ராகுல் காந்தி பதவி நீக்கம் மாநில தலைநகரங்களில் 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

2 Min Read

புதுடில்லி, ஜூலை 10 – ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் 12ஆம் தேதி மவுனப் போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

 மோடி குடும்பப் பெயர் குறித்து அவதூறாக பேசியதில், காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து அவரது மக்களவை உறுப்பினர் பதவி மக்களவைச் செயலகத்தால் பறிக்கப்பட்டது. மேல் முறையீடு செய்த ராகுல் காந்திக்கு பின்னடைவு தான் மிஞ்சியது, சூரத் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றமும்  சமீபத்தில் உறுதி செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியை தகுதி நீக்குவதற்கு ஒன்றிய பாஜக அரசு மோசமான தந்திரத்தை கையாண்டுள்ளதாக குற்றம் சாட்டியது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று (9.7.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ”மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக ராகுல் காந்தி வலுவாக போராடி வருகிறார். ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் மோடிக்கும்-அதானிக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்தி இருந்தார்”. அதேபோல், “இதன் விளைவாக ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கு பாஜக மோசமான அரசியல் சூழ்ச்சியை கையாண்டுள்ளது. இதைப்பார்த்து அச்சப்படாத ராகுல் காந்தி, ஒன்றிய அரசை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், விளிம்புநிலை மக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியே மக்களின் குரலாகவும், மக்கள் நம்பும் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடும் இந்த தவறான மற்றும் பழிவாங்கும் தகுதி நீக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.  எனவே எந்த சார்பும் இல்லாமல், நீதி மற்றும் சுதந்திரத்தின் சக்திகளுடன் இருக்குமாறும், ஜனநாயகத்தின் இந்த முடக்குதலை எதிர்த்து நிற்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களையும் கேட்டுக்கொள்கிறோம்”. 

அதேபோல், “ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வருகிற 12ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 முதல் மாலை 5 மணி வரை, அனைத்து மாநில தலைநகரிலும் உள்ள காந்தியார் சிலைகள் அருகே காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளும் ‘மவுன சத்தியாகிரகம்’ நடத்தவுள்ளன. நமக்கோ நமது தலைவர்களுக்கோ அல்லது நமது கட்சிக்கோ எதிராக பாஜக-ஆர்.எஸ்.எஸ். என்ன தந்திரங்களை கையாண்டாலும்,  ஒவ்வொரு இந்தியனின் உண்மையான நலனுக்காக உரத்த குரலில் பேசுவோம் என்று நாங்கள் நம்புகிறோம். இவர்களைப் போன்ற பாசிச சக்திகள் நீண்ட காலம் நீடிக்க இந்தியா அனுமதிக்காது”  இவ்வாறு அந்த அறிக்கையில் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *