கேள்வி 1: கடந்த 9 மாதங்களாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்ட நாசா விண்வெளி வீராங்கனை இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் டிராகன் விண்கலம் மூலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்திய ஊடகங்கள் அவரோடு உடன் சென்று தற்போது சேர்ந்து திரும்பியுள்ள சக நாசா விண்வெளி வீரர் வில் மோர் பற்றி வெற்றிக் கொண்டாட்டத்தில் முன்னிலைப்படுத்தவில்லையே?
மன்னை சித்து , மன்னார்குடி – 1.
பதில் 1: நமது நாட்டு ஊடகங்களின் ‘பத்திரிகை தர்மம்’ உலகறிந்ததுதானே! இதிலென்ன அதிசயம்?
– – – – –
கேள்வி 2: மணிப்பூர், நாக்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற – நடைபெறுகின்ற வன்முறை வெறியாட்டங்களைப் பற்றி எல்லாம் தமிழ்நாட்டிலுள்ள பிஜேபி கட்சித் தலைவர்கள் வாய்மூடி மவுனமாக இருப்பது மக்கள் விரோதப் போக்கு அல்லவா?
– இராசுமணி, காட்பாடி.
பதில் 2: தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர்களுக்கு திமுக, திராவிடம் மீது வசைபாடுவது, அவதூறுகளை நாளும் வீசுவதுதானே வாடிக்கை.
இதுவரை தமிழ்நாட்டு உரிமைகளுக்காகவும், எதற்காகவும் அவர்கள் வாய் திறந்ததுண்டா?
– – – – –
கேள்வி 3: இந்தியாவின் ஒற்றுமையை கும்பமேளா வெளிப்படுத்தியது என்று பெருமிதம் அடையும் பிரதமர் மோடி அவர்கள், கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மரணம் அடைந்ததற்கு வருத்தம் தெரிவிக்காதது ஏன்?
– எஸ். பத்ரா, வந்தவாசி.
பதில் 3: இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு கும்பமேளா குளியல்தான் ஆதாரமா? மற்ற மதத்தவர்கள், மற்ற கருத்துடையோர், அறிவியல் அறிஞர்கள் எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை; இது ஒரு ஆர்.எஸ்.எஸ். கூத்து – அரசாங்க செலவில் என்பதுதானே அப்பட்டமான உண்மை?
– – – – –
கேள்வி 4: மோசமான நிதி நிர்வாகத்தால் மக்கள் பயணிக்கும் “ரயில்வேத் துறை வென்டிலேட்டரில் இருக்கிறது” என்று மக்களவையில் காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டி இருப்பதை ரயில்வே நிர்வாகமும், ஒன்றிய அரசும் கவனத்தில் எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமா?
– யாழ்நிலா, காஞ்சிபுரம்.
பதில் 4: … காதில் ஊதும் சங்கு என்னவாகுமோ? பொறுத்துதான் பார்க்க வேண்டும்!
– – – – –
கேள்வி 5: மொழிக்கொள்கையில் உறுதியைக் காட்ட ‘ரூ’ போடத் தேவையில்லை என்றும், தமிழை பயிற்று மொழியாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மருத்துவர் ராமதாஸ் கூறியிருப்பது ஏற்புடையதா?
– சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில் 5: பயிற்றுமொழி கோரிக்கையைக் காட்டிலும், தமிழ்நாடு அரசை குறை கூறுவதுதான் இதில் அடிநாதமாக உள்ளது! இல்லையா?
– – – – –
கேள்வி 6: தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் மீது அவசியமே இல்லாமல் அ.தி.மு.க. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது திராவிட மாடல் ஆட்சி மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி என்று கருதலாமா?
– இ. தனசேகரன், அரூர்.
பதில் 6: கைப்புண்ணுக்குக் கண்ணாடியா தேவை?
– – – – –
கேள்வி 7: தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட்டில், மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.45 ஆயிரம் கோடி ஒதுக்கி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்துள்ளதை மக்கள் கையொலி எழுப்பி மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது இன எதிரிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா?
– கி.கோவிந்தராஜ், குன்னம்.
பதில் 7: நிச்சயமாக, திராவிட மாடல் ஆட்சிக்குப் புகழ் ஏற்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாதே அவர்களால்.
– – – – –
கேள்வி 8: ஒன்றிய ஆட்சியாளர்கள் ஹிந்தியைத் திணிக்கவே மும்மொழிக் கொள்கையை கொண்டு வருகிறார்கள் என்று சென்னையில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மாநாட்டில் வைகோ பேசியிருப்பது மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அல்லவா?
– இரா. அலமேலு, செங்குன்றம்.
பதில் 8: உறுதியாக, பிரச்சாரம் வீண் போகாது! பலன் அளிக்கும்.
– – – – –
கேள்வி 9: உங்கள் ஆஸ்திரேலியப் பயணம் பெரியார் உலகமயமாவதை தீவிரப்படுத்தியுள்ளதாக உணர்கிறீர்களா?
– மா.மணிவண்ணன், காஞ்சி
பதில் 9: அதை நானா சொல்ல முடியும்? பொதுவானவர்களும், பெரியாரிஸ்டுகளும் அல்லவா கூற வேண்டும்!
– – – – –
கேள்வி 10: போர் நிறுத்தக் காலம் முடிந்துவிட்டதாகக் கூறி காசாவின் மீது இஸ்ரேல் மீண்டும் கொடூர தாக்குதலை நிகழ்த்துகிறதே – உலக நாடுகள் ஏன் மவுனமாக இருக்கின்றன?
– க.சாக்கியன், நுங்கம்பாக்கம்
பதில் 10: அய்.நா.சபை என்று ஒரு அரசு நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. ஏனென்றால், உலக நாடுகள் பலவும் ஆயுத விற்பனையாளர்கள் ஆயிற்றே!