20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் வாரத்தில் வியாழக்கிழமையில் விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

1 Min Read

சென்னை, மார்ச் 20- 20 ஆண்டு களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் (20.3.2025) அமலுக்கு வருகிறது.

உச்சநீதிமன்றம் முதல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் வரை ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகின்றன.

இதில் குறிப்பிட்ட சதவீத வழக்குகளை விசாரித்து முடிவுக்கு கொண்டு வரும்போது, அதைவிட பெருமளவு புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுவிடுவதால், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால், மாற்றுமுறையில் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர உச்சநீதிமன்றம், அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களும் நடவடிக்கை எடுத்தன.
அதிரடி நடவடிக்கை

இதற்காக தேசிய அளவில் ஆண்டுக்கு 4 முறை லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப் படுகிறது. அது போல உயர்நீதிமன்றம் சார்பில் அவ்வப்போது லோக் அதாலத் நடத்தப்படுகிறது. இருந்தாலும் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான பலதரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி கே.ஆர்.சிறீராம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, வாரந்தோறும் வியாழக்கிழமை நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்துவிரைந்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

இன்று முதல்…

இதன்படி ஜூடிசியல் பதிவாளர் கே.சீதாராமன் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். அதில், “20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும். அனைத்து வகையான வழக்குகளும், அந்ததந்த நீதிபதிகள் முன்பு வாரந்தோறும் வியாழக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும்.
இந்த நடைமுறை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது என்று வழக்குரைஞர்கள், வழக்குகளை தேரடியாக தொடரும் பொதுமக்கள் ஆகியோருக்கு தெரியப் படுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *