அன்னை மணியம்மையாரைத் தூற்றியவர்கள் போற்றுகிறார்கள்!
போற்றினாலும், தூற்றினாலும் அதைப்பற்றிக் கவலைப்படாதவர் அன்னையார்!
வரலாறு இருக்கின்ற வரையில் அன்னை மணியம்மையாரின் தொண்டறம் வாழ்ந்து கொண்டிருக்கும்!
சென்னை, மார்ச் 17 அன்னை மணியம்மையாரைத் தூற்றியவர்கள் போற்றுகிறார்கள்; போற்றினாலும், தூற்றினாலும் மணியம்மையார் என்ற தொண்டறம் தொடர்ந்துகொண்டே இருக்கும்; வாழ்ந்து கொண்டே இருக்கும்; வரலாறு இருக்கின்ற வரையில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அன்னை மணியம்மையாரின் 106 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!
கடந்த 10.3.2025 அன்று மாலை அன்னை மணி யம்மையாரின் 106 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘போர்க்குணம் மிக்க அன்னையார்’’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கமாக நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் சிங்கப்பூரில் இருந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி வாயிலாக சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
‘‘போர்க்குணம் மிக்க அன்னையார்’’
சிறப்புக் கருத்தரங்கம்
அன்னையார் அவர்களுடைய 106 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா – மகிழ்ச்சிக்குரிய திருவிழா போன்ற சிறப்பு நாளில், அவர்களுடைய தொண்டறத்தை நினைவூட்டி, நாம், நம்மை மேலும் வளர்த்துக் கொள்ள, புதுப்பித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கத்திற்கு வருகை புரிந்துள்ள உங்கள் அனைவருக்கும், பல்வேறு பகுதி களிலிருந்து இந்நிகழ்வினை காணொலிமூலமாக பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னையாரின் தனித்தன்மை!
அன்னையார் அவர்களுடைய பிறந்த நாள் அன்று நடைபெறக்கூடிய இந்த விழாவில், ஒரு நல்ல கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். அன்னையாருக்குப் பல பரிமாணங்கள் உண்டு; குணங்கள் உண்டு. பண்புகள் உண்டு. அவர்களுக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம்தான் முழு மணியம்மையார் அவர்களை நாம் காண முடியும். அன்னையாரின் தனித்தன்மை அதுதான்.
அப்படிப்பட்ட அன்னையாரைப்பற்றித் தெளி வான, சுருக்கமான சில கருத்துகளை, இந்த அறி வார்ந்த அவையினருக்கும், உலகெங்கும் இருந்து இந்த நிகழ்வைக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடிய தோழர்களுக்கும் பரிமாறுவதில் மிகுந்த மகிழ்ச்சியடை கிறேன்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர்!
தந்தை பெரியாருக்குப் பிடித்த குறள், உங்களில் பெரும்பாலோருக்குத் தெரிந்ததுதான்.
‘‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்’’ என்ற குறள்தான்.
மானம் கருதக் கெடும் – பொதுத் தொண்டு செய்ப வர்களுக்கு என்ன இலக்கணம் என்பதை வள்ளுவர், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வரையறுத்திருக்கிறார்.
ஆனால், அந்தக் குறளைப் படித்தவர்கள் பல பேர், அதனைப் பின்பற்றியதில்லை.
ஆனால், அந்தக் குறளைப் பின்பற்றி, தான் மட்டு மல்ல, தன்னுடைய தொண்டர்களையும் அதன்படி உருவாக்கிய ஒரு மாபெரும் இயக்கம்தான் – தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் – தலைவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
பன்னூறு ஆண்டுகளில் சாதிக்க முடியாததை, நூறாண்டில் பெரியார் சாதித்திருக்கின்றார்!
‘‘மான, அவமானம் பார்க்காதே பொது வாழ்க்கை யில்’’ என்பதை, பால பாடமாக அவர் சொல்லிக் கொடுத்தார்.
‘‘நேரம், காலம் வேண்டும் என்று சொல்லாதே. பணி செய்யும்போது, வேகமாகப் பணியில் இறங்கு’’ என்று ஒரு சிறப்பான கொள்கைத் திட்டத்தை அருமையாக நமக்கெல்லாம் வகுத்துத் தந்து, நூறாண்டில், பன்னூறு ஆண்டுகளில் சாதிக்க முடியாததை, அவர் சாதித்துக் காட்டியிருக்கின்றார்.
அப்படிப்பட்ட ஓர் அருமையான நிகழ்வை நாம் இப்போது இந்தக் கருத்தரங்கத்தின் மூலமாக உருவாக்கி இருக்கின்றோம்.
அதுமட்டுமல்ல, அன்னையார் அவர்களைப்பற்றி சுருக்கமாக சில செய்திகளைச் சொல்லி, மூன்று விஷயங்களைச் சொல்கிறேன்.
பொதுவாழ்வில் ஈடுபட விரும்புகின்ற பெண்கள் தொண்டாற்றுவதென்பது, குறிப்பாக நம்முடைய நாட்டில் அது எளிதானதல்ல. ஏனென்றால், இது இன்ன மும் உலகம் முழுவதுமே ஆணாதிக்க சமுதாயம்தான்.
பொதுவாழ்க்கையில் ஈடுபடுகின்ற பெண்களுக்கு
அசாத்திய தெளிவும், துணிவும் தேவை!
அதில், ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்று, எப்படி மனுதர்மத்தில் உயர்ந்த ஜாதிகளுக்கு ஒரு நீதி; தாழ்த்தப்பட்ட ஜாதிகளுக்கு ஒரு நீதி என்று ஆக்கியிருக்கிறார்களோ, அதுபோல, ஆண் எஜமானனாகவும், பெண் அடிமையாகவுமே காலங் காலமாக இருந்த சூழ்நிலையில், பொதுவாழ்க்கையில் ஈடுபடுகின்ற பெண்ணுக்கு, தனி வாழ்க்கையிலேயே கொடுமையைச் சந்தித்தவர்களுக்குப் பொதுவாழ்க்கை யில் கொடுமையை மட்டுமல்ல, அவதூறுகளையும், வீண்பழிகளையுமே அவர்கள் சுமந்தாகவேண்டும்.
செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்று சொல்வதைப்போல, அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை உண்டு.
ஆகவே, பொதுவாழ்க்கையில் ஈடுபடுகின்ற எவ ருக்கும், எந்தப் பெண்ணுக்கும் அவர்களுக்கு அசாத்திய தெளிவும், துணிவும் தேவை.
அதுவும் பட்டம், பதவி, புகழ், விளம்பரம் இவற்றை யெல்லாம் பெறுவதற்காக பொதுவாழ்க்கையில், அரசி யல் வாழ்க்கையில் பல பெண்கள் ஈடுபடுகிறார்கள்.
ஆனால், அன்னை மணியம்மையார் அவர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டது முற்றிலும் மாறுபட்டது; வேறுபட்டது.
கற்றுக்கொள்ளவேண்டியதும் – அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளவேண்டியதும் ஏராளம்!
இதை நன்றாக மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவருடைய தொண்டின் பரிமாணத்தை உலகம் உணர முடியும். நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை – அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளவேண்டியவை ஏராளமாக இருக்கின்றன.
பொதுவாக பட்டம், பதவி, புகழ், விளம்பரம் – பொதுவாழ்க்கையில் ஈடுபடுகின்றவர்களுக்கு இவை யெல்லாம் இயல்பாகவே ஒரு தேவையும், அவற்றை அடைவதற்குப் பேராசையும் இருக்கும். ஆனால், அன்னையார் அவர்கள் அவற்றைப் புறந்தள்ளி, தனக்கென தனித்த ஓர் இலக்கை உருவாக்கினார். இது முற்றிலும் தனித்தன்மை யானது.
தூற்றியவர்களே போற்றக்கூடிய அளவிற்கு உயர்ந்தவர் அன்னையார்!
தனித்த இலக்கை நிர்ணயித்து, அந்த இலக்கை அவர்கள் அடைவதற்காக, அவருடைய லட்சியப் பயணம் என்பதை நோக்கி – அதில் எத்தனை சோதனைகளும், வேதனைகளும் வந்தாலும், அவற்றை யெல்லாம்பற்றி கவலைப்படாது, அவர்களைத் தூற்றியவர்களே போற்றக்கூடிய அளவிற்கு உயர்ந்தவர் அன்னையார் அவர்கள்.
அவருக்கு ஒரே இலக்கு.
என்ன இலக்கு?
தந்தை பெரியார் அவர்களுக்கு மானமும், அறிவும் உள்ள சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதுதான் இலக்காகும். உலக மக்களுக்கு அழகு அவைதான் என்று சொன்னவர்.
‘‘திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கி, உலகத்தார் முன்னாலே என் சமுதாயம் உயர்ந்தது’’ என்று ஆக்குவதற்கு எவ்வாறு உறுதி எடுத்தார்களோ, அதுபோல, வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்துகொண்டு, தொண்டு செய்து பழுத்த பழமாக இருக்கக் கூடியவர்; தன்னலம் மறுத்த, எதிர்நீச்சல் அடித்த தந்தை பெரியார் என்ற அந்த மாபெரும் தலைவருக்கு, அவருக்குத் தொண்டு செய்வதுதான் தன்னுடைய ஒரே குறிக்கோள். அவரை நூறாண்டு காலம் வாழவைப்பதுதான் தன்னுடைய இலக்கு என்று ஆக்கிக் கொண்டவர் அன்னையார் அவர்கள்.
அதனால்தான், அவர்கள் வெளியில் வெளிச்சம்போட்டு வரவில்லை. விளம்பரத்தை அவர்கள் தேடவில்லை.
அவற்றையெல்லாம் புறந்தள்ளி, அவருடைய அந்த இலக்கை நோக்கியே சென்று கொண்டிருந்தார்.
தந்தை பெரியாரிருக்குப் பணி செய்யவேண்டும். அவர் பணியைத் தொடரவேண்டும் என்பவற்றையே இலக்காகக் கொண்டார்.
அவருடைய தந்தையார் வேலூர் கனகசபை அவர்கள், ஒரு நல்ல சுயமரியாதைக்காரராக தன்னுடைய மகளின் கருத்தை அறிந்து, அதற்கு ஒப்புதல் கொடுத்தார்.
சராசரி பெண்களுக்கு என்னென்ன ஆசாபாசங்கள் இருக்குமோ அவற்றையெல்லாம் தவிர்த்தவர்
அன்னை மணியம்மையார்!
தந்தை பெரியாருக்குத் தொண்டு செய்வதை விட, எனக்கு வேறு மகிழ்ச்சி இல்லை. ஆகவே, தாராளமாக அதற்குச் செல்லலாம் என்று சொன்னபோது, சராசரி பெண்களுடைய வாழ்க்கை எப்படி இருக்குமோ? சராசரி பெண்களுக்கு என்னென்ன ஆசாபாசங்கள் இருக்குமோ அவற்றையெல்லாம் தவிர்த்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.
உலக வரலாற்றில் நீங்கள் எங்கே தேடிப் பார்த்தாலும், இதுபோன்று இல்லை. எத்தனையோ பேர் தியாகம் செய்திருப்பார்கள். எத்தனையோ பேர் போராடி இருப்பார்கள். ஆனால், அன்னை மணியம்மையாருடைய வாழ்க்கை தனித்ததொரு அம்சமாகும்.
அய்யா மறைந்தவுடன், அன்னையார் எழுதிய அறிக்கை!
அந்த வகையில், அவருடைய இலக்கு என்ன வென்றால், எப்படி இலக்கு என்று நான் சொல்கிறேன் என்றால், அய்யா அவர்கள் மறைந்தவுடன், அம்மா அவர்கள் எழுதிய அந்த அறிக்கையில், அன்னையார் அவர்கள் சொல்கிறார்,
‘‘நான், எல்லாவற்றிலும் அவரைப் பாதுகாத்தேன். வெற்றியடைந்து வந்தேன் ஒவ்வொரு கட்டத்திலும், அறுவைச் சிகிச்சை, உடல் நலக் குறைவு, நோய், உணவுக் கட்டுப்பாடு இவற்றையெல்லாம் செய்தா லும், அவரை எப்படியாவது நூறாண்டு வாழ வைக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அதில் ஒன்றில்தான் நான் தோற்றுப் போய்விட்டேன்’’ என்று நெஞ்சுருக சொன்னார்கள்.
தோற்றாரா? வெற்றி பெற்றாரா? என்பது முக்கியமான கேள்வி.
மிகவும் நெருக்கமாக நம்மோடு இருந்தவர்களால் அவதூறுகள் புயல்போன்று வீசிற்று!
அவருடைய இலக்கு, அந்த இலக்கிலேயே அவர் சென்று கொண்டிருந்தார். கடுமையாக அவதூறுகள் புயல்போன்று வீசிற்று. எவ்வளவோ அவதூறுகள் மலைபோல் அவரை சந்தித்தன. கேட்பவர்கள், காதிலே கேட்க முடியாத அளவிற்கு இருந்தது
அதுவும் யாரால்?
மிகவும் நெருக்கமாக நம்மோடு இருந்தவர்களால்.
எதிரிகளால் என்பதுகூட அல்ல. ஆனால், அதைப்பற்றி மற்றவர்களாக இருந்தால் துடிப்பார்கள், துவளுவார்கள், சராசரி பெண்களாக இருந்தால், பொதுவாழ்க்கையை விட்டு அவர்கள் ஓடிப் போயிருப்பார்கள்.
ஆனால், அன்னையார் அவர்கள், கொஞ்சம்கூட ஆடாமல், அசையாமல், நிதானம் குன்றாமல், அவதூறுகளை கொஞ்சம்கூட மதிக்காமல், அவற்றை அலட்சியப்படுத்தினார்.
அவதூறுகளை அலட்சியப்படுத்திய அன்னையார்!
அலட்சியப்படுத்திவிட்டு, தான் உண்டு; தன்னுடைய இலக்கு உண்டு. தன்னுடைய தலைவர் உண்டு; அவருக்குத் தொண்டு செய்வதுதான் மிக முக்கியம் என்று அவர் மிக வேகமாக சென்று கொண்டிருந்தார்.
அன்னையாரைப்பற்றி, அறிஞர் அண்ணா கூறியது!
அந்தப் பாதையையே நோக்கி சென்று கொண்டிருந்த காரணத்தினால்தான், அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரான பிறகு, என்னிடத்தில் ஒருமுறை சொன்னார்.
‘‘அய்யாவிற்கு இருந்த வயிற்று வலி, நோய்த் தொல்லைகளிலிருந்து அவரைக் காப்பாற்றி, இவ்வளவு நான் வாழ வைத்திருக்கிறார் அன்னையார். அவருடைய பக்குவமான உணவு. ஒரு சிறு குழந்தையை எப்படி ஒரு செவிலித்தாய் பார்த்துக் கொள்வார்களோ, ஒரு கண்டிப்பு மிகுந்த மருத்துவர் எப்படி கவனிப்பார்களோ, அதுபோல, அம்மா அவர்கள், அய்யாவை கவனித்தார்’’ என்று சொன்னார்.
அய்யா அவர்கள், அவரது உடல்நலத்திற்கு ஒவ்வாத, தவிர்க்கவேண்டிய உணவை ஆசையாக எடுத்து, வாய்க்குள் வைத்த நேரத்தில், அய்யாவின் வாய்க்குள் அன்னையார் தன்னுடைய கை விரலை விட்டு, வாய்க்குள் இருந்த அந்த உணவை அப்படியே இழுத்து வெளியே எறிந்து, ‘‘என்ன காரியம் செய்தீர்கள்?’’ என்று சொல்வார்கள்.
இது இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரியாது. பல பேர் அதைக் குற்றம் என்றுகூட சொல்லியிருக்கிறார்கள். அருகில் இருந்த நாங்கள் அதைக் கேட்டிருக்கின்றோம்.
அய்யா அவர்கள், குழந்தை போல அப்படியே நிதானமான நிலைக்கு வந்துவிடுவார்.
பக்கத்தில் உள்ளவர்களுக்கு, அன்னையாரின் செயலைப் பார்த்து கடும் கோபம் ஏற்படும். அதுவும் அந்த உணவை சமைத்துக் கொடுத்தவர்களுக்கு கோபம் அதிகமாக வரும். ஆனால், அதைப்பற்றி அன்னையார் அவர்கள் கவலைப்படமாட்டார்.
அய்யாவைக் காப்பாற்றுவதுதான் என்னுடைய பணி!
‘‘யாருடைய விமர்சனங்கள் வந்தால் என்ன? என்னுடைய இலக்கு ஒரே இலக்குதான். அந்த இலக்கை நோக்கி நான் செல்லவேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள் நாட்டுக்குப் பணி செய்கி றார்; அவருடைய பணி எதிர்நீச்சல் பணி. அவரைக் காப்பாற்றுவதுதான் என்னுடைய பணியாகும்.
எனக்கு வேறு எதுவும் வேண்டாம்; பட்டங்கள் வேண்டாம்; பதவிகள் வேண்டாம்; பொறுப்புகள் வேண்டாம். அய்யா அவர்களுடைய பிரச்சாரத்திற்கு நான் துணையாக இருப்பேன்’’ என்றார்.
‘‘ஒரு பொடிப் பெண்ணை அன்னை என்று புகழாமல், வேறு என்னவென்று சொல்வது?’’
அவர் எவ்வளவு பெரிய வெற்றி அடைந்தார் என்பதற்கு அடையாளம் என்னவென்றால், புத்தகம் விற்றுக் கொண்டிருக்கக்கூடிய அன்னையார் அவர்களைப்பற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் எழுதினார்.
அய்யா – அன்னையார் திருமண காலகட்டத்தின்போது கடுமையாக விமர்சித்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.
ஆனால், பிறகு ‘‘ஒரு பொடிப் பெண்ணை அன்னை என்று புகழாமல், வேறு என்னவென்று சொல்வது?’’ என்றார்.
பொதுத் தொண்டினுடைய புதிய தத்துவப் புத்தகம்!
அன்னையாருடைய பிறந்த நாள் விழாவில் நாம் சிந்திக்க வேண்டிய, கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், அன்னையார் அவர்கள் பொதுத் தொண்டினுடைய புதிய தத்துவப் புத்தகம்.
கடுமையான விமர்சனங்கள் எழுந்தபோது, ஒருமுறைகூட அவர் வாய் திறந்து, ஒருவ ருக்குக்கூட அவர் பதில் சொன்னதில்லை, கடைசி வரையிலும்.
புரட்சிக்கவிஞர் அவர்கள் சொல்லும்போது, ‘‘இந்தப் பொடிப் பெண்ணை அன்னை என்று சொல்லாமல், வேறு என்னவென்று சொல்வது?’’ என்று கேட்கிறார்.
இதிலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அன்னை என்று நாம் ஒருவரை அழைக்கும்போது, அவருக்கு வயதாகிவிட்டதா? நமக்கு வயது அதிகமா? என்றெல்லாம் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.
புரட்சிக்கவிஞருக்கு வயது அதிகம். ஆனால், அன்னையாரைப் பார்த்து, ‘‘பொடிப் பெண்ணாக இருந்தாலும், தொண்டு செய்வதில் அவர் அன்னை’’ என்றார்.
அன்னையினுடைய தன்மை என்ன?
அன்னையாக இருக்கக்கூடிய தகுதி என்ன? என்பதற்கு ஒரு புதுப் பொருளைத் தந்தது புரட்சிக்கவி ஞரின் அருமையான விளக்கமாகும்.
தன்னை வென்றார் முதலில்; பிறகு எதிர்த்தவர்களையெல்லாம் வென்றார்!
அதற்குரியவராக தன்னை ஆக்கிக் கொண்டார். அதுபோலவே, தன்னை எதிர்த்தவர்களையெல்லாம் அவர் வென்றார். தன்னை வென்றார் முதலில்; பிறகு எதிர்த்தவர்களையெல்லாம் வென்றார் அம்மா அவர்கள்.
ஒரு பெண்ணுடைய எல்லா தியாகங்களையும் எதிர்பார்க்கலாம். தன்னுடைய வளமையைக்கூட அவர் விட்டுக் கொடுக்கலாம். ஆனால், இளமையை அன்னையார் தியாகம் செய்யக்கூடிய அளவிற்கு வந்தார் என்றால், அதைப்பற்றியே கவலைப்படாத வாழ்க்கையை வாழ்ந்தார் என்றால், இது அதைவிடப் பெரிது.
தியாகங்களிலேயே உச்சக்கட்ட தியாகம், மற்ற எவருக்கும், ஒப்பாரும், மிக்காரும் இல்லாத ஒரு தியாகம் – தன்னலமறுப்பு.
அதை அவர்கள் கொஞ்சம்கூட கவலைப்படாமல், அதையே செய்தார். அதனால், கொள்கைப் பார்வை என்பதுதான் அன்னையாரின் ஒரே இலக்கு.
அந்தப் பக்கம், இந்தப் பக்கம் அவர் திரும்பவில்லை. தன்னைப் புகழ்கிறவர்கள் யார்? தாக்குகிறவர்கள் யார்? என்று அவர் பார்க்கவில்லை.
அன்னையாரின் பல பரிமாணங்கள்!
வீட்டிற்குள் போகும்போது, ஒரு சமையற்காரியாக இருந்தார். தந்தை பெரியாரைக் குளிப்பாட்டும்போது அல்லது அவருடைய துணியைத் துவைக்கும்போது ஒரு சலவையாளராக இருந்தார். அவரைக் கண்டிக்கின்ற நேரத்தில், ஒரு மருத்துவராக இருந்தார். புத்தகங்களை எடுத்துக் கொடுப்பதில், பிரச்சாரத்திற்கு மிகப்பெரிய துணையாக நின்றார்.
அதனால்தான், அய்யா அவர்களுக்கு, அன்னையாரின் மேல் நம்பிக்கை வந்தது.
அன்னையார் பெயரில் உள்ள வங்கிக் கணக்கின் காசோலையில் கையெழுத்து வாங்கிக் கொண்டு வா என்று சொல்வார். அம்மா அவர்கள் எதற்காக? ஏன் கையெழுத்து? என்று ஒரு நாள்கூட கேட்டது கிடையாது. அய்யா கேட்டிருக்கிறார், அவ்வளவுதான்.
இப்படி முழுக்க முழுக்க, ஓர் அடிமையிடம்கூட காண முடியாத அளவிற்குப் பாசத்தோடும், கடமை உணர்வோடும் அன்னையார் இருந்தார். வேறு எங்காவது இருக்கிறது என்று இதுபோன்று ஓர் உதாரணத்தை விரலை நீட்டிக் காட்ட முடியுமா? என்பதை எண்ணிப் பாருங்கள்.
இராஜகோபாலாச்சாரியாருடைய கணக்குத் தப்பிப் போனது!
தன்னை எதிர்த்தவர்களையெல்லாம், தப்புக் கணக்குப் போட்டவர்களையெல்லாம் அவர் ஏமாற்றினார். அதில் முதல் ஏமாற்றத்திற்கு ஆளானாவர், அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த பெருமதிப்பிற்குரிய இராஜகோபாலாச்சாரியார் அவர்கள்தான்.
அய்யா – அம்மா திருமணத்திற்கு முன், இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், ‘‘அந்தப் பெண் எப்படி இருப்பார்? நீங்கள் நினைப்பதை செயல்படுத்துவாரா? அதற்கு உத்தரவாதம் கிடையாதே! ஆகவே, என்னைப் பொறுத்தவரையில், இந்த முடிவை தவிர்ப்பது என்பது நல்லது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
உடம்பெல்லாம் மூளை – சிந்திப்பதில் மிகப்பெரிய ராஜதந்திரி என்று சொல்லக்கூடிய இராஜகோபாலாச்சாரியாருடைய கணக்குத் தப்பிப் போனது; பெரியாருடைய கணக்கு சிறந்தது என்பதே உண்மையானது.
பிறகு, ஆச்சாரியாரே தான் நினைத்தது தவறு என்று உணர்ந்து, அன்னையாரை வாழ்த்தினார்.
இப்படி எத்தனையோ நிகழ்வுகளை அன்னை யாரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
மிகப்பெரிய அளவிற்குத் தன்னை வென்றார்; தரணியை வென்றார்; தாக்கியவர்களையெல்லாம் வென்றார். அவரைப் பாராட்டியவர்களைப்பற்றி கவலைப்பட்டதில்லை. எந்தப் பொறுப்பை எடுத்தாலும், அந்தப் பொறுப்பை மிகச் சிறப்பாக செய்தார்.
அன்னையாருடைய போர்க் குணத்தைப்பற்றித்தான் இந்தக் கருத்தரங்கம் என்றாலும், நான் பொதுவாக அன்னையாரைப்பற்றி இன்றைய இளைய தலை முறையினருக்குத் தெரியவேண்டும் என்பதற்காகவே சிலவற்றை சொன்னேன்.
அன்னையாருடைய வாழ்க்கை காலத்தை வென்றது!
ஒருவரை வரலாற்றில் நாம் எடை போடும்போது, அவரை இன்றைய வெளிச்சங்களை வைத்துக் கொண்டு எடை போடக்கூடாது. இன்றைய சூழ்நிலையில், அவருக்கு இருக்கின்ற செல்வாக்கு என்னவென்று எடை போட்டால், அது காலத்தை வெல்ல முடியாத ஒன்றாகிவிடும்.
ஆனால், அன்னையாருடைய வாழ்க்கை என்பது காலத்தை வென்றதாகும். இன்னுங்கேட்டால், நாள் ஆக ஆக, வரலாற்றில் தேடிப் பார்க்கப் பார்க்க கிடைக்க முடியாத ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு அன்னையார் அவர்கள். மானுட நேயத்திலும் சரி, கடமையாற்றுவதிலும் சரி.
ஒருவர், அவர் கொள்கையை ஏற்கலாம், ஏற்காமல் போகலாம். ஆனால், அவருடைய தன்னல மறுப்பை மறுக்க முடியுமா? என்று தாய்மார்கள், பொதுப் பெண்கள் சிந்திக்கவேண்டும்.
பொதுவாழ்க்கைக்கு வரும்போது, உங்களுக்கு அவமானமா? அவதூறா? அன்னை மணியம்மை யாருடைய வாழ்க்கையைப் பாருங்கள்.
நீங்கள் எளிமையாக இருக்கவேண்டுமா? இதோ அவருடைய படத்தைப் பாருங்கள்.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான, ஒரு சிறப்பான அந்த சூழ்நிலையை உறுதியாக நீங்கள் அதனிடமிருந்து எடுத்துக் கொள்ளலாம்.
அன்னையாருடைய போர்க்குணத்தை நேரில் கண்டவன் நான்!
எத்தனையோ செய்திகள் உண்டு. ஒன்றே ஒன்றை நான் சொல்கிறேன். அன்னையாருடைய போர்க்குணத்தை நேரில் கண்டவன் நான்.
அன்னையாருடைய அன்பிற்கும், பாசத்திற்கும் ஆளாகிய ஒருவன் நான். தந்தை பெரியார் அவர்கள், என்னிடத்திலே ஒப்படைத்த பணிகளில் ஒன்று.
நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு அவர் சிறை செல்கின்ற நேரத்தில், சட்டக் கல்லூரியினுடைய முதலாமாண்டு மாணவன் நான். ‘‘அம்மாவோடு இரு’’ என்று ஆணையிட்டார் தந்தை பெரியார் அவர்கள்.
அதற்காக நான் சட்டக்கல்லூரியின் வகுப்புகளில் பயில்வதற்கு வாய்ப்பில்லாமல் போனது. என்னுடைய வாழ்நாளில் நான் கண்ட முதல் தோல்வி, அந்தத் தேர்வில்தான். ஏனென்றால், தேர்வுக்கு முன் 15 நாள்களுக்கு முன்புதான் நான் படித்து தேர்வு எழுதினேன். ஆனாலும், அந்தத் தோல்வி எனக்கு மிகப்பெரிய அளவிற்கு வரவேற்கக்கூடிய பக்குவத்தைத் தந்தது.
பல தலைவர்களை அருகில் இருந்து பார்க்கும்போது, நாம் கொஞ்சம் விலகிப் போகவேண்டும் என்கிற எண்ணம் வரும். ஆனால், அன்னை மணியம்மையார் அவர்களை நெருங்கிப் பார்த்த நேரத்தில்தான், அன்னையாருடைய தொண்டறம், துணிவு, போர்க்குணத்தை நேரில் பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
திருச்சியில், பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரைப் புதைத்த நேரத்தில், அதற்காகப் போராடுகிறார்; சென்னைக்கு வருகிறார்; தலைவர்களையெல்லாம் சந்திக்கின்றார். நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள், வேகமாகச் செல்லக்கூடிய தன்னுடைய பிளைன்மவுத் காரைத் தருகிறார்.
எங்களுடைய தோழர்கள் செய்த தியாகம் என்ன சாதாரணமானதா?
காமராஜரை நேரில் சந்தித்தார்.‘‘எங்களுடைய தோழர்கள் செய்த தியாகம் என்ன சாதாரணமானதா? உங்கள் ஆட்சியில் அவர்களைப் புதைக்கக்கூட எங்களுக்கு உரிமை இல்லையா?” என்று கண்ணீர் விடாத குறையாகச் சொன்ன நேரத்தில், காமராஜர் அவர்கள், ‘‘அம்மா, அம்மா, நான் உடனே அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்கிறேன். நீங்கள் பதறாதீர்கள்’’ என்று சொன்ன காட்சி இருக்கிறதே, அன்னையாருடைய போர்க்குணம் எப்படி? எந்த நேரத்தில்? எந்த அளவிற்கு வெளிப்படும் என்பதை அப்போதுதான் கண்டேன்.
‘‘அப்படியே உட்காருங்கள்;
யாரும் நகரக்கூடாது!’’
அதற்குரிய ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் திருச்சியில் செய்தனர். குறிப்பிட்ட பாதையில்தான் ஊர்வலம் செல்லவேண்டும் என்று அந்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சோலை அய்.பி.எஸ். அவர்கள் சொன்ன நேரத்தில், அதைக் கண்டித்து அன்னையார் அவர்கள், பல்லாயிரக்கணக்கில் உணர்ச்சிப்பூர்வமாகத் திரண்டிருந்த மக்களைப் பார்த்து, ‘‘அப்படியே உட்காருங்கள்; யாரும் நகரக்கூடாது’’ என்று சொன்னார்.
அந்த மக்களைக் கட்டுப்படுத்தியது இருக்கிறதே, என்ன தலைமை? என்ன நேர்த்தி? என்று அனைவரும் வியந்தோம். அன்னையாரின் அந்தப் போர்க்குணம் எப்போது வெளியாகும் என்று தெரியாது.
இவருக்கா இந்தப் போர்க்குணம்? என்று நாங்கள் எல்லாம் வியந்தோம்.
இவரா இப்படி சிங்க மென சீறுகிறார்; புலியென பாய்கிறார் என்று ஆச்சரி யப்பட்டோம்.
இதேபோன்று இன்னொரு காட்சி, ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற திருவையாறைச் சேர்ந்த மஜித் என்ற இளைஞன் சிறைச்சாலையிலேயே மறைந்துவிட்டார். அவரது உடலை அன்னை மணியம்மையார் தலைமையில் ஊர்வலமாக எடுத்து வந்தபோது, அவர்களுடைய மத முறைப்படிதான் அடக்கம் செய்யவேண்டும் என்று அவரது தந்தை மற்றும் உறவினர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து மோதல் வெடித்தது.
தஞ்சாவூர் மாவட்டம் பெரியார் இல்லம் எதிரே, மாவட்ட ஆட்சியர் வந்து, இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியபோது, மறைந்த மஜித் அவர்களின் தாயார், ‘‘எனது மகன் திராவிடர் கழகத்தில் சேர்ந்துவிட்டார். எனவே, திராவிடர் கழகத்தின் முறைப்படியே அடக்கம் செய்யவேண்டும்’’ எனக் கூறியதைக் கேட்டு, அதன்படியே செய்யப்பட்டது.
இதுபோன்று எத்தனையோ இடங்களில் அவருடைய போர்க்குணத்தைக் கண்டிருக்கின்றேன்.
அன்னை மணியம்மையாருடைய போர்க்குணத்தை அகில இந்தியாவும் அறிந்தது!
இராவண லீலா நிகழ்ச்சியின்மூலமாக, அன்னை மணியம்மையாருடைய போர்க்குணத்தை அகில இந்தியாவும் அறிந்தது.
அந்தப் போர்க்குணம் என்பது முரட்டுத்தன மான சொற்களால்தான் இருக்கும் என்பதில்லை. மென்மையான சொற்களால்கூட அந்தப் போர்க்குணத்தை, பிடிவாதம்மூலமாக, உறுதி யின்மூலமாக அவர்கள் வெளிப்படுத்த முடியும் என்பதை முதலமைச்சர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் நிரூபித்தார்.
முதலமைச்சர் கலைஞரின்
வேண்டுகோள்!
அன்னையார் அவர்களை நேரில் சந்தித்து, ‘‘இராவண லீலா நிகழ்ச்சியை தள்ளி வைக்க முடியுமா?’’ என்று கேட்டு வருமாறு முதலமைச்சர் கலைஞர் அவர்கள், சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த ஷெனாய் அவர்களையும், துணை ஆணையர் துரை அவர்களையும் அனுப்பினார்.
கொள்கைப்பூர்வமானப் பிரச்சினையில் எங்களால் சமரசம் செய்துகொள்ள முடியாது!
அவர்களும் ஒரு மணிநேரம் அன்னையார் அவர்களைச் சந்தித்து விவாதித்தனர். பிறகு, அம்மா அவர்கள், ‘‘தோழர்கள், அதற்குரிய ஏற்பாடு களையெல்லாம் செய்துவிட்டார்கள். இனிமேல் அதனை தள்ளி வைக்க வாய்ப்பில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன் என்று எண்ணாதீர்கள். இது கொள்கைப்பூர்வமானப் பிரச்சினை அதில் எங்களால் சமரசம் செய்துகொள்ள முடியாது. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கலாமோ, அதனை நீங்கள் மேற்கொள்ளுங்கள். அதற்கு நாங்கள் தயாராகத்தான் இருக்கின்றோம். உங்களிடமிருந்து எந்த சலுகையையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை’’ என்று மிக மென்மையாக சொன்னார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அப்போது அவ்வாறு சொன்னார், நானும் அருகில் இருந்தேன்.
‘‘அம்மா, தந்தை பெரியாராக இருந்தால், இந்த நேரம் நாங்கள் சொன்ன கோரிக்கையை ஏற்றுக்கொண்டி ருப்பார். அதைப்பற்றியும் நீங்கள் கொஞ்சம் யோசி யுங்கள்!’’ என்றார்.
நான் என்னுடைய கடமையைச் செய்கிறேன்; நீங்கள் உங்களுடைய கடமையைச் செய்யுங்கள்!
உடனே அம்மா அவர்கள் அதற்குப் பதில் சொன்னார், ‘‘ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான் அய்யா. நான் பெரியார் அல்லவே! பெரியாராக இருந்தால், எந்த விளக்கத்தைச் சொன்னாலும் தோழர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், நான் பெரியாராக இருந்து சொல்ல முடியாதே? ஆகவேதான், நான் என்னு டைய கடமையைச் செய்கிறேன்; நீங்கள் உங்களுடைய கடமையைச் செய்யுங்கள்’’ என்றார்.
நனிநாகரிகத்தோடு, நயத்தக்க நாகரிகத்தோடு சொல்லி, அவர்களை அனுப்பினார் அன்னையார்.
இந்திய வரலாற்றிலேயே, இராவண லீலா நிகழ்ச்சி தென்னாட்டிற்கு ஒரு பெரிய வரலாற்றைக் கொடுத்தது.
போர்க்குணம் என்பது இருக்கிறதே, அதட்டலிலோ, மிரட்டலிலோ, உத்தரவிலோ அல்ல. உறுதியிலும் அது உள்ளது என்று – போர்க் குணத்திற்கே ஒரு புதிய வடிவம் கொடுத்தார் அன்னையார் அவர்கள்.
அதுபோலவே இன்னொரு நிகழ்வு.
நெருக்கடி காலத்தில், நாங்கள் எல்லாம் மிசா சட்டத்தில் சிறைச்சாலையில் இருக்கிறோம்.
மிசா சட்டத்தில், தேவையில்லாமல் திராவிடர் கழகத் தோழர்களை சிறையில் அடைத்தார்கள்; அடித்தார்கள்.
அன்றைய ஆளுநராக சுகாதியா என்பவர் இருந்தார். உள்துறை அமைச்சராக பிரம்மானந்த ரெட்டி இருந்தார்.
ராஜ்பவனில், ஆளுநரோடும், உள்துறை அமைச்ச ரோடும் அன்னையார் சந்திக்கின்ற நிகழ்விற்கு ஏற்பாடு செய்தார்கள்.
எங்கள் தோழர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?
அப்போது அன்னையார் அவர்கள், ‘‘எங்கள் தோழர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? எதற்காக அவர்களை சிறையில் அடைத்தீர்கள்? இது நியாயம்தானா? அவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும்’’ என்று சொன்னார்.
‘‘சரி, நாங்கள் உங்கள் தோழர்களை விடுதலை செய்துவிடுகிறோம். அதற்காக நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால், தி.மு.க.விடமிருந்து நீங்கள் விலகிக் கொண்டால்போதும்’’ என்று வெளிப்படையாகச் சொன்னார்கள்.
தி.மு.க.வைவிட்டு விலகி வந்தால்தான், எங்கள் தோழர்களை விடுதலை செய்வீர்கள் என்றால்,
அது தேவையில்லை!
அவ்வளவுதான், அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளைப்பற்றி கவ லைப்படாமல், அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து அன்னை மணியம்மையார் எழுந்தாராம், (உடன் சென்ற நண்பர் அந்தக் காட்சிகளை வர்ணித்தார். அப்போது நான் மிசா கைதியாக சிறையில் இருந்தேன்) இரண்டு கைகளைக் கூப்பி கும்பிட்டுவிட்டு, ‘‘அது நடக்காது. தி.மு.க.வோடு, தந்தை பெரியார் அவர்களுடைய காலத்திலிருந்து நாங்கள் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருக்கிறோம். தி.மு.க.வைவிட்டு விலகி வந்தால்தான், எங்கள் தோழர்களை விடுதலை செய்வீர்கள் என்றால், அது தேவையில்லை. சிறைச்சாலையிலேயே அவர்கள் உயிர்விடக்கூட தயாராக இருப்பார்கள்; நாங்கள் வருகிறோம்’’ என்று சொல்லி வெளியே வந்தாராம்.
இது போர்க்குணமா, இல்லையா?
அவர் தனக்காக வாழ்ந்ததில்லை, கொள்கைக் காகத்தான் வாழ்ந்தார்.
அப்படிப்பட்ட அன்னையாருடைய பிறந்த நாளான இன்று, அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.
பாலின வேற்றுமை இல்லாமல் கற்றுக்கொள்ளவேண்டும்!
நாம் மட்டுமல்ல, பொதுவாழ்க்கையில் ஈடுபடு கிறவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். ஆண்களும் கற்றுக்கொள்ள வேண்டும்; பெண்களும் கற்றுக்கொள்ள வேண்டும்; பாலின வேற்றுமை இல்லாமல் கற்றுக்கொள்ளவேண்டும்.
இந்தக் கட்சியா? அந்தக் கட்சியா? என்பதல்ல. பொதுவாழ்க்கையில், கொண்ட கொள்கைக்காக, எந்தவிதமான சர்வபரி தியாகமும் செய்யக்கூடிய அளவிற்கு இருக்கவேண்டும். அதை எவ்வளவு நளினமாகவும், நாகரிகமாகவும் வெளிப்படுத்த முடியும் என்பதை இறுதிவரையில் அன்னையார் தொண்டறத்தால் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
ஆனால், அன்னையார் அவர்கள், ஒன்றே ஒன்றில் தோற்றேன் என்று சொன்னார்கள் அல்லவா!
தோற்றார்களா? என்று ஒரு கேள்வி கேட்டேன்.
தோற்கவில்லை என்பதற்கு உதாரணம் சொல்லி, என்னுரையை முடிக்கின்றேன்.
அது என்னவென்றால், அய்யா அவர்கள் 95 ஆண்டுகாலம் வாழ்ந்தார். அதற்குப் பிறகு அன்னையார் அவர்கள், இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார்.
உடல்நலக் குறைவின் காரணமாக, ஒவ்வொரு நேரமும் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார். அவருடைய உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அப்போது நாங்கள் எல்லாம் உடனடிருந்தோம்.
ஒரு சில சொத்துகளை அய்யா, அன்னையாருக்காக ஒதுக்கியிருந்தார். அந்தச் சொத்துகளைக்கூட, இயக்கத்திற்குக் கொடுக்கவேண்டும் என்று சொல்லி, அவசர அவசரமாக அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்.
ஏற்கெனவே இருந்த பெரியார் சுயமரியாதைப் பிரச்சார அறக்கட்டளையை வருமான வரித் துறையினர் ஒரு சிக்கலில் வைத்திருந்தார்கள்.
ஆகவே, புதிதாக ஒன்றைத் தொடங்கவேண்டும் என்ற முடிவெடுத்து, மருத்துவமனையிலேயே உயில் எழுதி விட்டு, அதை இவர்கள் நிறைவேற்றம் செய்ய வேண்டும் என்கிற பொறுப்பை ஒப்படைத்தார்.
நினைத்தது நடப்பதற்கு எந்த விலையையும் கொடுக்கலாம் என்பதுதான் போர்க்குணம்!
ஆனால், அதற்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வந்து, அதை அவரே நிறைவேற்றினார்.
ஆகவே, போர்க்குணம் என்பது, நினைத்தது நடப்ப தற்கு எந்த விலையையும் கொடுக்கலாம் என்பதுதான்.
போர்க்குணம் என்றால், கத்தியை எடுத்து வன்முறை யில் ஈடுபடவேண்டும் என்பதல்ல.
மிகப்பெரிய அளவிற்குத் துணிவோடு இருக்க வேண்டும் என்பதுதான்.
ஆகவே, அன்னை மணியம்மையார் என்று சொன்னால், அவருடைய உணர்வுகள், அவருடைய வெற்றிகள் நமக்கு ஆயுதங்களானவை!
அவருடைய வெற்றிகள் நமக்குப் பாடங்கள்!
அவருடைய நிகழ்வுகள் என்பது வெறும் நினைவுகள் அல்ல; நிகழ்வுகள் என்பது நம்மையெல்லாம் நெஞ்சை நிமிர்த்தச் செய்யக்கூடிய ஒன்று.
பொதுவாழ்க்கை, பொதுத் தொண்டறம் என்பதற்கு அன்னை மணியம்மையாரைவிட எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது.
அன்னை மணியம்மையார் சிறந்த புத்தகம் – திறந்த புத்தகம் – உயர்ந்த பாடங்கள்!
எனவே, இந்தப் பாடத்தைப் படியுங்கள்!
அவர் சிறந்த புத்தகம்!
அவர் திறந்த புத்தகம்!
உயர்ந்த பாடங்கள்!
எனவே, உயர்ந்த பாடங்களை நாம் இன்றைக்கு நினைவில் வைத்துப் பெருமைப்படுகின்றோம். அந்தப் பெருமை நமக்காக மட்டுமல்ல, இனி வரக்கூடிய தலைமுறையினரிடமும் அதைக் கொண்டு போகும்போதுதான், இந்தக் கொள்கை ஆயிரங்காலத்துப் பயிர் என்பது உண்மையாகும். அதன் இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துவிட முடியாது!
‘‘திராவிடம் வெல்லும் –
அதை வரலாறு சொல்லும்!’’
‘‘திராவிடம் வெல்லும் – அதை வரலாறு சொல்லும்’’ என்ற அளவிலே, அந்த வரலாற்றுக்குரிய அன்னையார் அவர்கள், தந்தை பெரியார் செய்தவற்றையெல்லாம், எல்லா நிலைகளிலும் தொடர்ந்து செய்தார்.
அதேநேரத்தில், இவரிடம் கொடுத்தால், எல்லா வற்றையும் விழுங்கிவிடுவார் என்று சொன்ன எதிரி கள்கூட, இன்றைக்கு உணர்கிறார்கள்.
அன்னையார் அவர்கள் அதைப் பாதுகாத்தார் என்பது மட்டுமல்ல, தன்னுடைய சொத்துகளையும் ஒப்படைத்தார் என்று ஒரு புதிய அத்தியாயத்தை எழுதினார்.
அன்னை மணியம்மையாரின் தொண்டறம் வரலாறு இருக்கின்ற வரையில் வாழ்ந்து கொண்டிருக்கும்!
எனவே, அன்னையாரைத் தூற்றியவர்கள் போற்று கிறார்கள்; போற்றினாலும், தூற்றினாலும் மணியம்மையார் என்ற தொண்டறம் தொடர்ந்துகொண்டே இருக்கும்; வாழ்ந்து கொண்டே இருக்கும்; வரலாறு இருக்கின்ற வரையில் வாழ்ந்து கொண்டிருக்கும்.
வாழ்க மணியம்மையார்!
வருக, அவருடைய தொண்டற உணர்ச்சிகளும், வெற்றிகளும்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.