகிதப் பள்ளிகளில் இந்தி 15 சதவிகிதப் பள்ளிகளில் மற்ற மொழிகள்.
பஞ்சாப் மாநிலத்தில் 79.2 சதவிகிதப் பள்ளிகளில் இந்தி; 1 சதவிகிதத்திற்கும் குறைவான பள்ளிகளில் மட்டுமே ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி தவிர இதர மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தெரிய வருவது –
இந்தி பேசப்படாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக பெரும்பாலும் இந்தியே உள்ளது.
மக்களவையில் அளிக்கப்பட்ட பதில் மூலம் புரிந்துக் கொள்ள முடிவது இதுதான்:
பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிஷா மாநிலங்கள் மும்மொழிக் கல்வி திட்டத்தை ஏற்றுக் கொண்ட மாநிலங்களாகும். ஆனால் 2023-24 கல்வி ஆண்டில் அந்த மாநிலங்களில் 50 சதவிகிதத்திற்கும் குறைவான பள்ளிகளில் மட்டுமே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் 60 சதவிகிதத்திற்கும் குறைவான பள்ளிகளில் மட்டுமே மும்மொழிக் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மும்மொழிக் கல்வி திட்டத்தை ஏற்றுக் கொண்டதாகக் கூறும் மாநிலங்களிலேயே இந்த திட்டம் ஒரே சீராக நடைமுறைப்படுத்தப் படவில்லை என்பது தெளிவாகிறது.
சமீபக்கால ஆண்டுகளில் மற்ற மாநிலங்களில் இருந்த நிலை பற்றிய புள்ளி விவரங்களும் தற்போது மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது. தெளிவான, முழுமையான தரவுகள் கிடைத்தால் கூடுதல் விவரங்கள் தெரியவரும்.
கட்டாயமாக திணிக்கப்படாவிட்டாலும், பல மாநிலங்கள் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் விரும்புவதற்குக் காரணம் மற்ற மொழிகள் கற்கவும், கற்பிக்கவும் போதுமான அளவுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் முன்வராதது தான் என்றே தோன்றுகிறது.