சென்னை, ஏப்.2- காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று சட்டப் பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்துக்குப் பிறகு, இதுகுறித்த கவன ஈா்ப்பு அறிவிப்பு விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. இதில், அதிமுக உறுப்பினா் சி.விஜயபாஸ்கா் (விராலிமலை) பேசுகையில், நதிநீா் இணைப்பு என்பது விவசாயிகளின் கனவு திட்டமாகும்.
அது கலைந்து போகின்ற மேகங்களாக ஆகி விடாமல், பொழிகின்ற மழையாக இருக்க வேண்டும் என்பதுதான் எதிா்பாா்ப்பு. காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்பதே விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் வருத்தம், கவலை என்றாா்.
காவிரி – வைகை – குண்டாறு
இதற்கு அமைச்சா் துரைமுருகன் அளித்த பதில் வருமாறு:
காவிரி- வைகை- குண்டாறு திட்டம் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்த திட்டமாகும். இந்தத் திட்டத்தை மூன்று கட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை, தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை, வைகை முதல் குண்டாறு வரை என மூன்று பிரிவுகளாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டம் நிறைவேறினால், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களின் 52 ஆயிரம் ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெறுவதுடன், குடிநீருக்கும் ஆதாரமாக இருக்கும்.
இந்தத் திட்டத்துக்கு முதல் கட்டமாக மாயனூா் முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிமீ தொலைவுக்கு ரூ.6,941 கோடியில் கால்வாய்ப் பணியைச் செயல்படுத்த கடந்த 2020-ஆம் ஆண்டு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.331 கோடி. அதற்கு நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, தோ்தல் வந்தது. இப்போது வரை அதில் ரூ.288 கோடி செலவிடப்பட்டுள்ளது. தொடா்ந்து திட்டத்தைச் செயல்படுத்துவோம்.
காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் 2008-இல் நாங்கள் முன்மொழிந்த திட்டமாகும். எனவே, நாங்கள் பெற்ற பிள்ளை விட்டுவிட மாட்டோம் என்றாா். இவ்வாறு அவர் பேசினார்.
வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிக்க வெளியிடப்பட்ட புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும் வைகோ வலியுறுத்தல்
புதுடில்லி, ஏப்.2- வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிக்க வெளியிடப்பட்ட புதிய வழிகளை (வழிகாட்டுதல்களை) ரிசர்வ் வங்கி (ஆர்பிஅய்) திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.
நகைக்கடன்
இது தொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தில் வைகோ கலந்துகொண்டு பேசியதாவது:
பொதுமக்கள் தங்கள் அவசர பணத் தேவைகளுக்காக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து நகைக் கடன்களைப் பெறுவது தவிர்க்க இயலாததாகிவிட்டது.
வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள் மறு அடமானம் வைப்பதற்கு ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள் வழிமுறைகளால் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள விதிகளின்படி, நகைக் கடன் காலத்தின் முடிவில், கடன் வாங்குபவர் வட்டியை மட்டுமே செலுத்தி நகைக்கடனை புதுப்பித்து கொள்ளலாம். புதிய அறிவிப்பின்படி வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைக் கடன்களை அசல் மற்றும் வட்டியுடன் முழுமையாக செலுத்தி நகைகளைத் திருப்ப வேண்டும். அதன்பிறகு மறுநாள்தான் மீண்டும் மறு அடமானம் வைத்து கடன் பெற முடியும்.
இதன் காரணமாக, ஏழை மக்கள், விவசாயிகள் முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. இது அவர்களுக்கு பெரிய அளவில் நிதி நெருக்கடியையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
புதிய வழிகாட்டு முறைகளால் விவசாயிகள் அதிக வட்டி விகிதத்தில் தனியார், தனிநபர்கள், அடகு தரகர்கள் மற்றும் கமிஷன் முகவர்களிடமிருந்து கடன் வாங்கும் சூழலை உருவாக்குவதுடன் அவர்களுடைய வாழ்வாதாரத்தை சுரண்டவும் வழிவகுத்துவிடும். ஆகவே, இதை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்று, பழைய விதிமுறைகளும், நடைமுறைகளும் தொடர உறுதி செய்யுமாறு நிதியமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.