இந்தியாவில் கூட்டாட்சி மலர ஜனநாயக சக்திகளைத் திரட்டுவோம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல்

viduthalai
3 Min Read

மதுரை, ஏப். 4- மக்களுக்கு எதிரான பா.ஜனதா ஆட்சிக்கு முடிவுகட்ட, இந்தியாவில் கூட்டாட்சி மலர ஜனநாயக சக்திகளை திரட்டுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு, மதுரை தமுக்கம் மைதானத்தில் கடந்த 2, 3ஆம் தொடங்கியது. 2ஆவது நாளாக நேற்று (3.4.2025) பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தன.

இதையொட்டி ராஜா முத்தையா மன்றத்தில் இந்தியாவில் கோட்பாடே வலிமை’ என்ற தலைப்பில், மாநில உரிமைகள் பாதுகாப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டனர் இது போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கருநாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் உள்பட தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மதுரை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தேர்தல் கூட்டணி

“எல்லோர்க்கும் எல்லாம்” என்ற சமத்துவச் சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காகத் தான் நாம்தேர்தல்கூட்டணி அமைக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள இந்த கூட்டணி யில் விரிசல் ஏற்படாதா? என்று நப்பாசையோடு சில வெளிநபர்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்த்தார்கள் அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது. இங்கு இருக்கும் யாரும் அதற்கு இடம் தரவும் மாட்டோம்

கூட்டாடட்சி என்ற சொல்லே இன் றைக்கு ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு ஒவ்வாமை ஆகிவிட்டது. மாநில உரிமைகளுக்காகப் பேசுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒன்றியத்தில் ஆளும் பா.ஜனதா அரசின் எதேச்சாதிகாரத் தன்மையால் அதிகமாக பாதிப்படைகின்றவர்களில் முதன்மையாக இருப்பது, நானும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் தான்.

நமது அரசமைப்பு சட்டத்தின் முதல் வரியே, “பல்வேறு மாநிலங்களால் ஆன ஒன்றியம்தான் இந்தியா” என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. அதனால்தான், ஒன்றிய அரசு’ என்று சொல்கிறேன். சட்டத்தில் இல்லாததை சொல்வதை நான் சொல்லவில்லை. அதையே அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மாநில அரசுகள் டில்லிக்கு காவடி தூக்கும் நிலைமையை மாற்றி, அதிகாரப் பகிர்வுக்கு வழிகாட்டுவது தான் தன்னுடைய அணுகுமுறையாக இருக்கும்” என்று சொல்லி பிரதமரான நரேநதிர மோடியின் ஆட்சிதான், மாநிலங்களை அழிக்கும் ஆட்சியாக, மாநில மொழிகளைச் சிதைக்கும் ஆட்சியாக, பல்வேறு தேசிய இன மக்களை ஒழிக்கும் ஆட்சியாகப் பல்வேறு பண்பாடுகள் கொண்ட மக்களின் நம்பிக்கைகளைச் சிதைக்கும் ஆட்சியாக இருக்கிறது.

தனி மனிதனின் கையில் அதிகாரம்

ஒரே நாடு ஒரே மதம்- ஒரே மொழி – ஓரே உணவு – ஒரே தேர்தல் ஒரே தேர்வு ஒற்றைத் தன்மை, ஒரு கட்சியின் ஆட்சியாக முதலில் அமைந்து, ஒரே ஒரு தனிமனிதரின் கையில் அதிகாரத்தை குவிக்கத்தான் அது பயன்படும்.

பிறகு, அந்த தனிமனிதர் வைத்ததுதான் சட்டம்! அவர் சொல்வதுதான் வேதம்! அவரால் அங்கீகரிக்கப்பட்ட சிலருக்கு மட்டும் தான் அதிகாரம்! அவரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்க ளுக்குத்தான் நிதி மூலதனம் என்று ஆகிவிடும். பா.ஜனதாவின் பாசிச கோர முகத்தைத் தொடர் பிரச்சாரத்தின் மூலமாகத்தான் வீழ்த்த முடியும்.எல்லாவற்றிற்கும் மேல் மக்கள் நலன்தான் முக்கியம் என்ற புள்ளியில் நாம் ஒன்றாக இருக்க வேண்டும்.
ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும் தான், இந்தியாவில் கூட்டாட்சி காப்பாற்றப்படும். ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக ளுக்குமான உறவுகளை வலிமைப்படுத்த, சர்க்காரியா கமிஷனும், பூஞ்சி கமிஷனும் அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று 2012இல் குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி கேட்டார். நான் இந்த மேடையில் நின்று பிரதமர் மோடியை கேட்கிறேன்.. தொடர்ந்து 3ஆவது முறையாகப் பிரதமர் ஆகியிருக்கும் நீங்கள், அதை

நடை முறைப்படுத்த எடுத்த நடவ டிக்கை என்ன?
ஜனநாயக சக்திகளை திரட்டுவோம்

சட்டமன்றத்தில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என் றும், வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராகவும் தீர்மானம் போட்டுள்ளோம். இன்னும் 2 நாட்களில் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். வக்பு திருத்த சட்ட மசோதாவை நள்ளிரவு 2 மணிக்கு நிறைவேற்றியிருப்பது அரசமைப்புச் சட்டத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்.

மாநில சுயாட்சி, கூட்டாட்சி, சமூகநீதி, மதநல்லி ணக்கம் ஆகியவற்றுக்கு எதிரான – சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், மக்களுக்கு எதிரான பா.ஜனதா ஆட்சியின் முடிவில்தான், இந்தியாவில் கூட்டாட்சி மலரும். அதை உருவாக்க, இந்தியா முழுவதும் இருக்கும் ஜனநாயகச் சக்திகளைத் திரட்டுவோம். இதற்காகத் தான் தி.மு.க. குரல் கொடுக்கிறது. பொதுவுடமைத் தோழர்களும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். இணைந்து போராடுவோம்! பாசிசத்தை வீழ்த்துவோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *