கல்லக்குடி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பிள்ளையார் கோவில் கட்டுவதைத்
தடைசெய்யக் கோரி வட்டாட்சியரிடம் மனு
திருச்சி, மார்ச் 17 கல்லக்குடி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பிள்ளையார் கோவில் கட்டுவதை தடை செய்யக் கோரி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது.
அனைத்து சமூக மக்களும் ஜாதி, மத பேதமின்றி வாழ்ந்திட கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து சமூகத்தை சார்ந்த மக்களும் அங்கு வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 13.3.2025 அன்று பெருவளப்பூர் கழகத் தலைவர் சித்தார்த்தன் லால்குடி வட்டாட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கல்லக்குடி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சிலர் பிள்ளையார் கோவில் கட்டிக் கொண்டு வருகின்றனர். ஜாதி, மத பேதம் இல்லாமல் அனைவரும் சமமாக வாழ்ந்திட அமைக்கப்பட்ட சமத்துவ புரத்தில் பிள்ளையார் கோவில் கட்டுவது மதரீதியான பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால் வட்டாட்சியர் நேரில் பார்வையிட்டு பிள்ளையார் கோவில் கட்டுவதை தடை செய்ய வேண்டுமென அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின் போது புள்ளம்பாடி ஒன்றிய தலைவர் மு.திருநாவுக்கரசு, நகர செயலாளர் சி.பொற்செழியன், காட்டூர் கிளைக்கழக செயலாளர் மணிவாசகம் ஆகியோர் உடனிருந்தனர்.