சென்னை, மார்ச் 27- சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவின் தீர்மானங்களை விளக்கியும், ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளைப் பரப்புரை செய்தும், கொளத்தூர் பெரியார் நகர் – அரசு மருத்துவமனைக்கு தந்தை பெரியார் பெயர் சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி – பாராட்டுத் தெரிவித்தும் கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 24.3.2025 அன்று மாலை 6.30 மணிக்கு புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ந.கார்த்திக் வரவேற்புரையாற்றினார். துணைச் செயலாளர் த.பரிதின் தலைமை வகித்து பேசினார். மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் தொடக்கவுரையாற்றினார்.
மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், காப்பாளர் கி.இராமலிங்கம், இளைஞரணித் துணைத் தலைவர் பா.பார்த்திபன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலை வகித்தனர்.
அனைத்துக் கட்சியின் பொறுப்பாளர்கள் உரை
புரசை சு.அன்புச்செல்வன், எழும்பூர் பகுதி வி.சி.க. செயலாளர் மண்வீரன், ம.தி.மு.க. பகுதி செயலாளர் வெங்கடேசன், சி.பி.அய். (எம்) பகுதி செயலாளர் ஆறுமுகம், கழக வழக்குரைஞரணி துரை.அருண், தளபதி பாண்டியன், வி.பன்னீர்செல்வம், 99ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர், தி.மு.க. அயலக அணி மாநில துணைச் செயலாளர் பரிதி இளம்சுருதி ஆகியோர் உரையாற்றினர். கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ஆரூர் தே.நர்மதா சிறப்புரையாற்றினர்.
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றுகையில், “பெரியாருக்கு – வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு” என்று தந்தை பெரியாரைப் பற்றி கவிதை வடித்த முத்தமிழறிஞர் கலைஞர் இன்றைக்கு பாடியிருக்கக்கூடிய சூழ்நிலை இருக்குமானால் “வங்கத்துத் தாகூர் மண்ணில் பெரியார் உண்டு” என்று பாடியிருப்பார்.
அந்த அளவிற்கு தாகூரால் நிர்மாணிக்கப் பட்ட சாந்தி நிகேதன் உள்ள கொல்கத்தா மண்ணில் தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை – வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை இன்றைக்கு வங்கத்திலே இருக்கின்ற மக்கள் கொண்டாடி இருக்கிறார்கள். அத்தகைய விழாவிற்கு இந்தத் தமிழ் மண்ணிலிருந்து ஒரு கருஞ்சட்டைத் தோழர் வரவேண்டும் என்பதற்காக என்னையும் அழைத்து அவ்விழாவில் கலந்து கொள்ளச் செய்தார்கள். அதேபோன்று ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களோடு இணைந்து மூன்று முறை வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தியுள்ளார்.
ஜாதிக்கு சம்மட்டி அடியாக ஆசிரியரின் பணி
நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கடந்த பதினைந்து நாள்களாக ஆஸ்திரேலியா மண்ணில் தந்தை பெரியாரின் கொள்கைகளை எடுத்துச் சொல்லி – அந்த மண்ணில் தலை தூக்கி வருகின்ற ஜாதி உணர்வுக்கு சம்மட்டி அடி கொடுத்து வருகின்றார்கள். தந்தை பெரியாரின் கொள்கைகள் இன்றைக்கு உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படும் நிலைமை உருவாகி வருகிறது.
‘திராவிட மாடல்’ ஆட்சி
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் திட்டங்களை சட்டமாக்கி நடந்து வருகின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியை கட்டிக் காப்பது ஒவ்வொரு கருஞ்சட்டை வீரனின் கடமை என்கின்ற உணர்வோடு எங்களது பணி தொடரும் என்று ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த பல்வேறு தகவல்களைக் குறிப்பிட்டார்.
இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களின் ஒத்துழைப்போடு மிக எழுச்சியான முறையில் இப்பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நல்ல அளவுக்கு விளம்பரம் செய்யப்பட்டு, வெள்ளாளர் தெரு மற்றும் புரசைவாக்கம் நெடுஞ் சாலையில் கழகக் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கழகப் பொறுப்பா ளர்கள், அனைத்துக் கட்சிகளின் பொறுப் பாளர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. இக்கூட்டத்தினை வடசென்னை மாவட்ட கழக இளைஞரணி சிறப்பான அளவில் ஏற்பாடு செய்திருந்தது.
பங்கேற்றோர்
இந்நிகழ்ச்சியில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி, வடசென்னை மாவட்ட கழக அமைப்பாளர் சி.பாசுகர், துணைத் தலைவர் நா.பார்த்திபன், இளைஞரணித் துணைத் தலைவர் பா.பார்த்திபன், மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய், திராவிட மகளிர் பாசறை த.மரகதமணி, செ.பெ.தொண்டறம், மு.பவானி, த.இளவரசி, ஞானதேவி, பா.யாழினி, நிழற்படக் கலைஞர் பா.சிவக்குமார், கோ.தங்கமணி, அயன்புரம் சு.துரைராசு, உடுமலை வடிவேல், ஓட்டேரி சு.த.சேகர், சா.தாமோதரன், சி.செல்லப்பன், க.கலைமணி, வை.கலையரசன், ரெ.யுவராஜ், கா.பாலமுருகன், சி.பரசுராமன் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
ம.தி.மு.க. வட்ட செயலாளர் சாக்ரடீஸ், வி.சி.க. வட்டச் செயலாளர்கள் பழக்கடை செ.ஜெயராஜ், ஜெ.புல்லட்பாபு, மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் பெரு வாரியான தோழர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக திராவிட மாணவர் கழகத் தோழர் மு.அறிவுமதி நன்றி கூறினார்.