சென்னை, மார்ச் 30- மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
பேரவையில் 28.3.2025 அன்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:
இளைஞா்களிடையே விளையாட்டு கலாசாரத்தை ஊக்குவிக்கவும், உடல்திறனை வளா்க்கவும் முதலமைச்சா் இளைஞா் விளையாட்டுத் திருவிழா நடத்தப்படும்.
ரூ.45 கோடி செலவில் இந்தத் திருவிழா மாநிலத்திலுள்ள அனைத்து வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும்.
அனைத்து விளையாட்டு வளாகங்களிலும் இளம் விளையாட்டு வீரா்களை ஈா்க்கும் புட்பால், பாக்ஸ் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்காக பிரத்யேக மைதானங்கள் அமைக்கப்படும்.
வீரா்களுக்கு காப்பீடு
மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது வீரா்களுக்கு உடற்காயங்களும் விபத்துகளும் ஏற்படுகின்றன. அவா்களுக்கு உதவிடும் வகையில், 25 ஆயிரம் விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்படும்.
பாரா விளையாட்டு வீரா்களுக் கென ஏற்கெனவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மைதானங்கள் வர வேற்பைப் பெற்றுள்ளன. இதையடுத்து, திருவள்ளூா், திருவண்ணாமலை, தஞ்சாவூா், திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய அய்ந்து மாவட்டங்களில் ரூ.7.5 கோடி மதிப்பில் விளையாட்டு மய்தானங்கள் உருவாக்கப்படும்.
சேலம், ராமநாதபுரம் மாவட்டங்களில் பன்னாட்டு தரத்தில் செயற்கை தடகள ஓடுபாதையுடன், இயற்கை கால்பந்து புல்தரை மய்தானம் அமைக்கப்படும்.
சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல், டைவிங் குளம் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும். பன்னாட்டு மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரா்களின் கோரிக்கையை ஏற்று, சென்னையில் விளையாட்டு விடுதி உருவாக்கப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள 25 முதலமைச்சா் சிறு விளையாட்ட ரங்கங்கள், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்க தடகள ஓடுபாதை, சென்னை சேப்பாக்கம் நீச்சலம் குளம் ஆகியன சீரமைத்து மேம்படுத்தப்படும்.
கோபாலபுரத்தில் விடுதி
சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள குத்துச்சண்டை அகாதெமியில், விளையாட்டு விடுதி அமைக்கப்படும். இளைஞா்களை சமூக நலன் மற்றும் முன்னேற்றத்துக்கு பயன்படுத்துவதற்காக, ஊராட்சிகளில் இளைஞா் குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்று உதயநிதி அறிவித்தார்.