வினோத் குமார்
இதுவரை பயன்பாட்டில் இருந்த தேவநாகரிச் சின்னத்திற்கு மாற்றாக ‘ரூ’ என்ற தமிழ் எழுத்தே இனி ரூபாயைக் குறிக்க தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிக்கையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருவது மட்டுமின்றி தந்தை பெரியாரின் எழுத்துச் சீரமைப்பும் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்து அதைப்பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளவும் ஆவலைக் கிளறிவிட்டுள்ளது.
அக்கறையே
மார்ச் மாதம் 13 ஆம் நாளன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த விவாதத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. தமிழை காட்டுமிராண்டி மொழி என்ற பெரியாரைப் போற்றிப் புகழ்ந்து தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார் அவர். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உட்பட, தி.மு.க. தலைவர்கள் பலரும் அதனைக் கண்டித்து விளக்கமளித்தனர். பெரியார் அவ்வாறு கூறியது தமிழ் மொழி மீது இருந்த அக்கறையால் தானே தவிர அதை இழிவுப்படுத்தும் நோக்கத்தில் அல்ல என்பதை அனைவரும் தெளிவுப்படுத்தினர். சமுதாய மாற்றத்திற்காக பாடுபட்ட பெரியாரின் தமிழ்மொழி குறித்த பார்வை எத்தகையது என்பதை எடுத்துரைத்தனர்.
ஆதங்கம்
மும்மொழிக் கொள்கை திட்டம் விவாதிக்கப்படும் போதெல்லாம் தேவையின்றி பெரியாரை விமர்சிப்பது பெரியார் துவேஷிகளின் வழக்கமாகி விட்டது. பெரியார் அப்படிச்சொன்னது உண்மை என்றாலும் இவர்கள் அதன் உட்கருத்து என்ன என்பதைப் புரிந்துக்கொள்ளவில்லை. விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆங்கிலம் வளர்ந்த அளவுக்கு தமிழ் மொழி வளரவில்லையே என்ற ஆதங்கத்தினால் அல்லவா அவர் அப்படிச் சொன்னார் என்பது ஏன் இவர்களுக்குப் புரியவில்லை? இவர்கள் தமிழ்மொழி குறித்த அவருடைய பார்வையை தவறாகப் புரிந்துக்கொண்டு அமளியில் ஈடுபட்டுள்ளார்கள்.
எழுத்துச் சீரமைப்பு
ஒரு மொழியை கண்மூடித்தனமாக, கடவுளை வழிபடுவது போல் மக்கள் வழிபடத்துவங்கி விட்டால் அந்த மொழிக்கு சீர்திருத்தம் அவசியம் என்று வலியுறுத்தி வந்தார் பெரியார். தமிழ்மொழி மீது தனிப்பட்ட வெறுப்பு ஏதுமின்றி அவர் தமிழில் தான் பேசியும் எழுதியும் வந்தார். தமிழ் எழுத்துகளை எப்படிச் சீரமைக்கலாம் என்று தான் சிந்தித்தும் வந்துள்ளார். சீரமைப்பின் அவசியம் தமிழ்மொழிக்கு உள்ளது என்று கூறிவந்தவர் ஆங்கில மொழியறிவின் அவசியம் குறித்தும் பல மேடைகளில் பேசியுள்ளார். இந்த இரு மொழிகளிலும் தனக்கு அப்படியொன்றும் அபாரமான புலமை இல்லையென்றும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டவர் அவர். 1925 மே மாதம் ‘குடி அரசு’ வார இதழைத் துவக்கிய பெரியார் அதில் பல எழுத்துச் சீரமைப்புகளை அறிமுகப்படுத்தி தன் பணியைத் துவக்கினார். சொன்னபடியே செய்தும் காட்டியவர் அவர். அதுவே நல்ல துவக்கமாக அமைந்தது. (எழுத்துச் சீர்திருத்த அறிவிப்பு 30.12.1934 பகுத்தறிவு இதழ் – ‘குடிஅரசில்’ எழுத்துச் சீர்திருத்தம் செயலுக்கு வந்தது 13.1.1935).
சில தமிழ் அறிஞர்கள் ஆரம்பத்தில் பெரியாரின் இந்தப் பணிக்கு முட்டுக்கட்டையாகவே இருந்தனர். ஆனால் நாளடைவில் பத்திரிகையாளர்களும், நூல் பதிப்பாளர்களும் மனமுவந்து பெரியாரின் எழுத்துச் சீரமைப்புகளை ஏற்றுக்கொண்டனர். ஊடகத்துறை ஆய்வாளர் ராபின் ஜெஃப்ரி என்பவர் 1997-இல் பெரியாரின் பணியை இவ்வாறு பாராட்டி எழுதினார்:
எளிமையான மாற்றம்
‘‘1940-ஆம் ஆண்டிலிருந்தே பல முன்னணிப் பத்திரிகைகள் வாசகர்களைக் கவர சீரமைக்கப்பட்ட எழுத்துக்களைப் பயன்படுத்தி வருகின்றன. பழைமைக்கு அவை விடை கொடுத்து தங்களைப் புதுப்பித்துக் கொண்டுள்ளன. செய்திகளை வெளியிடுவதிலும் புதிய உத்திகளைக் கையாண்டு வருகின்றன. அச்சடிக்கும் பணியில் பல சிரமங்கள் குறைந்துள்ளன. எல்லாமே எளிதாகி விட்டன. எளிமையாகவும் மாறிவிட்டன,”
பார்ப்பனர் அல்லாதவர்கள் நடத்தி வந்த வார, மாத இதழ்களில் கரடுமுரடான சமஸ்கிருத வாக்கியங்கள் அறவே நீக்கப்பட்டன. தூயத் தமிழ்ச் சொற்கள் பக்கங்களை அலங்கரிக்கத் துவங்கின. 1920-ஆம் ஆண்டில் வலிமை பெற்ற பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கம், பார்ப்பனர் அல்லாத பிரிவினர்களை பத்திரிகைத் தொழிலில் இறங்க உற்சாகப்படுத்தி ஊக்குவித்தது. இதனால் இதழியல் களத்தில் நிலவி வந்த பார்ப்பனர் ஆதிக்கம் ஆட்டம் கண்டது. அவர்களுடைய கொட்டமும் அடங்கியது. பார்ப்பனர் அல்லாதோர் பத்திரிகைகளுள் ‘குடிஅரசு’ வார இதழ்தான் முதல் இடம் வகித்தது. பல்வேறு தலைப்புகளில் சுவையான கட்டுரைகள் அதில் வெளிவரத் துவங்கின. நாத்திகம் சார்ந்த பல செய்திகளும் பேட்டிக் கட்டுரைகளும் இடம்பெற்று வந்தன. எல்லோரையும் கவர்ந்து நல்ல வரவேற்பையும் பெற்றுவிட்ட நிலையில் தவிர்க்க இயலாத ஒரு சூழ்லையில் 1949-ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ தன் பணியை நிறுத்திக் கொள்ள நேர்ந்தது.
தமிழ் உணர்வு
இருப்பினும் ‘குடிஅரசு’ இதழில் அதுவரை வெளிவந்த பெரியாரின் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் பின்னர் தொகுக்கப்பட்டு தனி நூல்களாக வெளிவந்தன. அவை விற்பனையிலும் வியக்கத்தக்க சாதனை புரிந்தன. ‘குடிஅரசு’ வெளிவரத் துவங்கியதற்கு முன் சில பார்ப்பன இதழியலாளர்கள் நடத்தி வந்த வார, மாத மற்றும் நாளிதழ்கள், சமஸ்கிருதப் பெயர்களைத் தாங்கி வெளிவந்துக் கொண்டிருந்தன. உதாரணமாக – “தேசோபகாரி”, “தேசாபிமானி”, “ஞானானுகூலன்”, “சுதேசாபிமானி”, “சுதேசமித்ரன்” போன்ற பெயர்களுடன். இந்த நிலையில் தான் பதிலடிப் பதிப்பாக பெரியார் ‘குடிஅரசு’ வார இதழைத் துவக்கினார் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க உண்மை. இது தமிழர்களுக்கான, தமிழ் உணர்வை மிளிரச் செய்யும் ஓர் இதழாகவே இருந்தது. ‘குடிஅரசு’ வார இதழ் வெளிவரத் துவங்கியதும் “சுதேசமித்ரன்” எனும் பார்ப்பனர் நாளிதழின் விற்பனை வேகமாகச் சரிந்தது. வாசகர்களின் ஆதரவு ‘குடிஅரசு’ க்கே அதிகரித்தது.
சமூகநீதிக் குரல்
1925 முதல் 1929 வரை ‘குடிஅரசு’ வார இதழ் வெளியிடப்பட்டு வந்தது. இடையில் 1933 முதல் 1935 வரை மட்டும் தற்காலிகமாக ஒரு இடைவெளி ஏற்பட்டது. இதற்கு பிரிட்டிஷ் அரசின் தணிக்கை விதிமுறை தான் காரணமாக இருந்தது. ‘குடிஅரசு’ –க்கு முன்பும் முற்போக்குச் சிந்தனையுள்ள சில பத்திரிகைகள் வெளிவந்துக் கொண்டிருந்தன. இருப்பினும் ‘குடிஅரசு’ ஈடு இணையற்ற இதழாக விளங்கியது. திராவிட இயக்கத்தின் முன்னோடியாக, மனக்குரலாக வெளிவந்துக்கொண்டிருந்த இதழ் அது. சமூகநீதிக்காக எழுந்த முதல் குரலே அதனுடையது தான். சமூகநீதி என்ற உன்னத கொள்கையைப் பரவிப்படரச் செய்ததே ‘குடிஅரசு’ வார இதழ் தான்! மக்கள் மனங்களில் சமூகநீதி பற்றிய புரிதல் ஏற்படுத்தி அரும் பணியாற்றிய இதழ் அது.
1934-ஆம் ஆண்டு வாக்கிலேயே எழுத்துருத் திருத்தம் குறித்து தீவிரமாக சிந்தித்து அதுபற்றி பேசியும் எழுதியும் வந்தவர் பெரியார். 1933-ஆம் ஆண்டில் ‘குடிஅரசு’ வெளிவருவது நின்ற போது “பகுத்தறிவு” எனும் இதழை வெளியிடத் துவங்கினார். எழுத்துச் சீர்திருத்தம் அதில்தான் அவரால் விளக்கப்பட்டு வந்தது. 1935-ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ மீண்டும் வெளிவரத் துவங்கிய போது அவருடைய சிந்தனையில் உருவாகியிருந்த எழுத்துருச் சீர்திருத்தங்கள் அதில் பயன்படுத்தப்பட்டன. தேவையற்ற உயிரெழுத்துகள் அகன்றன. எழுத்துகளின் எண்ணிக்கை குறைந்தது. வடிவங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.
புதிய முறை
247 தமிழ் எழுத்துகளுள் 38 தேவையற்றவை என்றார் பெரியார். அவை இல்லாமலேயே, அவற்றைப் பயன்படுத்தாமலேயே நம்மால் படிக்கவும், பேசவும் எழுதவும் முடியும் என்று விளக்கினார். அதனால் உச்சரிப்புப் பிழையோ, பொருள் பிழையோ நேராது என்பதைப் புரிய வைத்தார்.
பெரியாரால் ஏற்பட்ட புதிய முறை எழுத்துருச் சீர்திருத்தம் பின்வருமாறு:
னா, றா, ளா, ணை, லை, ளை, னை, ணொ, றொ, னொ, ணோ, றோ, னோ
மேற்கண்ட 13 எழுத்துருக்கள் அவரால் தமிழ் இதழியல் உலகிற்குக் கிடைத்தன. ஜனவரி – 13 (1935) இதழிலேயே புதிய முறை அறிமுகம் நிகழ்ந்தது.
கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் புதிய முறை பயனுள்ளது என்று அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டனர். தட்டச்சுக் கலையும், பத்திரிகைகளின் அச்சடிப்பும் இதனால் பயனடைந்தன. நேர விரயமும் தவிர்க்கப்பட்டது. இயந்திரங்களின் ஆற்றல் மட்டுமின்றி மனித இயந்திரங்களின் செயல் திறனும் அதிகரித்தது.
அதிகார பூர்வமாக
1936 ஆம் ஆண்டில், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் நடந்த ஒரு விழாவிலும், பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரி நிகழ்வு ஒன்றிலும் தனது எழுத்துச் சீர்திருத்தங்களை விளக்கி பெரியார் சொற்பொழிவாற்றினார்.
1978 ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாளின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது தமிழ்நாடு அரசு பெரியார் அறிமுகப்படுத்திய 13 புதிய முறை எழுத்துகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு முறையான அங்கீகாரம் வழங்கியது. அரசு அலுவல்கள் அனைத்திலும் புதிய முறை பயன்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ‘தினமணி’ நாளிதழ் உடனடியாக புதிய முறையை பயன்படுத்தி வழிகாட்டியது. பத்திரிகை உலகம் முழுமனதுடன் புதிய முறையை ஏற்றுக்கொண்டது.
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத் தாக்கத்தால் அவருடைய மறைவுக்குப் பின்னும் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன. அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் திரு.வி.சி.குழந்தைசாமி தனது “தமிழ் எழுத்து சீரமைப்பு” எனும் நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
பெரியாரால் ஏற்பட்டது
“தமிழ் தட்டச்சு இயந்திரத்தில் கூட்டல், கழித்தல், வகுத்தல் போன்றவற்றுக்கெல்லாம் சின்னங்கள் இல்லாமலிருந்தன. இவற்றின் அவசியம் உணரப்பட்டு அவை உருவாக்கப்பட்டன. 1995 மார்ச் மாதம் மாநில அரசு அவற்றுக்கு ஒப்புதல் அளித்தது. 1997 ஆம் ஆண்டு அவை நடைமுறைக்கு வந்தன. மாற்றங்கள் அவசியம் என்ற புரிதல் பெரியாரால் ஏற்பட்டது என்றால் மிகையாகாது.”
தமிழ் மீதுள்ள பற்றால் தன் பெயரோடு அதை இணைத்துக்கொண்ட ஆசிரியர் தமிழ் ஆசான் –
“இனிவரும் உலகில் தமிழ்மொழியில் மேலும் சில மாற்றங்கள் ஏற்படலாம். ஏற்படவும் வேண்டும்” என்கிறார்.
“புதிய முறை எழுத்துருக்களால் அடுத்த தலை முறையினருக்கு பழைய இலக்கியங்களையும், பத்திரிகைகளையும் படிப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சிலர் கூறுவது ஏற்புடையதல்ல” என்கிறார் தமிழ் ஆசான்.
அவர் மேலும் கூறியதன் உட்கருத்து:
“எந்தப் பள்ளியிலும் எவரும் பழைய முறை தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தக் கூடாது. நாம் அனைவரும் பழக்கத்தால் புதிய முறையை ஏற்றுக்கொண்டது போல் வருங்காலத்திலும் பிள்ளைகள் அதைக் கற்றுக்கொண்டு, வேறுபாடுகளையும் புரிந்துக்கொண்டு மிகப் பழைய இலக்கியங்களையும், பத்திரிகைகளையும் எளிதில் புரிந்துக் கொள்வார்கள். மொழிகளில் மாற்றங்கள் இன்றியமையாதவை.”
நன்றி: “தி டைம்ஸ் ஆஃப் இண்டியா” – 19.03.2025
மொழியாக்கம்: எம்.ஆர். மனோகர்