சிவனுக்கு டிரோன் மூலம் பாலாபிஷேகமாம்!
அண்ணா சொல்வதைக் கேளுங்கள்!
‘‘விஞ்ஞானம் இந்த நாட்டில் மதிப்பற்றிருப்பதுபோல் வேறு எந்த நாட்டிலும் மதிப்பற்றிருக்காது.
இதோ நான் பேசுகிறேன். என் முன் ஒலிபெருக்கி இருக்கிறது. அது நான் பேசுவதைப் பெரிதாக்கி நாலாபக்கத்திலும் உள்ள பலரும் கேட்கும்படி செய்கிறது. அது எப்படி வேலை செய்கிறது என்று கூறிப்பாருங்கள்.
மேட்டூர் அணையை எப்படி கட்டி யிருக்கிறார்கள் என்று கூறிப்பாருங்கள், கப்பல் கனமாயிருக்கும்; அது எப்படி கடலில் மிதக்கிறது என்று கூறிப்பாருங்கள் அல்லது எந்த ஒரு விஞ்ஞான சாதனத்தைப் பற்றியாவது கூறிப்பாருங்கள் ஆச்சர்யமாகக் கேட்கமாட்டார்கள்.
அவைகளில் அதிசயமிருப்பதாகவும் அவர்களுக்குத் தோன்றாது. அப்படி கொஞ்ச நேரம் கேட்டாலும், அதை மறுகணமே மறந்துவிடுவார்கள்.
ரேடியோவைப்பற்றிக் கூறுங்கள் . . . டெலிவிஷனைப் பற்றிக் கூறுங்கள் ஏதோ கேட்பார்களே ஒழிய, அதிலே ஆச்சர்யம் இருப்பதாக நினைக்கமாட்டார்கள். கூறும்போது அப்படியா என்று சொல்வார்கள். அவ்வளவுதான்.
இவ்வளவையும் கேட்டுவிட்டு திடீரென்று சொல்வார்கள். நீங்கள் இதிலெல்லாம் ஆச்சர்யம் இருப்பதாக சொல்கிறீர்கள், என்ன ஆச்சர்யம் இருக்கிறது?
அங்கே ஒரு வேப்ப மரங்க, அதன் மகிமை காயெல்லாம் கசக்காமல், தித்திக்குதுங்க. ஜனங்கள் கூட்டம் கூட்டமாகப் போறாங்க என்று கூறுவார்.
விஞ்ஞானத்திடம் இப்படி ஏன் அவர்களுக்கு மதிப்பிருப்பதில்லை? காரணம் எந்த விஞ்ஞான சாதனத்தையும் இவர்கள் சிரமப்பட்டுக் கண்டுபிடிக்கவில்லை.’’
(பொழிவு: நிலையும் நினைப்பும், அறிஞர் அண்ணா)
வீணாய் போனது 21 லிட்டர் பால் மட்டுமல்ல, அந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் தான்!
– உதயமாறன்