உடுக்கையிலிருந்து பிறந்ததா சமஸ்கிருதம்?

Viduthalai
3 Min Read

நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை, நாகரீகமற்றவர்கள் என்று கூறினார். கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகு 100 முறை மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
பின்னர், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே “சமஸ்கிருதம் தமிழை விட பழைமையானது – தமிழ்நாட்டில் கூட கோவில்களில் சமஸ்கிருதம் தான் பயன்பாட்டில் உள்ளது. தமிழ் அங்கு இல்லை. ஆகவே தமிழ் தமிழ் தமிழ் என்று கத்தாமல் இருங்கள்’’ என்று தமிழை இழிவுபடுத்திப் பேசினார்.
அதன் பிறகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் கல்வி மோசமான கட்டத்தை அடைந்துவிட்டது என்று கூறியும் – தந்தை பெரியார் எந்த சூழலில் கூறினார் என்று பலமுறை விளக்கம் அளித்தும்கூட, தமிழ்மொழியைக் கட்டுமிராண்டி மொழி என்று கூறிய தந்தை பெரியாரின் சிலையையும் படங்களையும் எங்கு பார்த்தாலும் மாட்டி வைத்துள்ளீர்கள் – என்றும் வன்மம் கொப்பளிக்கப் பேசினார்.
ஆனால் தமிழை நீஷபாசை என்றும் சமஸ்கிருதம் தேவ பாஷை என்றும் சங்கராச்சாரியார் கூறியதை நிர்மலா சீதாராமன் தந்திரமாக மறைத்துவிட்டார்.

‘‘சிவனின் காலில் இருந்து பிறந்தது தமிழும் இதர மொழிகளும்’’ என்று சொல்வது ‘மஹேஷ்வர சூத்திரம்’ என்ற நூல், சிவனின் கால் தடத்தில் இருந்து எழுந்த கரடுமுரடான சத்தம் தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளாகவும், சிவனின் உடுக்கையிலிருந்து கிளம்பிய த்வனி(இனிமையான) ஓசை சமஸ்கிருதமாகவும் பிறந்தது என்று இவர்களின் Maheshwara Sutras : என்ற நூலில் எழுதி வைத்துள்ளார்கள்.
சமஸ்கிருதம் பிறந்ததுபற்றி காஞ்சி சங்கராச்சாரியார் என்ன கூறுகிறார்?
‘‘நடராஜப் பெருமான் தன்னை மறந்து ஆடிக் கொண்டு இருந்தபோது அவரது உடுக்கையிலிருந்து ‘ஹயவரடு – ஹல்’ முதலிய 14 வேறு வேறான சப்தங்கள் வெளி வந்தன. அவற்றை முறைப்படுத்தி பாணினி ரிஷி சமஸ்கிருதத்தை உண்டாக்கினார்’’ என்கிறார் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (‘கல்கி’ 25.6.1972)
இதற்கு தமிழ்நாட்டில் விளக்கம் தரும் பார்ப்பனர்கள் சிவனின் உடுக்கையிலிருந்து ஒருபக்கம் சமஸ்கிருதமும் மறுபக்கம் தமிழும் பிறந்தது என்று கதை விடுவார்கள்.

ஆனால் அது எல்லாம் தமிழர்களை ஏமாற்றுவதற்காக சொல்வது. உண்மை என்னவென்றால் சூத்திர மொழிகளான தமிழ் உள்ளிட்ட அனைத்தும் சிவனின் பாதத்தில் இருந்து பிறந்தவை தான் என்று இழிவுபடுத்துகிறார்கள்.
அவர்களின் கூற்றுப்படியே பிரம்மாவின் தலையில் இருந்துபிறந்த பார்ப்பனக் கும்பலும் காலில் பிறந்த சூத்திரனும் ஒரே மொழி பேசமுடியுமா?
மொழி அறிவு உள்ளவர்கள் உடுக்கிலிருந்து ஒரு மொழி பிறக்கும் என்பதை ஏற்பார்களா? பார்ப்பனத் தன்மையை உயர்த்திக் கொள்ள எத்தனை எத்தனையோ வகைகளில் அண்டப் புரட்டுகளையும், ஆபாசப் புனை சுருட்டுகளையும் அவிழ்த்துக் கொட்டுவதில் பார்ப்பனர்களை விஞ்சக் கூடியவர்களை உலகத்தில் எங்கு சென்றாலும் கண்டுபிடிக்க முடியாது.

பிர்மா என்ற ஒரு கடவுளைக் கற்பித்து அவன் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் ‘பிராமணர்கள்’ என்றும், பாதங்களிலிருந்து பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் (மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 87) எழுதி வைத்துள்ளதைவிட கடைந்தெடுத்த பித்தலாட்டம் ஒன்று இருக்க முடியுமா?
கடுகளவாவது புத்தியுள்ளவர்களாக இருந்தால் பிர்மா என்ற ஆண் கடவுளின் நெற்றியிலிருந்து ஒருவன் பிறந்தான் என்று எழுதி வைப்பார்களா?
மதத்தையும், பக்தியையும் போதையாக ஏற்றி மதி மயங்கச் செய்த கூட்டம், இன்றும் அதே நிலையை நிறுத்தப் பார்க்கிறார்கள் என்றால் தந்தை பெரியார் சகாப்தத்தில் அது நடக்காது என்பதைச் செயலில் காட்டுவோம்!
உலகம் பெரியார் மயம் – பெரியார் உலகமயம் என்ற கால கட்டம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
இறுதி வெற்றி தந்தை பெரியாருக்கே!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *